புதுவை பா.ஜனதா வேட்பாளர் விரைவில் அறிவிப்பு
- வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிட செய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியான பா.ஜனதா வெற்றிபெற பாடுபடுவோம் என முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிதலைவருமான ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் தெரிவித்தார். இதனால் பாஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியங்களிலும் பிரபலமானவர்களை நிறுத்தினால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். இதை அறிவுறுத்தும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி, பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் தெரிவித்துள்ளார்.
புதுவை தொகுதியில் பாஜனதா சார்பில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், புதுவை சுயேச்சை எம்.எல்.ஏ., நியமன எம்எல்ஏ, புதுவை நிர்வாகி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் அதையே பிரச்சாரமாக செய்வார்கள். இது வெற்றியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வெளியூர் வேட்பாளர்களை பாஜனதா தவிர்க்கும் என தெரிகிறது.
அதேநேரத்தில் அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிடசெய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சித் தலைமையிடம் பலரும் கைகாட்டியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் அவர் உள்ளூர் அரசியலை விட்டு விலக விரும்பவில்லை என தலைமையிடம் கூறியுள்ளார். அவரை போட்டியாக கருதுபவர்கள் உள்ளூர் அரசியலிலிருந்து, மத்திய அரசியலுக்கு அனுப்ப திட்டமிட்டு அவர் பெயரை வேட்பாளராக சிபாரிசு செய்துள்ளனர்.
உளவுத்துறை மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பாஜனதா ஏற்கனவே கள ஆய்வு நடத்தியுள்ளனர். ஆர்எஸ்எஸ் இயக்கமும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் பாஜனதா விவிஐபி வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியாக உள்ளது.
இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயரும் இடம்பெறும் என பாஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.