பாராளுமன்ற தேர்தலில் போட்டியா? ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்- தமிழிசை
- ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
- கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
புதுவையில் உள்ள ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேராசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் இல்லை என பலவித புகார்கள் எழுந்து வருகிறது.
மேலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட் பயன்பாடு குறித்த வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை. இதுகுறித்து மாணவர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையறிந்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் அல்ட்ரா சவுண்ட் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் நான் சிறப்பு நிபுணர்.
எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளேன்.
என் பணி புதுவை மக்கள் மீது அன்பு வைத்து செய்யும் பணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் தற்போது சொல்ல முடியாது. நான் தற்போது கவர்னர். அந்த பணியை செய்து வருகிறேன். நான் போட்டியிடுவதை ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.