என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
மதுரை:
பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி மதுரை விளக்குத்தூண் அருகில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளது என்றுதான் அமித்ஷா பேசினார். அது இப்போது வேறு மாதிரி உலா வருகிறது.
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்ப்பதில் பா.ஜ.க. பெருமிதம் கொள்கிறது.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சிப் பாதைக்கு செல்வது அகிய விஷயங்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வது காமராஜர் ஆட்சிதான். எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் இருக்கக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மத்தியில் எந்த கட்சி ஆளுகிறதோ, அந்த கட்சியின் சின்னமான தாமரைதான் இங்கு மலரும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். பொருத்திருந்து பாருங்கள்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதை அமித்ஷாவின் வருகை உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #amitshah
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.பின்னர் நிரூபர்களுக்கு தா.பாண்டியன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது.-
தமிழகத்தில் எங்கோ பெய்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் இன்னும் பல நகரங்கள், கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.
பல ஏழை விவசாயிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து நிலங்களை எடுத்து எட்டு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டம் தேவைதானா?. அரசு இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பா.ஜனதா.தலைவர் அமித்ஷா தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலம் என்று சொல்லுவது அவர் கண்ணாடி முன்பு அவரே சொல்லி கொள்வது போல் உள்ளது. அவர் மகன் இரண்டு வருடத்தில் 16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.
செலவு சிக்கனம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி உலகம் சுற்றும் செலவை குறைந்தாலே செலவை குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார். #SimultaneousElections #Pandian
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ்- அப்பிலோ, சமூக வலை தளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக் கூடாது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807151311000290_1_stald._L_styvpf.jpg)
அப்படிச் செய்பவர்கள் ம.தி.மு.க. நலனுக்கு பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் ம.தி.மு.க.வினராவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் தொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MKStalin #Vaiko
திருவொற்றியூர்:
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி. சாமி, மாதவரம் சுதர்சனம் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
கலைஞர் முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் கலைஞர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வரலாற்றில் இடம் பிடித்தவர். மக்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்களை தான் இன்னும் அமைச்சராக நினைத்து கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க அமைச்சர்களுக்கு மதிப்பில்லை.
மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் கனவை தகர்த்து உள்ளது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு முறையினால் தற்போது மருத்துவ படிப்பிற்கு காசோலை மூலம் லஞ்சம் பெறப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எவ்வித சக்தியும் அதிகாரமும் இல்லை மத்திய அரசை எதிர்பார்த்து இருக்கும் நிலை தான் உள்ளது ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.
தமிழகத்தில் டாஸ்மாக், பொதுப்பணித்துறை, சத்துணவு துறை என அனைத்திலும் ஊழல் என்று கமிஷன் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு பொற்காலம் டி.டி.வி தினகரனுடன் பேசி அவருடன் செல்ல நினைக்கும் எம்.எல்.ஏ.விற்கு மாத மாதம் ரூ.10 லட்சம் பணமும் தங்கக்கட்டிகளும் வழங்கப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807151237153198_1_amitdd._L_styvpf.jpg)
தமிழகத்திற்கு வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் தான் ஊழலில் உச்சக்கட்டம் என கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?
அமித்ஷா மட்டுமல்லாது இன்று முட்டையில் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதற்கு அ.தி.மு.க என்ன பதில் சொல்லப்போகிறது
மத்தியில் மதவாத ஆட்சியும் மாநிலத்தில் ஊழல் ஆட்சியும் இணைந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதை தடுக்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நிர்வாகிகள் வி. ராமநாதன், நாகலிங்கம் கருணாநிதி, ரமேஷ், துர்கா கோதண்டம், ஏ. வி. ஆறுமுகம், மணலி டி. நாகபாண்டியன், ஆதிகுருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கே. பி. சொக்கலிங்கம் நன்றி கூறினார். #EdappadiPalaniswami #AmitShah
திருச்சி:
திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறிய தாவது:-
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் விரோத, ஊழல் ஆட்சி நடை பெற்று வருகிறது. இதை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா கூறினால் ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலமாகத்தான் தமிழகம் திகழ்கிறது. சாதாரண மக்களை கேட்டால் கூட இதனைத் தான் கூறுவார்கள்.
