
பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.. விண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா?
- சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
- சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.
விண்வெளியில் 9 மாதங்கள் எப்படி சுனிதா வில்லியம்ஸ் உயிர் பிழைத்தார். எவ்வாறு அவர் உணவு உட்கொண்டார் என்று மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், விண்வெளியில் பெண்கள் தங்கியிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா? அப்படி மாதவிடாய் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் விண்வெளியில் மிதக்குமா? என்று பெண்களுக்கு கேள்விகள் எழலாம்.
விண்வெளியில் தங்கியிருக்கும் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். மாதவிடாய் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்து கொள்ளலாம். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.
அதே சமயம் விண்வெளியில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்று நினைப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். பூமியில் நிகழ்வது போலவே விண்வெளியில் இயல்பாகவே மாதவிடாய் ஏற்படும். அந்த சமயத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயனபடுத்திக்கொள்ளலாம்.