பிரேசிலில் நண்பர்களுக்கு "டாட்டா" காட்டியபோது பஸ்சில் சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்
- மருத்துவ குழுவினர் சிறுமியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேசிலியா:
பிரேசிலின் ரியே-டி-ஜெனிரோ அருகில் உள்ள நோவா பிரிபர்கோ பகுதியில் பெர்னாண்டோ பேச்சிகோ பெராஸ் (13) என்ற சிறுமி பள்ளியில் இருந்து நண்பர்களுடன் பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுமியின் நண்பர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இறங்கி உள்ளனர். அவர்கள் இறங்கியதும் பஸ் கிளம்பியது. அவர்களுக்கு கைகாட்டுவதற்காக பஸ்சின் ஜன்னல் கம்பி வழியே தலையை வெளியே நீட்டி சிறுமி எட்டி பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில் துரதிருஷ்டவசமாக பஸ்சின் எதிரே வந்த வாகனம் மீது மோதா மல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது சிறுமியின் தலை ஒரு கான்கிரீட் மின் கம்பத்தில் மோதியது. இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிரைவரிடம் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி ஆஸ்பத்திரிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், நிறுவனத்தின் நிர்வாக குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த மருத்துவ குழுவினர் சிறுமியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி இறந்த செய்தி அறிந்து உறவினர்களும், நண்பர்களும் சோகத்தில் மூழ்கினர். எதிர் பாராத இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக பஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.