என் மலர்
கிருஷ்ணகிரி
- இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
- மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட பெரியண்ணன் போச்சம்பள்ளி அழைத்து வந்தார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது மகன் பெரியண்ணன் (வயது23).
இவர் கடந்த 2023-ம் ஆண்டு அக்னிபாத் மூலம் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.
தற்போது இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜெப்பல்பூர் என்ற பகுதியில் ராணுவ வீரராக பணி செய்து வருகிறார்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவரது மகள் அனுப்பிரியா (22) என்பவருடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதலர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே தங்களது அன்பை ஆன்லைன்னில் பரிமாறிக் கொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அனுப்பிரியாவின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்த தகவலை அனுப்பிரியா இன்ஸ்டாகிராமில் தனது காதலன் பெரியண்ணனுக்கு தெரிவித்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலுக்கு பெற்றோர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பெரியண்ணன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராணுவத்திலிருந்து விடுமுறை பெற்று 15 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
சொந்த ஊருக்கு வந்தவுடன் போச்சம்பள்ளிக்கு சென்று கடந்த 28-ந்தேதி அனுப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது நண்பர் உதவியுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்று அங்கு உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.
திருமணம் முடிந்த கையுடன் தேன்நிலவு கொண்டாடுவதற்காக தனது காதல் மனைவியுடன் பெரியண்ணன் ஊட்டிக்குச் சென்று அங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக தெரிகிறது.
பின்னர் தேன் நிலவையும் கொண்டாடிய காதல் தம்பதியினர் 4 நாட்கள் முடிந்த நிலையில் தனது மனைவியை பெரியண்ணன் ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையே அனுப்பிரியா வீட்டில் மாயமான விவகாரம் தெரியவந்து, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனுப்பிரியாவை தேடிவந்தனர்.
இந்த நிலையில், மனைவியை பெரியண்ணன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பெரியண்ணன் உறவினர்கள் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அனுப்பிரியவை அவரது வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட பெரியண்ணன் போச்சம்பள்ளி அழைத்து வந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து அனுப்பிரியா பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், ராணுவ வீரர் பெரியண்ணன் காதல் திருமணம் செய்து கொண்ட அனுப்பிரியாவுடன் வாழ முடியாது என்று போலீஸ் நிலையத்தில் அடாவடியுடன் கூறியுள்ளார்.
இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காதல் ஜோடி பெரியண்ணன்-அனுப்பிரியா ஆகியோரை போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் ஆன்லைன் மூலம் பழகி காதலாகி, திருமணத்தில் முடிந்த அந்த பெண்ணின் வாழ்க்கை தற்போது ஆப்லைனில் முடிந்த நிலையில், வாழ்க்கையை தொலைத்த பெண்ணின் நிலை குறித்து பரிதாபமாக பெற்றோர் வருத்தத்துடன் காணப்பட்டனர்.
இது போன்று பல இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நம்பி தங்களது வாழ்க்கையை பலரும் இழந்து வருகின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
- ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது.
- நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ராமகிருஷ்ணபதி ஊராட்சியில் ஒரு புதிய சிவன் கோவில் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டுமானத்தின் போது, அங்கு இருந்த பழைய கற்கால சிவலிங்கம் அருகிலுள்ள ஒரு கூரை கொட்டாயில் தற்காலிகமாக வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஒரு விந்தையான நிகழ்வு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தினந்தோறும் மதியம் 12 மணிக்கு, ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது. இந்த நிகழ்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. சேவலின் இந்த தெய்வீக தரிசனம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், இன்பத்தையும், ஆன்மீக உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு, கோவில் கட்டுமானம் முடிந்து கருவறை உருவாகும் வரை தொடரும் என்று மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கருவறை வெளியில் இருக்கும் இந்த கற்கால சிவலிங்கத்தை நோக்கி ஒரு பறவை இனமான சேவல் தினசரி வந்து தரிசனம் செய்வது, அதன் உண்மையான ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இந்த விந்தையான நிகழ்வு ராமகிருஷ்ணபதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதை ஒரு தெய்வீக அடையாளமாகக் கருதி, கோவில் கட்டுமானம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இந்த நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
- நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.
- என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.
என் மீது தீவிரம் காட்டும் போலீசார் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களில் தீவிரம் காட்டாதது ஏன் ? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சீமான் வீட்டில் ஒட்டப்பட்டசம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் காவலாளி, உதவியாளரை போலீசார் அழைத்து சென்றதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால் எனக்கு அசிங்கமில்லை.
