செய்திகள்
18-ம் படி வழியாக சுவாமி ஐயப்பன் எழுந்தருளிய காட்சி.

சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு பம்பை நதியில் இன்று ஆராட்டு

Published On 2017-07-07 11:52 IST   |   Update On 2017-07-07 11:52:00 IST
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று காலை 11 மணிக்கு பம்பை நதியில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆராட்டுத் திருவிழாவும் ஒன்று. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இந்த ஆண்டு புதிய தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு கோலாகலமாக நடந்து வருகிறது.

விழாவையொட்டி நேற்று இரவு சபரிமலையில் பள்ளி வேட்டை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி ஐயப்பன் யானை மீது எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.



இன்று ஆராட்டுத் திருவிழவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசே‌ஷ ஹோமம், நெய் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. 9 மணிக்கு 18-ம் படி வழியாக சுவாமி ஐயப்பன் எழுந்தருளி ஆராட்டு நடைபெறும் பம்பை நதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நிகழ்ச்சி நடந்தது.

காலை 11 மணிக்கு பம்பை நதியில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் சுவாமி ஐயப்பனை சரண கோ‌ஷம் முழங்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து 12 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் சுவாமி ஐயப்பன் எழுந்தருளல் நடந்தது. மாலையில் கணபதி கோவிலில் இருந்து சுவாமி ஐயப்பன் பவனியாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்படுகிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடைசாத்தப்படும்.

Similar News