என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி விளையாடுகிறது.
    • இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.

    மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நோயாளி வைத்திருக்கும் பொருட்கள் மீது எலிகள் துள்ளிக்குதித்து விளையாடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி ஓடி விளையாடுகிறது.

    இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த வீடியோ பரவியதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த பிரச்சனையை தீர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தது.

    இதுதொடர்பாக மருத்துவ அதிகாரி டாக்டர் பிரவீன் உய்கே கூறுகையில், நாங்கள் தொடர்ந்து பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம், ஆனால் பிரச்சனை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மூத்த மாவட்ட அதிகாரி குழந்தைகள் வார்டை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்த அவர், உடனடியாக வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார்.

    மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சம்பாதியா உய்கே, மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மூத்த மாவட்ட அதிகாரிக்கு அவர் அறிவுறுத்தினார்.

    • மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் உள்ளது.
    • பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன.

    கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை தனது அரசு கொண்டுவரும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும்.

    அவர்களை கட்டாயப்படுத்துபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக்கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்  விதியை விரிவுபடுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.

    இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டு , இஸ்லாத்திற்கு அவர்களை மாற்றி முஸ்லிம் ஆண்கள் "லவ் ஜிஹாத்" செய்கின்றனர் என பாஜக கூறி வருகிறது. எனவே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களுக்கு எதிரான கடந்த 2021 மார்ச்சில் அன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படும்.

    திருமண மூலம் மதமாற்றம் செய்தல், அச்சுறுத்தல், செல்வாக்கு மற்றும் வற்புறுத்தல் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின்கீழ் அடங்கும்.

    மதத்தை மறைத்து திருமணம் செய்தால், மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்நிலையில் இந்த சட்டத்தின்கீழ் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என மோகன் யாதவ் தற்போது கூறியுள்ளார்.

    பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்கள் மூலம் விரும்பி வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறிவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

    • கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வயல்களில் தோண்டுவதைக் காணலாம்.
    • புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் ஒரு காட்சி உள்ளது.

    மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'சாவா'.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

    முகலாய மன்னர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்ஷய் கண்ணா நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் சாவா படத்தில் வரும் காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் புதையலை தேடி கிளம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வயல்களில் தோண்டுவதைக் காணலாம். பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க நாணயங்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் இலக்கு.

    முகலாயர் காலத்தில் புர்ஹான்பூர் ஒரு வளமான நகரமாக இருந்தது. மேலும் இங்கு முகலாய நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததாக நம்பப்படுகிறது.

    சாவா திரைப்படத்தில் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் (விக்கி கௌஷல்) மற்றும் ஔரங்கசீப் (அக்ஷய் கன்னா) ஆகியோர் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் ஒரு காட்சி உள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, கிராமவாசிகள் அங்கே உண்மையிலேயே ஒரு புதையல் புதைந்து இருக்கலாம் என்று நினைத்து, தோண்டத் தொடங்கியுள்ளனர்.

    நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வயல்களை கிராம மக்கள் தோண்டியுள்ளனர். சிலர் தங்க நாணயங்களைக் கண்டறிய மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தினர்.

    கிராம மக்களின் தோன்றுவதை அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறை ஓடோடி வந்தது. கோட்டை பகுதியில் அரசாங்க அனுமதியின்றி இதுபோன்ற அகழ்வாராய்ச்சி சட்டவிரோதமானது என்று போலீஸ் மக்களை எச்சரித்தது.

    உண்மையில் அங்கு புதைக்கப்பட்ட புதையல் ஏதேனும் உள்ளதா இல்லையா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, புர்ஹான்பூரில் தங்கத்தால் நிரம்பிய புதையல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

    முகலாயர்களை எதிர்த்து விக்கி கௌஷல் (சத்ரபதி சம்பாஜி) துணிச்சலுடன் போராடும் காட்சிகள், அவுரங்கசீப்பால் சாம்பாஜி சித்திரவதை செய்யப்படும் நெஞ்சை பிழியும் காட்சிகள் என காட்சிக்கு காட்சிக்கு ஸ்கோர் செய்த சாவா படம் இதுவரை ரூ.571 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ரூ.1 லட்சம் கேட்டதாக கோமாவில் இருந்த இளைஞர் குற்றச்சாட்டு
    • மாநில சுகாதாரத் துறை இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

    மத்திய பிரதேசத்தில் கோமாவில் இருந்ததாக கூறப்படும் நபர் மருத்துவமனை மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரத்லம் நகரில் வசிக்கும் பன்டி நினாமா என்ற இளைஞர் தனியார் மருத்துவமனைக்கு வெளியே, தனக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ரூ.1 லட்சம் கேட்டதாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய பன்டி நினாமாவின் மனைவி, "எனது கணவர் கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவரின் சிகிச்சைக்காக ரூ.40,000 செலவு செய்திருந்தோம். மருத்துவமனை நிர்வாகம் கூடுதலாக பணம் கேட்டதால் அதை ஏற்பாடு செய்ய சென்றிருந்தேன். பின்னர் நான் திரும்பி வந்தபோது, கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய என் கணவர் வெளியே கோபமான நிலையில் நின்று கொண்டிருந்தார்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும் மாநில சுகாதாரத் துறை இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

    • டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
    • ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

    போபாலில் உள்ள ஒரு குத்தகை வீட்டில் இயங்கி வந்த ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம், மூன்று மாதங்களாக வாடகை செலுத்தப்படாத காரணத்தால், வீட்டு உரிமையாளரால் பூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஆம் ஆத்மி கட்சி இணை செயலாளர் ராமகாந்த் கூறும் போது, "நாங்கள் நேர்மையாக வேலை செய்யும் போது இவை அனைத்தும் நடக்கும். நிலைமைகள் மாறும். நாங்கள் நேர்மையானவர்கள். தற்போது, எங்கள் கட்சியிடம் நிதி இல்லை. எனவே எங்களால் அதை செய்ய முடியவில்லை," என்று தெரிவித்தார்.

    "அலுவலக வாடகை தொகை எவ்வளவு என்றும், அது எவ்வளவு காலமாக செலுத்தப்படாமல் உள்ளது என்பது பற்றியும் எனக்கு தெரியாது" என்று முன்னாள் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா, "ஆம் ஆத்மியின் மத்திய பிரதேச அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது, அடுத்து காங்கிரஸ் தான்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சமீபத்தில் ஆம் ஆத்மியை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சியமைத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை மிஞ்சியது. மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க. மட்டும் 48 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    • ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
    • இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளா்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக முன்னிறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களும் பங்கேற்றனர்.

    வாகனத் தொழில் கண்காட்சி, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி, 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' திட்டம் தொடா்பான கண்காட்சி என 3 கண்காட்சிகள் நடைபெறுகிறது.

    உலக முதலீட்டாளா்கள் உச்சி மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச அரசின் 18 புதிய கொள்கைகளையும் அவர் வெளியிட்டார். உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:-

    மாநாட்டு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருப்பது நினைவுக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களால் சாலைகள் மூடப்பட்டதால் தேர்வுக்கு செல்வது தாமதமாகும். மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைவதற்காக நான் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டேன். உங்கள் சிரமத்திற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்திய வரலாற்றில் முதல்முறையாக, முழு உலகமும் இந்தியாவைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும்போது இதுபோன்ற ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, பொருளாதார கொள்கை வல்லுனர்களாக இருந்தாலும் சரி, பல்வேறு நாடுகளாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் இந்தியாவிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

    வரும் ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று உலக வங்கி சமீபத்தில் தெரிவித்தது. உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த வினியோகமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

    ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    மத்திய பிரதேசம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. வலுவான திறமையாளர்கள் குழு மற்றும் செழிப்பான தொழில்களுடன் மத்திய பிரதேசம் ஒரு விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது.

    இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். மத்திய பிரதேசத்தில் இரட்டை எந்திர அரசாங்கத்துக்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • பிரதமர் மோடி புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
    • நமது சமூகத்தை பிரித்து, ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.

    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

    பிறகு, விழாவில் பேசிய அவர், "அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதத்தையும், கலாசாரத்தையும் விமர்சிக்கின்றனர்" என்று கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்து மதத்தை வெறுப்பவர்கள் அனைத்து காலகட்டங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். 

    நாட்டில் இன்று சில தலைவர்கள் மதத்தை கேலி செய்வதையும், மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இவர்களைப் போன்ற நபர்களுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் ஆதரவளிக்கின்றன.

    அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதம், கலாசாரம், நம்பிக்கை, பண்பாடு மற்றும் பண்டிகைகளை விமர்சிக்கின்றனர். இயற்கையாகவே முற்போக்கு தன்மையை உடைய நமது மதம் மற்றும் கலாசாரத்தை அவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

    நமது சமூகத்தை பிரித்து, ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார்
    • இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேசம் சத்தர்பூரில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர், தன்னை பக்கத்து வீட்டை சேர்ந்த வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தித்தார்.

    இதைத்தொடர்ந்து வீரேந்திர யாதவ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான எப்ஐஆரை எதிர்த்து வீரேந்திர யாதவ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த மனு  நீதிபதி எம்.எஸ்.பாட்டி அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வீரேந்திர யாதவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, திருமணமான ஒரு பெண், பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூற முடியாது என்று வாதிட்டார்.