என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறது.
நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.
என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.
சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் அமர வைத்து விசாரிக்க வேண்டும்.
என் மீது புகாரளித்த பெண்ணிடம் குற்றத்திற்கான சான்றை கேட்க வேண்டும், அந்த நாடகத்தை காண காத்திருக்கிறேன்.
பெரியார் விவகாரத்தில் என்னை சமாளிக்க முடியாமல் இந்த பெண்ணை வைத்து முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது.
- நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று ஓசூர் வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது, மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்.
மறு சீரமைப்பு குறித்து பேசுபவர்களை நம்ப முடியாது. இப்போது பேசுவார்கள், பிறகு இதனை விட்டுவிடுவார்கள்.
இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை நிலைப்பாடு அல்ல அவ்வப்போது பேசுவார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்.
மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது. ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை. இந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்கிறார்கள்.
இதனால் நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம்.
அதேபோலத்தான் தொகுதி மறு சீரமைப்பு என்பது, தேர்தலில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். அதில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவும் நைஜீரியாவும் மட்டும்தான் இந்த வாக்கு எந்திரத்தை வைத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளும் ஊழலில் மோசமான நாடாக உள்ளது. மற்ற உலக நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜப்பான் தயாரித்து வருகிறது. அந்த நாடே வாக்கு எந்திரத்தை வைத்துக் கொள்வதில்லை.
அமெரிக்காவில் மனித கழிவுகளை எந்திரத்தில் அள்ளுகிறார்கள், வாக்கை வாக்கு சீட்டில் போடுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனை அல்ல வைக்கிறார்கள், எந்திரத்தில் வாக்களிக்கிறார்கள்.
டிஜிட்டல் என்று கூறிவிட்டு 42 நாட்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பெட்டிகள் முடங்கி கிடந்தது. ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியுமா. அதுபோன்ற மாறுதல்கள் செய்ய வேண்டும். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பதவியில் இருக்கும் போது இன்னொரு பதவிக்கு போட்டியிடுவதை தடுக்க வேண்டும். இடைத்தேர்தல்களை நீக்க வேண்டும். அது தேவையில்லாதது.
மாறாக இரண்டாவது இடம் பிடித்தவரை வெற்றியாளர் என அறிவிக்க வேண்டும். மீதியுள்ள காலத்தில் மக்கள் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு, தமிழ்நாடு என்றாலே வெறுப்பாக உள்ளது. காமராஜர், அண்ணா, இவர்களுக்கு பிறகு அரசியல் நேர்மை, தூய்மை இறந்து விட்டது. கருணாநிதி முதல்வரான பிறகு, தமிழகத்தில் தீய அரசியல் ஆட்சி தொடங்கி விட்டது.
சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
+2
- குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் ஒருவரை நேற்று கிருஷ்ணகிரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் ஓடிய போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. இதில் சுட்டு பிடிப்பட்ட வாலிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில், அதில் மேலும் சில ஆபாச வீடியோக்கள் இருந்தனர். இதில் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ந்தேதி மதியம் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வந்தனர்.
அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மலைக்கு வந்த பெண்ணையும், உடன் வந்த நபரையும் கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்டவற்றை பறித்தனர்.
பின்னர் காம வெறி தலைக்கேறிய அந்த 4 பேரில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த நேரம் உடன் இருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் பெண்ணுடன் வந்த நபரின் செல்போனை பிடுங்கி அவர் போனில் இருந்த ஜி.பே வாயிலாக ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் மலையில் இருந்து கீழே வந்து அழுத அந்த பெண்ணை அந்த பகுதியில் இருந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். அப்போது அந்த பெண் நடந்தவற்றை கூறி விட்டு போலீசிடம் புகார் அளிக்காமல் நேராக ஊருக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.
போலீசாரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் என தெரியவர அங்கு சென்று அவரிடம் புகார் விவரத்தை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிய வந்தது.
இதில் கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், போலீசார் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் குமார், விஜயகுமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். அந்த நேரம் போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது முட்டில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சுரேஷ் சுருண்டு விழுந்தார். போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதே போல தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசன், அபிஷேக், சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், நாராயணன் ஆகிய 4 பேரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது கைதான சுரேசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் பார்த்த போது அதிர்ந்து போனார்கள்.