தமிழகத்தில் லோக்பால் கொண்டு வருவது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகும். பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேர வைக்கும் தேர்தல் வரும். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது உண்மையான லோக்பால் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்படும். யாரால் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். கைகோர்த்தார்களோ? அவர்களாலேயே அது பிரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் செல்லும்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது டி.டி.வி.தினகரன் பேசும் போது, துரோகத்தை கருவறுக்க வேண்டும் என்பார்கள். அது போலத்தான் இப்போது தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சிக்கு கரு உள்ள முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற வேட்பாளர் மனோகரன் போட்டியிடுவார். அரசு தலைமை கொறடாவாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்து மக்கள் பணியாற்றிய அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து அவர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dhinakaran #Assemblyelection
ஜெயங்கொண்டம் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார். ஆனால் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசும், மாநிலத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க.வும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா போராடி பெற்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார்.
ஆனால் அப்போது ஆட்சி நடத்தியவர்கள் அதனை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இன்றைக்கு காவிரி நீர் வருகிறது என்றால் அதற்கு ஜெயலலிதாதான் காரணம்.
தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் நமது முதல்வர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் முதல்வர் ஆனவுடன் அப்பதவியிலிருந்து நீக்கி ஆட்சியை கலைப்பதற்கு பல்வேறு வகையில் தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் தொண்டர்களின் ஆதரவோடு இன்று வரை சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சொத்து சம்பந்தமான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த போது, சசிகலா குடும்பம் ஆட்சியை பிடிப்பதற்காக பெங்களூரில் ஒரு ஓட்டலில் ரூம் போட்டு பேசியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் பதிவு செய்து கொண்டு வந்து ஜெயலலிதாவிடம் கொடுத்ததால் அவர்களின் சுயரூபம் தெரிய வந்ததை அடுத்து சசிகலா உட்பட அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
சில மாதங்கள் கழித்து சசிகலா, ஜெயலலிதாவிடம் எனது குடும்பம் இவ்வளவு பெரிய துரோகம் செய்யுமென்று நான் நினைக்கவில்லை. என்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்னிப்பு கடிதம் கொடுத்து அனுப்பினார். மன்னிப்பு கொடுத்து மீண்டும் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
ஆனால் கடந்த 2008-ம் ஆண்டே தினகரனை கட்சியை விட்டே நீக்கினார். இனிமேல் போயஸ்கார்டன் பக்கமே வரக்கூடாது, பெரியகுளம் தொகுதி பக்கமே செல்லக்கூடாது. சென்னையிலேயே இருக்கக்கூடாது என கட்டளையிட்டார். அது முதல் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இருந்த இடம் தெரியாத அளவிற்கு இருந்து வந்தவர் இன்று ஜெயலலிதா இல்லை என்றதும் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார்.
ஏன் தினகரனை நீக்கினார் என்றால், ஜெயலலிதா மீது தி.மு.க. ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தினகரனும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவிற்கு தெரியாமலேயே தினகரன் லண்டனில் ஒரு ஓட்டல் வாங்கியுள்ளார். அந்த ஓட்டலையும் சேர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.
அதில் தினகரனும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார். தினகரன் அப்போதே முடிவு செய்து விட்டார். எப்படியாவது ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கருணாநிதியுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருணாநிதியுடன் பேசிய தினகரன், என்னையும் லண்டன் சொகுசு ஓட்டலையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுங்கள். மற்றவர்களையெல்லாம் வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் லண்டனில் உள்ள விலைமதிக்க முடியாத அந்த ஓட்டலை வழக்கில் இருந்து தி.மு.க.வினர் நீக்கி விட்டனர். ஒப்பந்தம் இல்லை என்று சொன்னால் தினகரனையும், ஓட்டலையும் வழக்கில் இருந்து நீக்கியிருப்பார்களா?
ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்வருடப் பிறப்பையொட்டி கொறடா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று அவரிடம், நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது. ஆகையால் நீங்கள் இந்த இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்திக்கொள்கிறோம் என்று சொன்னோம்.
அதற்கு தினகரன் உங்களுக்கு 60 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதன் பிறகு நான் மீண்டும் எனது விஸ்வரூபத்தை எடுப்பேன். அதற்குள் ஓ.பி.எஸ்.சிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.
அதற்கும் மேல் தாமதமானால் என்னுடைய ஒரு முகத்தை மட்டும்தான் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். எனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்தது கிடையாது என்று கூறி, என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடு தேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.
மேலும் அங்கிருந்து எழுந்து எங்களை அடிப்பதை போல் வந்தார். இதற்கு மேலும் அங்கிருந்தால் அசிங்கமாகி விடும் என்று நானும், வேலுமணியும் வெளியே வந்து விட்டோம். எங்கள் பின்னே அனைத்து அமைச்சர்களும் வந்து விட்டார்கள்.
