search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தையும், வேதனையையும், அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரமில்லா நேரத்தில் பேசியபோது கூறியதாவது:

    பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது இந்த ஆதீனத்தில் மட்டுமல்ல, திருவாடுதுறை ஆதீனத்திலும் நடைபெற்று வருகிறது. இதன்படி பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து எந்தவித கட்டாயப்படுத்துதல் இல்லாமல் மனமுவந்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுமந்து வரும் ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒரு பக்தி திருவிழா ஆகும். பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஆகும்.

    இப்படி பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக அங்கேயே ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள். ஆதீனத்தின் சீடர்களும் இப்பல்லக்கை சுமந்து செல்வார்கள். இதை பெருமைக்குரிய விசயமாக நினைத்து பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆதீன குருமார்களை மனிதர்கள் என்று நினைக்காமல், மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பக்தர்கள் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு, 22.5.2022 அன்று, வைகாசி மாதம் 8ம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பல நூற்றாண்டுகளாக , பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிபுரியும் போது கூட இந்த பட்டின பிரவேச நிசழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

    ஆனால் தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தையும், வேதனையையும், அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    அரசின் தடையை அறிந்த, ஆண்டாண்டு காலமாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தில் வசித்து வரும் பல்லக்கு தூக்கும் 72 பேரும் நாங்கள் எங்கள் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குகிறோம். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களை ரசிகர்களும், தேர்தல்களில் வெற்றிபெற்ற வெற்றி வேட்பாளர்களை தொண்டர்களும், என்று வெற்றி பெற்றவர்களை தொண்டர்களும், ரசிகர்களும் தோளில் தூக்கி கொண்டாடுவதை அனைவரும் பார்க்கிறோம். எனவே இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. ஏன் கடந்தாண்டுகளில் காவல்துறை தலைவர் பணி ஓய்வு பெறும் நாளன்று, அவர்களின் பிரிவு உபசார நாளன்று அவரது காரை இந்திய காவல்பணி அதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கயிற்றால் சிறிது தூரம் இழுத்து செல்வதை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி யாகத்தான் கருதுகிறோம்.

    இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    முதல்-அமைச்சர் கடந்த வாரம் மாநிலத்திலுள்ள பல மடாதிபதிகளை அழைத்து தலைமைச்செயலகத்தில் அவர்களோடு கலந்துரையாடி உள்ளார். அப்போது தருமபுரம் ஆதீனம் இந்த அரசை ஆன்மீக அரசு என்று பாராட்டியுள்ளார். ஆனால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடைவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

    மேலும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று அறிவித்தவுடன், புதிய மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதீனம் என்பதை இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

    எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×