அதில் ஏராளமான பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனியாக வந்த பல இளம்பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளான். இவ்வாறு எத்தனை இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான நாராயணன் காலில் மாவு கட்டு போட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மலை பகுதியில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வந்திருந்தனர். அவர்களில் அந்த பெண்ணை 4 பேர் மிரட்டி நகையை பறித்தனர். இதில் 2 பேர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றவாளிகள் 4 பேரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களில் 2 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
மற்ற 2 குற்றவாளிகளை தேடி வந்தோம். அவர்கள் பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக இருப்பதாக தகவல் வந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சென்றனர்.
அந்த நேரம் குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் 2 போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர்.
அந்த நேரம் போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில், தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
- குற்றவாளிகளை 2 பேரையும் ஆஸ்பத்திரியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்துடன் சையத்பாஷா மலைக்கு சென்றனர்.
அப்போது அங்கு போதையில் வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக தெரிகிறது. மேலும், அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்காத நிலையில் போலீசாரே தாமாக வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் தனிப்படை அமைத்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் 2 பேரும் கிருஷ்ணகிரி பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது குற்றவாளிகள் 2 பேரும் போலீசார் கத்தியால் தாக்கினர். இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு உள்ளது.
காயமடைந்த 2 குற்றவாளிளையும், அவர்கள் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார் என 4 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளை 2 பேரையும் ஆஸ்பத்திரியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய அரசு, மாநில அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
- நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களை புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி அருகே கரடி அள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான், நிதியுதவி கிடைக்கும் என மத்திய மந்திரி கூறுவது, சர்வாதிகார மனப்பான்மையை காட்டுகிறது. மும்மொழி கல்வி கொள்கைகயை அ.தி.மு.க. எந்த சூழ்நிலையி லும் ஏற்காது. அ.தி.மு.க. பொருத்தவரை அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுகிறோம். அண்ணா எதிர்த்த கொள்கைகளை நாங்களும் எதிர்க்கிறோம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்காக பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார். மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். அரசியல் வேறு, ஆட்சி வேறு. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக சென்றதால் தான், தமிழகத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரெயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு, மாநில அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மேலும், மத்திய அரசு பணிகளில் ஏற்கனவே, தென்மாநில மக்களின் வேலைவாய்ப்புகள் பறிப்போகிறது. தற்போது மொழியை திணிப்பதன் மூலம் எதிர்காலத்தில், வேறு திட்டங்களை புகுத்தி மாநில அரசை அடிமையாக கொண்டு வந்துவிடும்.
மேலும், மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் புத்தகமாக அச்சிட்டு வழங்கியதை போல், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களையும் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவது தான். முதலமைச்சர் இதன் மீது கவனம் செலுத்தி கடுமையான எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.
- எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவில் இருக்கின்ற சட்டவிரோதமாக குடியேறியதாக இந்திய மக்களை வெளியேற்றுகின்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக செய்தி வந்ததும் உடனடியாக இந்திய அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும்.
குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்க வேண்டும், மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்க விஷயத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.
தமிழகம் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால்தான் தமிழகத்திற்கு முழுமையான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதற்கு இந்தி பேசாத மாநிலங்களை முழுவதையும் மிரட்டுகின்ற வகையில் கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.
அ.தி.மு.க. கொள்கை வேறு, மற்ற கட்சிகள் கொள்கை வேறு, அ.தி.மு.க. மதச்சார்பற்ற கொள்கை உடையது.
அனைத்து மதங்களையும் ஒரு முகமாக பார்க்கின்ற கட்சி, எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும் என்றார்.
- ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது.
- ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1-ந் தேதி நடந்தது. இந்த திருமணத்திற்கு அந்த மாணவன் இரவில் சென்று உள்ளான்.
அப்போது அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள உசேன் (வயது 42) என்பவர் திருமண மண்டபத்தில் உள்ள கழிப்பறையில் வைத்து அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தான். அவர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், யாரிடமும் நடந்த சம்பவம் குறித்து கூற வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தான். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவனை சக மாணவர்கள் சிலர் கேலி,கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மாணவனை காப்பாற்றினர். இதனால் பள்ளி முன்பு அப்பகுதி பொதுமக்கள் நேற்று திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் உசேனை பிடித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மாணவன் மற்றும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கைதான ஆசிரியர் உசேனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கிருஷ்ணகிரி அருகே மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோபாலன் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தன்னுடைய சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்தை தேன்கனிக்கோட்டை ஒசூர் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார்.