தினகரன் முதல்வராவதற்கு கனவு காண்கின்றார். அம்மாவின் ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது. இந்த கட்சியில் உரிமைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அம்மா ஒரு முறை சட்டமன்றத்தில் பேசிய போது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், 7½ கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப் பின்னால் 100 ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும் போதெல்லாம் ஏமாந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை காண்பித்து 20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு கூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #MinisterThangamani
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு பேசும்போது, மகாபாரத கதையைச் சொல்லி பகவான் கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமைமிக்கவர் என குறிப்பிட்டார். விழாவில் ஆ.ராசா பேசியதாவது:-
மகாபாரத்தில் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். பஞ்சபாண்டவர்களில் வேதம் தெரிந்தவன், அதிகமாக கற்றவன் சகாதேவன். ஒருமுறை பஞ்சபாண்டவர்களுக்கு கண்ணன் ஒரு சோதனை வைத்தார். அப்போது, ‘எல்லோரும் என்னை வணங்குகிறீர்கள். நான் பல வடிவங்களாக விஸ்வருபம் எடுக்கும்போது, பல பிம்பங்களாக காட்சியளிக்கும்போது உங்கள் ஐவரில் யார் என் மூலத்திருவடிகளை பற்றியிருக்கிறீர்களோ அவர்தான் என் மீது உண்மையான பக்தி உள்ளவர்’ என்று போட்டி வைத்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807141349518767_1_karunanidhi._L_styvpf.jpg)
இப்போது கலைஞரின் திருவடியை, முழு பிம்பத்தை எல்லோரும் போட்டி போட்டு பிடித்துகொண்டிருக்கிறார்கள். யார் பிம்பத்தை யார் ஒரிஜினலை பிடித்தார் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.
திருச்சியில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கே: மத்திய அரசின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறதே.
ப : எந்த நடவடிக்கை அப்படி உள்ளது?
கே : உயர்கல்வி ஆணையத்தை (யு.ஜி.சி) மத்திய அரசு மாற்றி அமைப்பதாக கூறப்படுகிறது.
ப : எப்போதும் காலம் காலமாக பயன்படுத்தப்படுகின்ற ஒருமுறையை மாற்றி அமைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றால் அதை மாற்றி பயன்படுத்துவது நல்லது. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு செய்யும் துரோகம். மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கே : தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளாரே?
ப : அவர் அ.தி.மு.க. அரசை மட்டும் குறை சொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைப்படுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807141322001940_1_ThambiDurai001._L_styvpf.jpg)
கே : 2019-ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறப்படுவது பற்றி?
ப : நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கிறார்கள். ஏன் என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகிறார்கள். இதை கண்டு பயப்படுகிறவர்களுக்கு அது அவர்களது சொந்த பயத்தை காட்டுகிறது.
கே : பா.ஜனதா நிலை என்ன?
ப : வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகபடியான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலிலும் ஆளுமையை நிரூபிக்கும். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இருக்கிறது.
கே : வரும் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூறியிருப்பது பற்றி பதில் என்ன?
ப : தேர்தலுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் எதையும் கூறலாம். தேர்தல் வரும் போது தான் எதை தின்றால் பித்தம் தெளியும் என்றும் கிடைக்கிறதெல்லாம் கிடைக்காதா? என்று அனைத்து அரசியல் கட்சிகளும் நினைப்பார்கள்.
தேர்தலின் போது இது மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #BJP #PonRadhakrishnan #AssemblyElection
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜான்சன் அலெக்ஸ்.
நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பார்த்திபன்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்லபாண்டி.
ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாலமன் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தர்மர்.
சேலம் மாநகரம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காமராஜ்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரகாந்த் ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெய் சங்கர்.
ஆலங்குளம் காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வனராஜ்.
கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தனபால்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்.
மதுரை மாநகரம், கூடல் புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பாண்டிமாதேவி.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேகர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேச பாண்டி.
காஞ்சிபுரம் மாவட்டம், நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கஜேந்திரன்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சதீஷ்வரன்.
சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை1, ‘ஈ’ நிறுமம், 23ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்த் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மதுரை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி :- அமாவாசை அன்று கொடியேற்றியதால் தமிழிசை உங்களை போலி பகுத்தறிவுவாதி என்று விமர்சித்துள்ளாரே?