    பதிவுசெய்யப்பட்ட எப்ஐஆரில் புகார் கொடுத்த பெண்ணுடைய வாக்குமூலத்தை நீதிபதி ஆராய்ந்தார். அதில், இளைஞனுடன் மூன்று மாதங்களாக தான் உறவு கொண்டிருந்ததாக அப்பெண் விவரித்துள்ளார். தனது கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார் என்றும், அவர்கள் ஒருமித்த உடல் உறவுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தங்கள் உறவில் வற்புறுத்தலோ அல்லது கட்டாயப்படுத்தலோ இல்லை எனவும் அந்த பெண்ணே கூறியுள்ளார். இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் அந்தப் பெண் பொய்யான வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதற்கான நேரடி அறிகுறி எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதி திருமணம் ஆன பெண்ணுக்கு பொய்யான திருமண வாக்குறுதியை அளித்து உடல் உறவுக்கு மனுதாரர் சம்மதம் பெற்றார் என்பது தவறான புரிதல் என கூறி அவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டார். 

    • கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வந்த ரமேஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
    • பொக்சோ வழக்கில் ரமேஷ் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள்.

    இதனையடுத்து அப்பகுதியில் 46 இடங்களில் உள்ள 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரமேஷ் சிங் என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்று தெரிந்ததை கண்டுபிடித்தனர்.

    ரமேஷ் சிங் என்பவர் கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் சிங்கின் பின்னணியை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    2003 ஆம் ஆண்டு ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

    பின்னர் 2013 ல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ரமேஷ் சிங், 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

    இதனையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கையேடு வெளியே வந்த ரமேஷ் சிங் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராம் லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சுரங்கத் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலக்கரி எடுத்துச் செல்லும் கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிற்பகல் 3 மணியளவில் மாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிலியா காட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

    ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இருவர் உயிரிழந்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் போராட்டக்காரர்கள் தொழிற்சாலை பகுதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அதற்குள் அங்கு வந்து அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ்  அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    • கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
    • அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர்.

    மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா, "கள்ளக்காதல் என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். தனது மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற கணவரின் வாதத்தை நிராகரித்தார்.

    இவ்வழக்கில் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சத் தொகையாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி அலுவாலியா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

    "ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும், மனைவி கள்ளக்காதல் கொண்டிருக்கிறாள் என்று கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    மேலும், "கணவரின் சொற்ப வருமானம் இடைக்கால ஜீவனாம்சத் தொகையை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது" என்றும் நீதிமன்றம் கூறியது. விண்ணப்பதாரர் தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர் என்பதை முழுமையாக அறிந்தே ஒரு பெண்ணை மணந்திருந்தால், அதற்கு அவரே பொறுப்பு.

    ஆனால் அவர் ஒரு திறமையான நபராக இருந்தால், அவர் தனது மனைவியை பராமரிக்க அல்லது இடைக்கால ஜீவனாம்சத் தொகையை செலுத்த சம்பாதிக்க வேண்டும்.

    • மணமகனும், மணமகளும் பயந்து ஓடிச்சென்று ஒரு காரில் புகுந்து உள்பக்கமாக பூட்டி கொண்டனர்.
    • சிறுத்தை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், புத்தேஷ்வர் சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண விருந்து நிகழ்ச்சிகள் தடபுடலாக நடந்து வந்தது. இரவு 11 மணி அளவில் திருமண மண்டபத்தின் பின்புறம் இருந்து அழையா விருந்தாளியாக ஒரு சிறுத்தை புகுந்தது.

    இது திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும், இங்கும் ஓட தொடங்கினர். இதனால் திருமண மண்டபமே பரபரப்பானது.

    அங்கு இருந்த மணமகனும், மணமகளும் பயந்து ஓடிச்சென்று ஒரு காரில் புகுந்து உள்பக்கமாக பூட்டி கொண்டனர். மணமக்களின் குடும்பத்தினரும் பாதுகாப்புக்காக அங்கிருந்த வாகனங்களில் பதுங்கி கொண்டனர். இதனால் அனைவரும் உயிர்தப்பினர்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவு 2 மணிக்கு சிறுத்தை பிடிபட்டது. அப்போது சிறுத்தை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுத்தை புகுந்ததன் காரணமாக மணமக்களும், அவரது உறவினர்களும் 5 மணி நேரத்துக்கும் மேலாக காரில் பதுங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறுத்தை பிடிபட்ட பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் ''லக்னோவில் ஒரு திருமண மண்டபத்தில் சிறுத்தை நுழைந்த செய்தி கவலை அளிக்கிறது. பா.ஜ.க. அரசாங்கத்தில் காடுகளில் மனித அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இதனால் காட்டு விலங்குகள் உணவு தேடி நகரங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக சாதாரண மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இது ஒரு சிறுத்தை அல்ல, பெரிய பூனை என மூடி மறைக்குமா என்று தெரியவில்லை'' என கூறியுள்ளார்.

    ×