புதுச்சேரி

புதுச்சேரியில் பெண் வாக்காளர்கள் அதிக வாக்குப்பதிவு: அரசியல் கட்சிகள் கலக்கம்

Published On 2024-04-20 06:12 GMT   |   Update On 2024-04-20 06:12 GMT
  • குறைந்த வாக்கு சதவீதம் பதிவான மாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவில் வழக்கம் போல் அதிக அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.

இது புதிதல்ல என்றாலும் பெண்களை மையமாக வைத்து பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. இந்தியா கூட்டணியும் பிரசாரம் செய்ததால் இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு யாருக்கு? என கேள்வி எழுந்துள்ளது.

புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தரமான வெள்ளை அரிசி வழங்கப்பட்டதால் பெண்களிடையே அதிக அளவில் வரவேற்பும் இருந்தது.

ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணத்திற்கு பதிலாக மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை பெண்கள் எழுப்பி வருகின்றனர்.

இதனால் ரேஷன் அரிசி மீண்டும் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. ரேஷன் அரிசி விவகாரம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றது.

முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தை தொடங்கியபோது பெண்கள் ரேஷன் கடைகளில் எப்போது இலவச அரிசி வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக பணம் வங்கியில் செலுத்தப்படுவதை ரங்கசாமி சுட்டி காட்டியபோது அதனை தங்கள் கணவர்கள் பறித்து செல்வதால் அரிசிதான் வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை காங்கிரஸ் தனது பிரசாரத்தில் மையமாக பயன்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது பிரசாரத்தில் பல பகுதிகளில் கூடியிருந்த பெண்களிடம் ரேஷன் அரிசி கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதோடு கை சின்னத்திற்கு வாக்களித்தால் ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசி வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதே இதற்கு காரணம் என்றும் வைத்திலிங்கம் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வந்தார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடி இலவச அரிசி வழங்குவதை நிறுத்தியதே காங்கிரஸ் அரசுதான் என்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு தரமான இலவச அரிசியோடு உணவு பொருட்களும் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி உறுதி அளித்தார்.

அதோடு பெண்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல அக்கறையோடு பெண்களுக்கான நலத்திட்டங்களையும் தனது அரசு செய்து வருவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமி திட்டங்களை பட்டியலிட்டார். முதியோர் உதவித்தொகையை கடந்த காங்கிரஸ் அரசு ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை என்றும் தனது அரசு பதவியேற்றவுடன் 500 ரூபாய் உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

இதுமட்டுமல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தையும் புதிதாக தொடங்கி உள்ளதையும் ரங்கசாமி பிரசாரத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவானமாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொகுதிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான வாக்கு வித்தியாசத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இது தேர்தலில் மோதிய பிரதான அரசியல் கூட்டணிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News