ஆனால் பணம் வர வில்லை என கூறி வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் சென்ற பின் கோபாலன் கார்டை பயன்படுத்தி ரூ.18,300 பணம் எடுத்து உள்ளார். தன்னுடைய செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கண்ணன், தனிபரிவு தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் ஏ.டி.எம். மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தை வைத்து தேடி வந்தனர்.
தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் இதே போல் புகார்கள் வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தேன்கனிக்கோட்டை-ஒசூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு, ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 20 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து தேனிகனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஸ்ரீதர் கடந்த 1 வருடங்களாக பணம் எடுக்க வரும் வயதான நபர்களை குறி வைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் நுழைத்து அவர்கள் கூறும் பாஸ் வேர்டை அடித்து பணம் வரவில்லை என கூறி அனுப்பி விட்டு, பின்னர் அவர்கள் கொடுத்த அசல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து திருடியதாகவும், மேலும் திருடிய பணத்தை சூதாடியும், ஒரு மோட்டர் சைக்கிளையும் வாங்கியதாக ஸ்ரீதர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஸ்ரீதர் இது போன்று பலரிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா?
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செங்கோட்டையன் அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்.
- முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணன் செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
புரட்சித் தலைவர் மறைவிற்கு பின்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழிநடத்தியபோது, இயக்கத்திற்கு ஒரு தளபதியாக செயலாற்றியவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவர் உழைப்பிற்கு ஏற்ப புரட்சித் தலைவி உயர்ந்த பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார்.
புரட்சித் தலைவி அவரை எந்தளவிற்கு மதிப்போடும், மரியாதையோடும் வழி நடத்தினார்களோ அதேபோல் இன்றளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார், மூத்த தலைவராக இருக்கக்கூடிய செங்கோட்டையன் அவர்களை மதித்து அழைத்து செல்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணன் செங்கோட்டையனை பொறுத்தவரை இந்த இயக்கத்தோடு ஒன்றிணைந்து இருப்பவர். அவரோடு அந்த மாவட்டத்தில் இருந்த முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.
ஆனால் அதே மாவட்டத்தில் இருக்கின்ற தலைவர் செங்கோட்டையன், பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் நம்முடைய உழைப்பால் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது என்ற சிந்தனையோடு இந்த இயக்கத்திற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. என்ற இயக்கம் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த உரிமையும் இல்லை.
பொதுச்செயலாளர் இ.பி.எஸ். குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை. அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக விமர்சிக்கலாம். எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு டி.டி.வி. தினகரனுக்கு உரிமையில்லை.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பாதுகாப்புக்காக Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டிருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாக த.வெ.க. தலைவர் விஜயை தன்பக்கம் இழுப்பதற்காக Y பிரிவு பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறினார்.
- தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கத்தி முனையில் மிரட்டி மூகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பர்கூர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலபள்ளி கல்லேத்துப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் சாலையில் சுந்தரேசன் (வயது65) என்பவர் வசித்து வருகிறார்.
விவசாயியான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை யாரும் இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுந்தரேசன் வீட்டின் அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த சுந்தரேசன் எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்து இருந்து 3 நபர்கள் கதவின் அருகே வந்து சுந்தரேசனை வீட்டிற்குள் தள்ளி கதவை சாத்தி கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரேசனை மிரட்டினர். அப்போது அவர் சத்தம்போடவே அவரை வெட்டுவது போல் மர்ம நபர் ஒருவர் கத்தியை வீசும்போது சுந்தரேசனின் கையில் வெட்டியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தனது கணவரின் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த மஞ்சுளாவும் அங்கு வந்தார். அப்போது இருவரையும் கத்தி முனையில் மர்ம நபர்கள் மிரட்டி பீரோவில் இருந்த நகைகளும், மஞ்சுளா அணிந்திருந்த தாலி உள்பட 20 பவுன் நகைகளை பறித்தனர்.
மேலும், பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். உடனே கணவன்-மனைவி இருவரும் திருடன், திருடன் என்று சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த 3 மர்ம நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு உடனே அவர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. தங்கதுரை மற்றும் பர்கூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கணவன்-மனைவி இருவரும் மட்டும் தோட்டத்திற்குள் வீட்டில் வசித்து வருவதை நோட்டமிட்டு 3 மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேசன் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தரேசனையும், அவரது மனைவியையும் மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் காட்டுத்தீ போல்அந்த பகுதியில் பரவியதால், அவர்களது உறவினர்கள் உடனே சம்பவ நடத்த வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.