Recap 2024

ரீவைண்ட் 2024: இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 வார்த்தைகள்

Published On 2024-12-31 16:15 IST   |   Update On 2024-12-31 16:15:00 IST
  • அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் என்ற வார்த்தை விராட் கோலியால் டிரெண்டானது.
  • ரிஷப் பண்ட் கம்பேக் என்ற வார்த்தையும் டிரெண்டானது.

2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்தும் எதனால் அந்த வார்த்தை டிரெண்டானது குறித்தும் இந்த செய்தியில் காண்போம்.

1. ஜஸ்பிரிட் பும்ரா (jasprit bumrah) 

டி20 உலகக் கோப்பை முதல் பார்டர் கவாஸ்கர் டிராபி வரை பந்து வீச்சில் மிரட்டி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட்டில் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் மட்டும் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக அளவில் பேசப்பட்ட வார்த்தைகளில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார்.

2. ஹர்திக் பாண்ட்யா (hardik pandya)

பாண்ட்யா டிரெண்டாக முக்கிய காரணமாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் மீது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மைதானத்தில் விளையாடும் போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். டாஸ் போட வரும் போது ரோகித் ரோகித் என முழங்கினர். இதற்கு மேலாக மைதானத்திற்குள் ஒரு நாய் வந்தது. உடனே அதை பார்த்து ஹர்திக் ஹர்திக் என கூச்சலிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்கில் டிரெண்டாகினார்.

இதனையடுத்து நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை திசை திருப்பி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் மும்பை மைதானத்திற்கு வந்த போது எந்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷமிட்டார்களோ அவர்களே அவருக்கு எதிராக ஆதரவு தெரிவித்தனர்.

3. டி20 உலகக் கோப்பை (t20 world cup)

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

4. சஞ்சு சாம்சன் (sanju samson)

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ரொம்ப காலமாக தவித்த வீரர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார். தொடர்ந்து 2 சதங்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்கள் விளாசி சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார்.

தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கான நிறந்தரமான இடத்தை அவர் இந்த ஆண்டு தக்க வைத்து கொண்டார்.

5. கவுதம் கம்பீர் (gambhir era)

இந்த ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை இழந்தது. 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்ததால் கவுதம் கம்பீரின் வீரர்கள் தேர்வு அதிகாரத்தை பிசிசிஐ பரித்தது. தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் கவுதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

6. இலங்கை & நியூசிலாந்து ஒயிட்வாஷ் (SL&NZ whitewash)

இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

7. ரிஷப் பண்ட் கம்பேக் (rishabh pant comeback)

2022-ம் ஆண்டு ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதில் விளையாடவில்லை.

அதன் பிறகு பூரண குணமடைந்து டி20 உலகக் கோப்பையில் களமிறங்கினார். இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தை காயம் என கூறி தனது ஐடியா மூலம் சிறிது நேரம் தாமதப்படுத்தினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இதுவும் பார்க்கப்பட்டது.

அதன்பிறகு 2025-ம் ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது. இது ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

8. அஸ் அண்ணா (Ash anna) 

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டியுடன் தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இதனால் அஸ் அண்ணா என்ற வார்த்தை அதிக பேசப்பட்டது. அவர் குறித்த பல முக்கியமான வீடியோக்கள் சிறந்த பந்து வீச்சு பேட்டிங் என அனைத்து டிரெண்டானது.

9. ஓய்வு அறிவிப்பு (retirement)


இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து அதிக பேர் ஓய்வை அறிவித்தனர். இதனால் Retirement என்ற அதிகமாக பேசப்பட்டது. டீன் எல்கர், டேவிட் வார்னர், கிளாசன், நீல் எல்கர், தினேஷ் கார்திக், கேதர் ஜாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன், தவான், டேவிட் மலான், மொயின் அலி, ஷகிப் அல் ஹசன், மேத்வூ வேட், விருத்திமான் சகா, அஸ்வின், சவுத்தி என முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தனர்.

10. அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் (outside the off stump)


outside the off stump என்ற வார்த்தை டிரெண்டாக முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய அணியின் விராட் கோலி. இவர் கடந்த சில போட்டிகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்புக்கு சென்ற பந்தை அடிக்க முயற்சித்து அவுட் ஆகி வந்தார். இதனை பல முன்னாள் வீரர்கள் எடுத்து கூறியும் அதனை கண்டுக்கொள்ளாமல் அந்த ஷாட்டை ஆட முயற்சித்து அவுட் ஆனார்.

குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 இன்னிங்சுகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் பந்தில் தான் விராட் கோலி அவுட் ஆனார்.

Tags:    

Similar News