என் மலர்
திருவள்ளூர்
- பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் சாணார் பாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மகும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினர்.
மேலும் பூஜை அறையில் இருந்த பித்தளை பூஜை பொருட்களையும் சுருட்டி சென்று விட்டனர்.
பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரம ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம கும்பல் அள்ளி சென்று இருந்தனர்.
இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
- மேயர் பிரியா, நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூர் வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், கமல், ராஜகோபால், நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
- நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பஞ்செட்டி சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.49.28 கோடி செலவில் 4 மாடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்டப்படுகிறது.
சுமார் 6.35 ஏக்கர் பரப்பளவில் 6 நீதிமன்ற வளாகங்கள் இதில் வருகின்றன. இதற்கான கட்டுமான பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏ.டி.எம். மையம், தபால் நிலையம், கேண்டீன் ஓய்வறை, கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் அகலமான சாலை வசதி உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் வருகின்றன.
கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்னேரி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை, சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ், தர்மதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூந்தமல்லி:
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி வந்தது. லாரியை டிரைவர் முத்துப்பாண்டியன் ஓட்டினார்.
அந்த லாரி வேலப்பன்சாவடி பாலத்தின் மீது ஏற முற்பட்ட போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
லாரி கீழே கவிழ்ந்ததில் அதில் இருந்த பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரிடிரைவர் முத்துப்பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் வரவ ழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவர் முத்துப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது.
- மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி முழு கொள்ளவை எட்டியது. பின்னர் மழை குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் புழல் ஏரிக்கு சிறியகால்வாய் மற்றும் ஓடை, ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 196 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏற்கனவே புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து இருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
இன்று காலை நில வரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3222மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 209 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்ட உள்ளது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் 22.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3248 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது.
- மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
- தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உரையாற்றிானர்.
அப்போது அவர் கூறியதாவது:-
மிக மிக முக்கியமான நாளில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் பெற்று, 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுந்தர குமார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.
அந்த சூழலில் வெற்றியோடு இந்த கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த அளவுக்கு ஒரு பயனற்ற பழிவாங்குகின்ற ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட்.
அப்படி ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள்.
அதில், தமிழ்நாட்டிற்கென ஒரு திட்டத்தை கூட அவர் அறிவிக்கவில்லை. திட்டம் மட்டும் இல்லை தமிழ்நாடு என்கிற வார்த்தையை ஒரு முறை கூட அவர் பயன்படுத்தவில்லை.
அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு மீது பாசம். ஆனால், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்ற பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.
பிற மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அங்கு தேர்தல் வர இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு அம்மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பீகார் மாநிலத்திற்கு மட்டும் பல்லாயிர கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.
இது பீகார் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக போட்ட பட்ஜெட் மாதிரி தெரியவில்லை. பீகார் மாநிலத்தில் தன் கூட இருக்கிற நிதிஷ் குமாரின் கூட்டணியை உடைத்துவிட்டு அவரின் காலை வாரிவிட்டு அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என்கிற ஒரே திட்டத்தோடு போட்டிற்கிற பட்ஜெட் இது.
ஏன் என்றால் பாஜகவின் வரலாறு அப்படி.
மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
ஈரோடு கிழக்கில் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்துகிறது.
தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
- தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
தமிழகத்திற்கு பல நிறுவனங்கள் மற்ற மாநிலம் செல்வதாக ஆளுநர் எவ்வாறு கூறுகிறார் ? நம்மிடம் உளள நிறுவனங்கள் மற்ற மாநிலங்களு்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆளுநரின் ஆசை.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாராட்டு தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. நகர்ப்புற வளர்ச்சியில் இந்தியாவிற்கே சென்னை தான் முன்னுதாரணம் என பாஜக மூத்த தலைவரே கூறியுள்ளார்.
ஆளுநர் ரவியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் பதவியில் இருந்தால் தான் நமக்கு அவர்களே பிரச்சாரம் செய்வார்கள்.
