என் மலர்
செய்திகள்
திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிரூபர்களிடம் கூறியதாவது:-
ஈரோட்டில் ம.தி.மு.க. மாநில மாநாடு 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொன் விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடந்து வருகிறது. இந்த மாநாடு இயக்கத்தின் உந்துதலாக இருக்கும்.
பாராளுமன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிகச் சிறப்பாக பேசியுள்ளார். இந்திய அரசு எதில் எல்லாம் தோல்வியுற்றுள்ளது, எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பொருளாதார குற்றவாளிகள் எப்படி தப்பிச்சென்றார்கள், பொது மக்கள் எப்படி வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை, கூட்டாட்சி தத்துவம் அழிக்கப்படுகிறது என்பது பற்றி பேசியதோடு, பிரான்சு நாட்டுடன் செய்து கொண்ட விமான படைக்கான விமான ஒப்பந்தத்திலும் கூட திரைமறைவில் பெரும் தவறு நடந்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து மிகச்சிறப்பாக உரையாற்றியிருக்கிறார்.
எண்ணிக்கை அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதை கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து சொல்லுகின்ற விதத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடந்துள்ளது.
இந்த தீர்மானத்தில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சேர்ந்து செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
தமிழகத்தில் பல வருமான வரி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதன் முடிவு என்ன? என்பது எதுவும் தெரியாமல் மூடுமந்திரமாக உள்ளது. இந்த வருமான வரி சோதனை குறித்து மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு மேல் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டக்காரர்களை குறும்படங்கள் மூலம் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.
ஸ்டெர்லைட் நிறுவனம் என் வாதங்களை தடுக்க முயற்சி செய்கிறது. இது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும் என் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் நம் தலையில் கல்லைப் போட்டு கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #ITRaid
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தினம் தினம் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல பேசியிருக்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைவிட இன்று தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை எல்லாம் பட்டியலிடாமல் எதிர்மறை கருத்துகளையே பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்.
கச்சத்தீவு, காவிரி உரிமை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த மு.க.ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர்களின் கூட்டணித் தலைவர் ராகுல்காந்தி கண்டபடி பேசி, கட்டிப்பிடித்தும், கண்ணடித்தும் ஒன்றும் நடக்கவில்லையே. தோல்வியைத் தானே தழுவினோம் என்ற குழப்பத்தில் வெளிவந்திருப்பதே மு.க.ஸ்டாலினின் அறிக்கை.
தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற விடமாட்டோம் என்று சொல்வதற்கான உரிமை தி.மு.க.வுக்கு கிடையாது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 2 இடங்களை பெற்றபோதும், தி.மு.க., காங்கிரசால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத நிலை தான் அவர்களுக்குத் தமிழகத்தில் மீண்டும் தொடரும் என்பதை நேற்றே புரிந்துகொண்ட மு.க.ஸ்டாலின், இன்று விரக்தியில் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கான பதிலே இது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #DMK #MKStalin
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெடுஞ்சாலைகளுக்கான சுங்கவரி வசூலிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்ட நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக லாரி உரிமையாளர்களை மத்திய அரசு இதுவரை பேச்சு நடத்தக் கூட அழைக்காததால், வேலை நிறுத்தம் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு வரப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நடமாட்டமும் தடைபட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 65 லட்சம் லாரிகளும், தமிழ் நாட்டில் 4.50 லட்சம் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருப்பதால் போராட்டம் முழுமையடைந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், ஆடைகள், மோட்டார்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் தேங்கிக்கிடக்கின்றன.
வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு பலநூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயருவதை தடுக்க முடியாது. இப்படியாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தம் நீடிப்பதை விட, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவது தான் சரியானதாகும்.
எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து லாரி உரிமையாளர் சங்கப்பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #LorryStrike
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவாஜியை ராசி இல்லாதவர் என்கிறார்கள். தோற்கிற ஜானகி அம்மாள் கூட்டணியில் ராஜசேகரனும், இளங்கோவனும் தான் சேர்த்து விட்டார்கள். தோல்வி அடைந்தவுடன் சிவாஜி காங்கிரசுக்கு வந்து இருந்தால் உயர்ந்த இடத்துக்கு சென்று இருப்பார்.
இளங்கோவன் திரும்பவும் காங்கிரசுக்கு வந்து மத்திய மந்திரி ஆனார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவில்லையா? காங்கிரஸ் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் சிவாஜி. நிறைய தலைவர்களை உருவாக்கி இருக்கிறார். கட்சி வளர்ச்சிக்காக உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.
கட்சிக்கு தொடர்பில்லாதவர்களும் எனக்கு ஜூனியரான செல்லக்குமார் உள்ளிட்டோரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். திருநாவுக்கரசருக்கு முதல்வராகும் தகுதி இருக்கும் போது, எனக்கும் தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி உள்ளது. விரைவில் மாற்றம் வந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேன்.
