search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • மூன்று இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரர்கள் துப்பாக்கிச்சண்டை.
    • இரண்டு இடங்களில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் உடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தேடுதல் வேட்டை நடைபெற்றது. குப்வாரா மாவட்டத்தின் மச்சல் என்ற இடத்தில் சந்கேத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதை கண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    அதேபோல் குப்வாரா மாவட்டத்தின் டங்தார் என்ற இடத்திலும் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    மேலும் ரஜோரி மாவட்டத்தின் லத்தி என்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த மூன்று என்கவுண்டரிலும் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
    • முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 90 இடங்களுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. 5 இடங்களில் தனித்தனியாக களமிறங்குகின்றன.

    இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், தேசிய மாநாடு கட்சி சார்பில் 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் உமர் அப்துல்லா கண்டர்பால் தொகுதியிலும், தன்வீர் சாதிக் ஜடிபால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக 90 தொகுதிகளில் 44-க்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சிறிது நேரத்தில் அதை திரும்பப் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன.

    அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்.

    பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    • காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார்
    • ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும்

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பாஜக அரசால் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

    ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளனர். காஷ்மீரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார். மேலும் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் இட ஒதுக்கீட்டை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணி குறித்தும், ராகுல் காந்தியின் அரசியலமைப்பு பேச்சு குறித்தும் கடுமையாக விமர்சித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சேசாத் பூனாவாலா [Shehzad Poonawalla] வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி அரசியலமைப்பு குறித்துப் பேசுவது, சாத்தான் பகவத்கீதையையும், குரானையும் ஓதுவது போன்றது என்று சாடியுள்ளார்.

    மேலும் அவரது எக்ஸ் பதிவில், ராகுல் உண்மையிலேயே அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அக்கறை கொண்டிருந்தால் காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி பற்றி விளக்கம் கொடுத்தாக வேண்டும். அதாவது, தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கைகளான, சட்டப்பிரிவு 370 வதை திரும்பக் கொண்டு வருவதையும், ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும்
    • உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ளது

    ஜம்மு காஷ்மீர்  

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் வேகமெடுத்து வருகிறது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

    தேர்தல் களம்

    சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரமே இந்த தேர்தலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

     

    மெகபூபா முப்தி

    இதற்கிடையே முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே தூதரக உறவுகள், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலியுறுத்துவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து , 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், ரேஷன் கடைகளில் மீண்டும் சர்க்கரை, மண்ணெண்ணெய் வினியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

     

    கூட்டணி...

    இந்த தேர்தலில் காங்கிரசும்- தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் தங்களது செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணியை ஆதரிக்கத் தயார் என மெகபூபா முப்தி நேற்று தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, 'காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, எல்லை சாலைகளை திறப்பது உள்ளிட்ட எங்கள் செயல் திட்டங்களை காங்கிரசோ அல்லது தேசிய மாநாடு கட்சியோ ஏற்பதாக இருந்தால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம் என கூறுவோம். எங்களுக்கு தேர்தலில் சீட் பங்கீட்டை விட காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமானது. பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் மக்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

     

    • தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தீவிர ஆலோசனை.
    • தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் செப்டம்பர் 18, 25-ந்தேதி, அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜனதாவின் மூத்த தலைவரான மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, ராம் மாதவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்படுகிறது.

    • 90 இடங்களிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டி.
    • மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதுதான் முதல் வேலை- பரூக் அப்துல்லா

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வருகிற செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் 90 இடங்களுக்கு நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு, மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் முதன்மையான மாநில கட்சியாக உள்ளன.

    பா.ஜ.க.-வை வீழ்த்த இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணி என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது.

    கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

    நேற்று பரூக் அப்துல்லா தனது மகன் உமல் அப்துல்லா உடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில் "நாங்கள் ஒரு நல்ல சந்திப்பை, சுமூகமான சூழலில் நடத்தினோம். கூட்டணி தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடவுள் விரும்பினால் அது சீராக நடைபெறும். கூட்டணி இறுதியானது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். 90 தொகுதிகளில் இந்த கூட்டணி போட்டியிடும்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    மேலும் தேர்தலுக்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்பதை அவர் புறந்தள்ளிவிடவில்லை.

    மாநில அந்தஸ்து எங்களுக்கு முக்கியமானது. இது எங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் மோசமான நாட்களை பார்த்துள்ளது. முழு அதிகாரத்துடன் மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம். நாட்டில் நிலவும் பிளவுபடுத்தும் சக்திகளை தோற்கடிப்பதற்காக தேர்தலில் போராடுவதே எமது பொதுவான குறிக்கோள் ஆகும்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் மோடி தோற்கடிக்கப்பட்டார்
    • ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது என்று தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர்.

    நேற்றைய தினம் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தனர். இதற்கிடையில் நேற்று ஜம்முவில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி, மனதளவில் மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இருந்த மோடியின் உடல்மொழி தேர்தலுக்குப் பின்னர் முற்றிலுமாக மாறியுள்ளது.

    இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர், யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டபோது, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது. இதுபோன்று முன்னதாக நடக்கவில்லை. எனவேதான் ஜம்மு காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம். மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது என்று தெரிவித்தார். 

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
    • முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    மொத்தம் 90 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    அங்கு, முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரசார வேலைகளைத் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் பொதுச்செயலாளரான ராம் மாதவ் மற்றும் மத்திய மந்திரி கிஷண் ரெட்டி ஆகியோரை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார்.

    • பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெற்றது.
    • யாத்திரையின் போது உடனடி சிகிச்சை தேவைப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பக்தா்களை மீட்புப் படையினா் மீட்டனா்.

    ஜம்மு காஷ்மீர்:

    தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோவிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வோா் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடினமான புனிதப் பயணம் மேற்கொள்கின்றனா்.

    இந்த ஆண்டு 48 கி.மீ. தொலைவு கொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெற்றது.

    யாத்திரை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே இரு வழித்தடங்களிலும் பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்காக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை, மாநில பேரிடா் நிவாரண மீட்புப் படை, தேசிய நிவாரண மீட்புப் படை, மத்திய ரிசா்வ் காவல் படைகளை உள்ளடக்கிய மீட்புப் படைகள் நிலை நிறுத்தப்பட்டன.

    யாத்திரையின் போது உடனடி சிகிச்சை தேவைப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பக்தா்களை மீட்புப் படையினா் மீட்டனா்.

    ஜம்மு-காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமா்நாத் குகைக் கோவிலுக்கான புனித யாத்திரை நேற்று நிறைவடைந்தது.

    கடந்த ஜூன் 29-ந் தேதி தொடங்கி 52 நாட்களாக நடைபெற்று வந்த யாத்திரையில் 5.10 லட்சம் பக்தா்கள் குகைக் கோவிலில் தரிசனம் செய்தனா்.

    • நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
    • நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    • ரோந்துப் பணியில் உள்ளூர் காவல்துறையினரும், மத்திய காவல் ஆயுதப் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
    • மத்திய காவல் ஆயுதப் படையின் ஆய்வாளர் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் இன்று நடந்த என்கவுன்டர் தாக்குதலில் சிஆர்பிஎஃப் (மத்திய காவல் ஆயுதப் படை) அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் உள்ளூர் காவல்துறையினரும், மத்திய காவல் ஆயுதப் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில், பசந்த்கரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்மீது, பிற்பகல் 3.30 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக, காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

    ஆனால் இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் சுட்டதில், மத்திய காவல் ஆயுதப் படையின் ஆய்வாளர் மீது குண்டு பாய்ந்தது. இருப்பினும், ஆய்வாளரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×