பதில் :- பல்வேறு தரப்பினரும் பல்வேறு மதத்தினரும் நம்பிக்கை உடையவர்களும் என் கட்சியில் உள்ளனர். என் மகள் சுருதியைப் பகுத்தறிவு வாதி என்று கூற முடியாது. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு மட்டும் நான் கட்சி ஆரம்பித்திருந்தால் தவறாகக் கூறலாம். ஆனால், ஏழ்மையையும் ஊழலையும் ஒழிப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லோர் உதவியும் தேவைப்படுகிறது.
கே :- கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று கோஷம் எழுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?
ப :- ஆம், சர்ச்சைதான். இது பழையக் கூக்குரல், தவிர்க்கத்தான் வேண்டும். அது தொடர்பாக வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. இதைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். இனி இதுபோன்று நிகழாது என்று வாக்குறுதி அளிக்கிறேன். மற்றபடி அந்த நிகழ்வுக்கு நான் பொறுப்பல்ல. என்னுடைய கட்சியில் இருப்பவர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவர்களைக் கண்டிக்கிறேன்
கே :- நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை குறித்து பேசப்படுகிறதே?
ப :- சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஒரே குவியலாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து.
கே :- முட்டை முறைகேடு பெரிய விவகாரமாகி வருகிறதே?
ப :- முட்டை முறைகேடு விவகாரத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பாகவே எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது, இது பொய்க் குற்றச்சாட்டு என்று கூறியவர்கள்தான் தற்போது மாட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதையெல்லாம் ஒழிப்பதுதான் முக்கிய வேலையாக எங்களுக்குத் தோன்றுகிறது
கே :- கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் நிகழ்ந்த மாணவி மரணம்?
ப:- மாணவியின் மரணம் கண்டிக்கத்தக்க ஒன்று கல்வி நிறுவனங்களின் உயரம் வளர்ந்தால் மட்டும் போதாது, கல்வியின் தரமும் உயர வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் உள்ள 65 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தயாரித்து வருகிறது.
இது மட்டுமின்றி பூத் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பேர்களை நியமித்து வருகின்றனர். அதாவது 60 பேருக்கு ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் உள்ள 20 பேரில் 5 பேர் பெண்கள். 5 பேர் இளைஞரணியை சேர்ந்தவர்கள். ஒருவர் தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்தவர் என்ற வகையில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807141044306382_1_stald._L_styvpf.jpg)
40 பாராளுமன்ற தொகுதியின் கள நிலவரத்தை நேரில் அறிந்து தலைமைக்கு தெரிவிக்க ஏதுவாக 12 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய சிறப்பு குழுவை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் வருமாறு:-
1. அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்).
2. இ.கருணாநிதி (பல்லாவரம்)
3. டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி)
4. எஸ்.ஆஸ்டின் (கன்னியாகுமரி)
5. கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்)
6. கோவி செழியன் (திருவிடைமருதூர்)
7. எழிலரசன் (காஞ்சீபுரம்)
8. இன்பசேகரன் (பென்னாகரம்)
9. மு.பெ.கிரி (செங்கம்)
10. ஈஸ்வரப்பன் (ஆற்காடு)
11. தாயகம் கவி (திரு.வி.க.நகர்)
12. ரவிச்சந்திரன் (எழும்பூர்)
இக்குழுவின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதி குறித்த உண்மை நிலவரங்களை இந்த மாதத்திற்குள் தொகுத்து மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக வழங்க உள்ளனர்.
இதை அடிப்படையாக கொண்டு கட்சிப் பணிகளை வேகப்படுத்த தி.மு.க. தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிகிறது. #DMK #MKStalin
கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க தமிழகத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசுதான் பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பெருமையாக பேசி வருகின்றனர். அதனை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் இதனை செயல்படுத்துவதாக கூட எடுத்து கொள்ளலாம்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807141043548559_1_amitshah._L_styvpf.jpg)
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேல்முறையீடு செய்ய பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் நடந்த ஊழல்களில் எதற்கான தீர்வை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவிக்கலாம். எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 20 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை ஏற்புடையது அல்ல. தமிழக கலாச்சாரத்திற்கு இந்த கொள்கை ஒத்துவராது. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க. தான் கோர்ட்டுக்கு சென்றது. அதற்காக உள்ளாட்சி நிதி ரூ.2ஆயிரம் கோடியை பெற முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தம்பிதுரையிடம் நிருபர்கள், அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தீபா யார்? அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.
பேட்டியின் போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,கீதா எம்.எல்.ஏ. உடனிருந்தனர். #ADMK #ThambiDurai