ஒரே ரேசன் கார்டில் உள்ள அனைத்து இணைப்புக்கும் கியாஸ் மானியம்
- ஒம்சக்தி சேகர் வலியுறுத்தல்
- 50 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு மேல் இது போன்று ஒரே குடும்ப அட்டையில் கணவன், மனைவி பெயரில் 2 இணைப்புகள் வைத்துள்ளளர்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக சிலிண்டர் மானியம் சிகப்பு அட்டைக்கு ரூ.300 மற்றும் மஞ்சள் அட்டைக்கு ரூ.150 என்று புதுவை முதல்-அமைச்சர் அறிவித்த திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. மானியம் பெற நுகர்வோரின் கியாஸ் இணைப்பு தொடர்பான தகவல்களை இணையதள வாயிலாகவும் சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனங்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ள புதுவை அரசு அறிவித்து உள்ளது.
புதுவை மாநிலத்தில் ஆரம்ப காலத்தில் கியாஸ் இணைப்பு வழங்கும்போது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு இணைப்பு என்று குடும்ப தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்பு எரிவாயு இணைப்பு வழங்குவது எளிமையாகி அனை வருக்கும் சிலிண்டர் கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு இணைப்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் மனைவி பெயரில் மற்றொரு இணைப்பை பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் 50 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு மேல் இது போன்று ஒரே குடும்ப அட்டையில் கணவன், மனைவி பெயரில் 2 இணைப்புகள் வைத்துள்ளளர்.
இப்போது அரசின் மானியம் பெற பதிய முற்படும் போது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பெயர் மட்டுமே பதிய முடியும் என்ற நிலை உள்ளது.இதனால் கியாஸ் மானிய திட்டம் முழுமை அடையாமல் போக கூடிய நிலை உள்ளது.
எனவே ஒரே குடும்ப அட்டையில் 2 இணைப்புகள் வெவ்வேறு பெயர்களில் இருந்தால் இருவருக்கும் மானியம் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். இது போன்ற சிலிண்டர் மானியம் வழங்குவதில் உள்ள குறைகளை களைந்து திட்டத்தை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.