search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் உயர்ந்தது
    X

    சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் உயர்ந்தது

    • சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டில் 8,305 ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நிலவழிகாட்டி மதிப்புகள் ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2021-ல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2012-ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகளை மீண்டும் கடைபிடிப்பதாக, பதிவுத்துறை 2023-ல் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து பகுதிகளுக்குமான நில வழிகாட்டி மதிப்புகளை 70 சதவீதம் வரை உயர்த்தும் பணிகள் துவங்கியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பை 10 சதவீதம் வரை அரசு உயர்த்தி உள்ளது.

    வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதனை தற்போது சீரமைத்துள்ளது.

    இதன்படி ஆலந்தூர் சாலையில் ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.5,500 ஆக இருந்தது. நேற்று முதல் ரூ.6,100-ஆக உயர்ந்துள்ளது.

    ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரு சதுர அடி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,600-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அபிராமபுரம் 3-வது தெருவில் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17, 600-ஆக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 2.19 லட்சம் தெருக்களில் உள்ள 4.46 கோடி சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது. மற்ற ஊர்களில் அந்தளவுக்கு உயர்வு இல்லை.

    புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், 8,305 ஆவணங்கள் புதிய மதிப்பீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×