search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவடியில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் உரையாற்றிய முதலமைச்சர்.
    X
    ஆவடியில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் உரையாற்றிய முதலமைச்சர்.

    வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- அம்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை குழப்பி, ஏமாற்றி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற நினைப்பார் என பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை முடித்ததும் அம்பத்தூர் சென்றார். அங்கு ராக்கி தியேட்டர் அருகே மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினார்.

    புரட்சிதலைவி எந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும், அரசு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக்குழு அரங்கத்தை சென்று பார்த்துவிட்டுதான் மேடையில் அமர்வார்.

    அந்த அளவுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பாடுபட்டார். அதே வழியில் வந்த இந்த அரசு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் வளர்ச்சிக்கு அவர்கள் சொந்த காலில் நின்று தொழில் தொடங்க ரூ.81 ஆயிரம் கோடிக்கு வங்கிக்கடன் கொடுத்துள்ளது.

    சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரம் உயரும். திருமண உதவித் திட்டம், தாலிக்கு 8 கிராம் தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி, கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி என எண்ணற்ற திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. அரசு. ஆனால் தி.மு.க. அப்படியல்ல. 2006 தேர்தலில் பல வாக்குறுதிகளை அளித்தனர். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள்.

    ஆனால் கடைசி வரை நிலத்தை கண்ணிலே காட்டவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வின் வாடிக்கை. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்றுவது இல்லை.

    தேர்தல் வரும்போது ஸ்டாலின் ஊர் ஊராக வருவார். இனிக்க இனிக்க பேசுவார். கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த மாட்டார்.

    மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை குழப்பி, ஏமாற்றி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற நினைப்பார். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    2019 எம்.பி. தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் மனுவாங்கி, வாக்குறுதி அளித்தாரே அதில் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? இப்போது பாய் போட்டு அமர்ந்து அப்பாவி பெண்களை அமர வைத்து பேசுகிறார். அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு எழுதிக்கொடுத்து இப்படித்தான் பேச வேண்டும் என்று பேச வைக்கிறார்.

    அவர்கள் பேசுவதை கூட அவர் உன்னிப்பாக கவனித்தது இல்லை. அவர்கள் பேசுவது ஒன்று, இவர் பதில் சொல்வது வேறொன்று.

    நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்வதை செய்கிறோம். சொல்லாத பல நல்ல திட்டங்களையும் செய்து வருகிறோம்.

    எனவே மக்களுக்காக பாடுபடும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள். வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் ஆவடி தொகுதி காடுவெட்டியில் உள்ள கல்லூரியில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் திருவள்ளூர் சென்று விவசாயிகள், நெசவாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    இன்று மாலை 6 மணி அளவில் மாதவரம் சென்று மகளிர் மத்தியில் பேசுகிறார். இறுதியாக மீஞ்சூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்கள் பென்ஜமின், க.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர் மற்றும் திருத்தணி ஹரி ஆகியோர் பிரசார கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தனர்.
    Next Story
    ×