என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

    கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27-ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

    இதனால் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலரும் வெளியில் தலைகாட்ட முடியாமல் ஏ.சி. அறைகளிலும், மரங்கள் நிறைந்த நிழல் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படியே வெயில் சுட்டெரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

    கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பறவைகளுக்கு நீர், உணவு அளிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • அணையினால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்திருக்கிறது.
    • தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    கூடலூர்:

    கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் கடந்த 27ந் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நெடும்பள்ளி டேம் என்ற பெயரில் முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், எம்புரான் திரைப்படத்தில் கதாநாயகி மஞ்சுவாரியர் ஒரு காட்சியில் பேசும்போது நாம் பிறப்பதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராஜாக்களில் ஒருவர் சாம்ராஜ்ய பக்தி என்ற பெயரில் கையெழுத்து போட்டு 999 வருட ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டது நெடும்பள்ளி டேம். ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும் ஜனநாயகத்தின் பெயரில் இன்றும் நம்மை ஆக்கிரமித்து உள்ளனர்.

    இந்த டேமால் வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசி இருப்பார். இது பெரியாறு அணை குறித்தே பேசப்படுகிறது என்பதால் கண்டிக்கத்தக்கது.

    கேரளாவில் நடக்கும் இத்தகைய கேடுகெட்ட அரசியல் பெரியாறு அணையை பலிகிடாவாக ஆக்குவது கண்டிக்கத்தக்கது. அணையினால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்திருக்கிறது.

    அணையை காப்பாற்ற செக்டேம் என்னும் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சரி என்ற வசனமும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இதன் தயாரிப்பாளர்களை கண்டிக்கிறோம்.

    இந்த வசனங்களை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். 2 ஷட்ட ர்களை திறந்தாலே மக்களை பழிவாங்குகிற அணையை குண்டு வைத்து தகர்த்தால் கேரளம் மறுபடியும் தண்ணீரில் மூழ்கும் என்றும் வசனம் இடம் பெற்றுள்ளது.

    படத்தின் மொத்த களத்தையும் அடித்து நொறுக்குகின்ற வசனங்கள் பெரியாறு அணை மீது அவதூறு மற்றும் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    ஒரு திரைப்படமாக பல்வேறு வகையில் வரவேற்பை பெற்ற நிலையில் கதை களத்திற்கு பொருத்தம் இல்லாத வகையில் முல்லைப்பெரியாறு அணை மீது இனவெறியை வெளிப்படுத்தியிருப்பது இரு மாநில உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்.

    • கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
    • கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள பாரம்பரிய விக்டோரியா அரங்கத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆலய போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோவிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    இன்னும் ஒரு வாரத்தில் திரவுபதி அம்மன் கோவில் திறக்கப்பட உள்ளது. கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது என்று சொல்வார்கள்.

    இந்த ஆட்சி ஒரு செயலை முன்னெடுத்து அதை செய்வதற்கு காலம் கனிந்து வருகின்றபோது அதற்கு ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகம் செய்கிறார்கள். இதுபோன்ற அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வெகு விரைவில் திரவுபதி அம்மன் கோவில் மக்கள் தரிசனத்திற்கு ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.
    • அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்; சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்கக்கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
    • சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு

    ஊட்டி:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

    வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

    மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.

    மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

    மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.

    அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும்.
    • நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள்.

    கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

    கற்றல் என்பது 20 சதவீதம் மட்டுமே பள்ளிக்கூடத்தில் கிடைக்கிறது. 80 சதவீதம் வெளியே கிடைக்கிறது. வெளியே கிடைக்கும் அறிவை ஊட்டுகின்ற பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    டவுன் பஸ்சில் ஒரு குழந்தை ஏறி இறங்குகிறது என்றால் அந்த அறிவு கிடைக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் அதை ஒரு குழந்தை பார்த்தால் அங்கு அறிவு கிடைக்கிறது. ஒரு வீட்டிற்குள் தந்தை, தாய் எப்படி நடந்து கொள்கிறார்கள் அதை பார்த்து குழந்தைக்கு அறிவு கிடைக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். வீட்டில் அப்பா அம்மாவை சரியாக நடத்தவில்லை என்றால் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்ற அறிவு குழந்தைக்கு மனதுக்குள் போய்விடும். வீட்டில் அப்பா அம்மாவை எப்படி அழைத்து பேசுகிறார், வேலைகளை எப்படி பகிர்ந்து செய்கிறார்கள், அந்த வீட்டில் பெரியோர்களுக்கான மரியாதை எப்படி இருக்கிறது. இந்த 80 சதவீதம் கற்றல் என்பது பள்ளிக்கூடத்திற்கு வெளியே தான் நடக்கிறது.

    ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது. நாம் குழந்தைக்கு கற்றல் அறிவை வெளியே கொடுத்தால் மட்டும் தான் இங்கே கிடைக்கக்கூடிய 20 சதவீத கற்றலை முழுமையாக கிரகித்து அந்த குழந்தை சுவாமி விவேகானந்தர் கேட்ட முழுமையான ஒரு குழந்தையாக இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும்.

    ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும்.

    secular education என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதன் அர்த்தம் எந்தவொரு மதத்தையும் சிறுமைப்படுத்தாமல் இருப்பது தான். எந்தவொரு மதத்தை பற்றியும் பேசாமல் இருப்பது secular education கிடையாது.

    ஒரு மதத்தை சிறுமைப்படுத்தாமல் எல்லா மதத்தையும் சமமாக மதிக்கக்கூடிய ஒரு கல்வி secular education.

    இன்றைக்கு ஒரு மதத்தை சார்ந்த, எல்லா மதத்தையும் சொல்லிக்கொடுக்கக்கூடிய கல்வி ஒரு பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும்.

    அரசு சொல்கிறதோ இல்லையோ, பகவத் கீதையின் 18 அத்தியாயத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    8 முதல் 12-ம் வகுப்பு முடிக்கும்போது அந்த குழந்தைக்கு ஸ்லோகம் தெரிந்து இருக்கும். பகவத் கீதையின் கருப்பொருள் தெரிந்து இருக்கும். மகாபாரதம் ஒரு பாடமாக சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அந்த குழந்தை மேடையில் நாடகம் போடும்போது ஒரு பகுதியை எடுத்து செய்ய வேண்டும். அதே குழந்தைக்கு குரானில் என்ன சொல்கிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும். அது இந்து மதத்தை பின்பற்றக்கூடிய குழந்தையாக இருந்தாலும் மற்ற மதத்தின் அடிப்படையை சொல்லிக்கொடுத்து தான் பள்ளிக்கூடத்தை விட்டு அனுப்ப வேண்டும். கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையும் அந்த குழந்தைக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

    Lent என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? 7-வது நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சினகாக் யூத கம்யூனிட்டி சொல்கிறார்களே அது என்ன? இதை எல்லாம் அந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பினால் தான் இந்து, முஸ்லீம் சண்டை வராது.

    நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு மதத்தை பற்றிய புரிதல் இல்லை.

    நாம் secular education என்ற போர்வையில் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் பிடுங்கி எறிந்து விட்டோம்.

    பள்ளிக்கூடத்தில் எல்லா மதத்தை பற்றியும் அடிப்படை புரிதல் ஒரு குழந்தைக்கு தெரிந்தால் மட்டும் தான் அந்த குழந்தை ஒரு மனிதனை சகோதரனாக, சகோதரியாக, எல்லா மனிதனையும் சமமாக, இன்னொரு மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கையில் எடுக்கும்.

    நான் எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னுடைய பேச்சில் இதை சொல்கிறேன். குழந்தைக்கு ஆன்மிகத்தை, தர்மத்தை, மாற்று மதமாக இருந்தாலும் எடுத்து சொல்லிக்கொடுங்கள். 12-ம் வகுப்பிற்குள் அவர்களுக்கு என்ன மனது உருவாகிறதோ அது தான் அவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு அது உருவாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர்.

    நாகப்பட்டினம்:

    இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.

    இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறை தென்பட்டதை யொட்டி, இன்று (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள தர்காக்கள், பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    தொழுகைக்கு பின், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர். தொழுகையில் பங்கேற்ற சிறுவர்களும் கைக்குழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது.

    இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. 

    • நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

    நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 67,400

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,880

    29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,880

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,720

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    29-03-2025- ஒரு கிராம் ரூ.113

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    • உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.
    • இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி..., ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும்,

    உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.

    இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்குகிறது.

    ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவக் கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்.
    • 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்!

    தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஒன்றிய பா.ஜ.க. அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், தி.மு.க.வும் முறியடித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
    • மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.

    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.

    பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.

    ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×