search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறப்பு அந்தஸ்து மீட்பு.. காங்கிரஸ் ஆதரவு? தேர்தல் அறிக்கை வெளியிட்டு மெகபூபா முப்தி கூறியது என்ன?
    X

    சிறப்பு அந்தஸ்து மீட்பு.. காங்கிரஸ் ஆதரவு? தேர்தல் அறிக்கை வெளியிட்டு மெகபூபா முப்தி கூறியது என்ன?

    • சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும்
    • உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ளது

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் வேகமெடுத்து வருகிறது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

    தேர்தல் களம்

    சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரமே இந்த தேர்தலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

    மெகபூபா முப்தி

    இதற்கிடையே முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட நிஜமான அந்தஸ்து [சிறப்பு அந்தஸ்து] மீட்டெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே தூதரக உறவுகள், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலியுறுத்துவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து , 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், ரேஷன் கடைகளில் மீண்டும் சர்க்கரை, மண்ணெண்ணெய் வினியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி...

    இந்த தேர்தலில் காங்கிரசும்- தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் தங்களது செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணியை ஆதரிக்கத் தயார் என மெகபூபா முப்தி நேற்று தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, 'காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, எல்லை சாலைகளை திறப்பது உள்ளிட்ட எங்கள் செயல் திட்டங்களை காங்கிரசோ அல்லது தேசிய மாநாடு கட்சியோ ஏற்பதாக இருந்தால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம் என கூறுவோம். எங்களுக்கு தேர்தலில் சீட் பங்கீட்டை விட காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமானது. பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் மக்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.

    Next Story
    ×