திருநாவுக்கரசர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். எனக்கு தலைவர் ராகுல், வழிகாட்டும் தலைவர் சிதம்பரம். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திருநாவுக்கரசர் இன்னும் காங்கிரஸ் கலாச்சாரத்திற்கே வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அந்தச் சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது என்று இதனைக் கொள்ளலாம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #ITRaid
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 சதவீதமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 சதவீதமாக உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மாவட்டத்தில் அளவான குடும்பத்தை வைத்து வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ துறையை பாராட்டி மத்திய அரசே விருது வழங்கி உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரசு பள்ளி கூடங்களில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றி அமைக்கப்படும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நிகழ்ச்சிகளை காண மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு, மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
நாட்டில் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இயக்கத்தினரையும், அரசையும் வலிவோடும், பொலிவோடும் நடத்தினார்.
இப்போது ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார்கள்.
எனவே அ.தி.மு.க.வில் மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக வட்டச் செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அயராது பணியாற்ற வேண்டும்.
இந்த அரசை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி செயல்படுகிறது. அது எடுபடாது.
இந்த அரசின் மீது வீண்பழி போடுவதையே எதிர்க்கட்சிகள் வேலையாக செய்து வருகிறது.
தொழில் செய்பவர்கள் வரி கட்டாவிட்டால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. அதை கூட இந்த அரசு மீது எதிர்க்கட்சிகள் திசை திருப்பப் பார்க்கிறது.
இதனை வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்.
அ.தி.மு.க. எப்போதும் தேர்தல்களுக்கு பயப்படும் இயக்கம் அல்ல. எந்த நேரம் தேர்தல் வந்தாலும் நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
இளைஞர்களின் எதிர் காலம் அ.தி.மு.க.வில் மட்டும் பிரகாசமாக இருக்கும். உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடிவரும்.
எனவே மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் அ.தி.மு.க.வில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். அ.தி.மு.க. ஒரு பாசப்பிணைப்பு கொண்ட கட்சி ஆகும். அ.தி.மு.க. தமிழக மக்களின் உரிமைகளை பேணி பாதுகாக்க தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வவாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், திரவியம், பரவைராஜா, பகுதி செயலாளர்கள் கருப்பசாமி, மாரியப்பன், பூமிபாலகன், நிர்வாகிகள் தமிழ்செல்வன், முத்துராமலிங்கம், புதூர் மோகன், கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், பஜார் துரைப்பாண்டியன், தேவதாஸ், எஸ்.எம்.டி.ரவி, பழனிநத்தம் ராஜாராம், முன்னாள் கவுன்சிலர்கள் லட்சுமி, தாஸ், கலாவதி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6 மணிக்கு மதுரை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.
கோவை குறிச்சி குளத்தில் ஆகாய தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்க போவதாக கூறியிருக்கிறாரே?
பதில்: எங்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சனையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதம் காட்டியது. ஆனாலும் அதன்பிறகு ஆணையத்தை அமைத்து விட்டார்கள்.
மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சனையில் முழுவதும் துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #CauveryIssue #DMK #congress
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு இருக்கிறார். கர்நாடகாவில் பெருமழையும், பலத்த வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுவதால் தான் இங்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறை சோதனையில் சுமார் ரூ. 100 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதற்குரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #Cauverywater
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கூட்டத் தொடரை இந்த மாதம் 27-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதை தவிர்க்க கூட்டத்தொடரை சுருக்கி 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவெடுத்தனர். அதன்படி நேற்றுடன் பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து, நேற்று இரவு பட்ஜெட் மசோதாவுக்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், பட்ஜெட் மசோதாவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். #PuducherryAssembly
இந்நிலையில், பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவை அளிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க.வும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நாளை முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும். எனவே, நாளை சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளன. இதற்காக பிற கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகின்றன. #NoConfidenceMotion #MKStalin
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்காணித்து, அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வருமான வரி சோதனையை நடத்துவது வழக்கம்.
தற்போது வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும், பொதுப்பணித்துறையிலோ, நெடுஞ்சாலைத் துறையிலோ, சுகாதாரத்துறையிலோ மற்ற துறைகளிலோ இப்போது ஒப்பந்தம் பதிவு செய்து கொண்டு ஒப்பந்ததாரர்கள் ஆகவில்லை.
கடந்த 25 ஆண்டு காலமாக ஒப்பந்ததாரர்களாக இருந்து வருகின்றனர். அதிலும், தி.மு.க. ஆட்சியில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேலே இதே ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுத்து இருக்கிறார்கள்.
இப்படி இருக்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஒரு தொழில் நடத்தி வரும் நிலையில், வருமானவரி சோதனையை அவருடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் விசாரணை செய்வதற்காக வருமானவரித் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வந்தது என்பது கண்டிக்கத்தக்க விஷயம்.
உண்மை நிலை இப்படி இருக்க, ஒரு தனியார் தொலைக்காட்சியானது, உண்மைக்கு மாறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி, வேண்டும் என்றே அ.தி.மு.க.வுக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் கற்பிக்கின்ற செயலில் ஈடுபட்டுள்ளது. இதை நிச்சயமாக ஏற்க முடியாது. இது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார். #Minister #jayakumar #ADMK #EdappadiPalanisamy