புதுச்சேரி

புதுச்சேரி அரசு நிர்வாகத்தை அதிகாரிகள் ஆட்டி படைக்கின்றனர்: முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

Published On 2023-12-14 05:16 GMT   |   Update On 2023-12-14 05:16 GMT
  • கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
  • பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம்.

புதுச்சேரி:

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

ஆட்சி தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அரசு விழாக்களில் ஏற்கனவே சில முறை பகிரங்கமாக இதை தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் சட்டசபையிலேயே எச்சரிக்கையும் விடுத்தார்.

சபை நடவடிக்கையில் அனைத்து அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதிகாரிகள் சபை நடவடிக்கையில் பங்கேற்கிறார்களா? என அமைச்சர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.

இந்த நிலை மாற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு என அடிக்கடி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறி வருகிறார். இதனிடையே நேற்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு கோப்புக்கு அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்க கடும் சிரமம் அடைய வேண்டியுள்ளது. இயக்குனர், செயலர், தலைமை செயலர் ஆகியோர் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் தான் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் கோப்புக்கு தற்போதுதான் உயர் அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். இந்த வாரத்தில் அந்த கோப்புக்கு அனுமதி கிடைக்கும். இதன்பின்னர் 10 நாட்களில் லேப்டாப் வழங்கப்படும்.

பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். பட்டப்படிப்புகள் ஏராளமாக உள்ளது.

அதை படித்து நிர்வாக பொறுப்புக்கு வர ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். ஏனென்றால் அவர்கள் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.

இதுவரை புதுவையை சேர்ந்த 5 பேர்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர் என்றார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த ஆதங்கமான பேச்சு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடையே உள்ள பனிப்போரை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News