பிளேனில் செல்லப்பிராணியை அனுமதிக்காததால் விமான நிலைய கழிவறையில் நாயை மூழ்கடித்து கொன்ற பெண்மணி
- ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை
- கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
அமெரிக்காவில் 57 வயது பெண் ஒருவர் தனது நாயை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காததால், அதை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தி இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அங்கு துப்புரவு ஊழியர்கள் பணியின்போது கழிப்பறையில் ஒரு இறந்த நாயினைக் கண்டனர்.
விசாரணையில், அலிசன் அகதா லாரன்ஸ் என்ற அந்த 57 வயது பெண் தனது வளர்ப்பு நாயுடன் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது நாயை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது வாரண்டைப் பிறப்பித்தனர். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18 அன்று, விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் 5,000 டாலர் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கண்டனங்களை குவித்து வருகிறது.