2024 ஒலிம்பிக் போட்டி: இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்துடன் நாளை மோதல்
- நாளை முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
பாரிஸ்:
ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி நாளை (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 12 நாடுகள் விளையாடுகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
ஏ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், போட்டியை நடத்தும் பிரான்ஸ் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை நாளை எதிர் கொள்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. பாரீஸ் ஒலிம்பிக்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.