ராணுவ வீரர்கள் கடத்திக் கொலை.. சிரியா - லெபனான் எல்லையில் வெடித்த மோதல் - மக்கள் மீது ஷெல் தாக்குதல்
- ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
- மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.
எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.
எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.
இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.