பாரிஸ் ஒலிம்பிக் 2024

துப்பாக்கி சுடுதலில் மேலும் பதக்கம் கிடைக்குமா?

Published On 2024-07-29 05:45 GMT   |   Update On 2024-07-29 05:45 GMT
  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
  • துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

பாரீஸ்:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை மனுபாகெர் வெண்கல பதக்கம் வென்றார். அவர் 221.7 புள்ளிகள் பெற்றார்.

வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் மனுபாகெர் புதிய வரலாறு படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), சாய்னா நேவால் (பேட்மின்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), பி.வி.சிந்து (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மீரா பாய்சானு (பளு தூக்குதல்), லவ்லினா (குத்துச் சண்டை) ஆகியோருடன் மனுபாக்கர் இணைந்தார்.

துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் விஜய் குமார் (வெள்ளி), ககன்நரங் (வெண்கலம்) பதக்கம் பெற்றனர். ரியோடி ஜெனீரோ, டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கிடைக்கவில்லை. தற்போது இந்தப் போட்டியில்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியது.


ஒட்டு மொத்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 5-வது பதக்கம் கிடைத்தது.

மனுபாகெரை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் ரமிதா ஜின்டல், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றனர். இதில் ரமிதா 631.5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அடைந்தார். முதல் 8 இடங்கள் வரையே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

இதே போல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். மற்றொரு இந்தியரான சந்தீப்சிங் 629.3 புள்ளிகளு டன் 12-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

ரமிதா மோதும் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. அர்ஜுன் பபுதா விளையாடும் இறுதி சுற்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இருவரும் பதக்கம் பெறுவார்களா? என்று ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்படுகிறது.

இதே போல ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவிலும் பதக்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தருணதீப்ராய், தீரஜ் பொம்ம தேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் பங்கேற்கிறது. தர வரிசையில் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி கால் இறுதி, அரை இறுதியில் வெற்றி பெற்று பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News