ஆன்மிகம் வேறு அரசியல் வேறு என்று பகுத்தறிந்து பார்ப்பதே தமிழ்நாடு. மாநிலத்தின் அமைதியை கெடுக்க விரும்பினால் ஏமாந்து போவீர்கள், திருந்துங்கள், அல்லது திருத்தப்படுவீர்கள்.
மத்திய அரசின் உரையை ஜனாதிபதி வாசிப்பதை போல் மாநில அரசின் உரையை ஆளுநர் வாசிப்பதே மரபு. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது மாநில அரசின் உரையை பேரவையில் வாசித்தார் காங்கிரஸ் அரசு நியமித்த ஆளுநர்.
உ.பி கும்பமேளாவில் 40 ரேப் பலியான நிலையில் 30 பேர் பலி என கணக்கு காட்டுகிறது பாஜக அரசு. கும்பமேளாவில் நடந்ததை நியாயப்படுத்தி பேசுகிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
- தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டை நாட்டின் முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமாக தனியார் முதலீடுகள் வருவதை உறுதி செய்துள்ளோம்.
பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
வறுமை இல்லாத பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு அமைதியான பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மதவாத அரசியல் நடத்தி மக்களை ஒரே மயக்கத்தில் வைத்து அரசியல் ரீதியாக லாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது.
வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நினைப்பே மத்திய அரசுக்கு வராது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் ஒன்றுமே இல்லை. பேரு தான் இந்தியாவுக்கான பட்ஜெட், ஆனால் உள்ளே எந்த திட்டங்களும் இல்லை.
பட்ஜெட்டில் திருக்குறளை கூறினால் போதும் தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே வரிச்சலுகை.
பீகாருக்கோ, ஆந்திராவுக்கோ நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. தமிழகத்தை புறக்கணிப்பது ஏன் என்பது தான் கேள்வி.
கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா ஆந்திரா என கூறிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் பீகார் பீகார் என கூறினார்.
பட்ஜெட்டில் நாடு என்றால் வெறும் மண் அல்ல, மக்கள் என்ற தெலுங்கு மொழி கவிதையை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டினார்.
சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பீகார் பெயர் 6 முறை வந்தது. மதுரை எய்ம்ஸ், புதிய ரெயில் திட்டம், குடிநீர், வீடு என மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களிடம் அழிந்து வரும் கடல்வாழ் ஆமைகளின் இனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இனப்பெருக்கத்திற்காக கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாக்கவும், கடலில் ஆமைகள் செல்லும் வழித்தடத்தில் மோட்டார் படகுகளை இயக்கி அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெகிழி கழிவுகள், ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தலைமையில் பழவேற்காடு பறவைகள் சரனாலய வணவர் நரசிம்மன் கடலோர பாதுகாப்பு அதிகாரி சபாபதி ஆகியோர் மாணவர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
- தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 213 பேருக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.
ஆனால் அதிகாரிகள் பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயனாளிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பட்டா வழங்கிய இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறாத மனைகளின் பட்டாவை ரத்து செய்து நிலமற்ற வேறு நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதை கண்டித்தும், உடனடியாக இடத்தை அளவீடு செய்ய வலியுறுத்தியும் பயனாளிகள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மதன், வக்கீல் வேல்முருகன் ஆகியோரின் தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
- கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (சனி) அதிகாலை முதல் கடுமையான பனி பொழிவு காரணமாக சாலையில் எதிரே நடந்து செல்பவர்களை கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.
மேக மூட்டம் போல பனியானது சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்து பனி பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த பனி பொழிவானது, காலை 8 மணியை கடந்தும் சற்றும் குறையவில்லை. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. பெரும்பாலான வாகனங்கள் பனி பொழிவு காரணமாக விபத்தை தவிர்க்கும் பொருட்டு சர்வீஸ் சாலையில் சென்றதால் போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இது தவிர கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் கடும் பனி பொழிவு காரணமாக புறநகர் ரெயில் பயணிகள் ரெயில்களின் வருகையை கூட தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது விரைவு ரெயில்கள் அப்பகுதியில் செல்கின்றதா? என்பதை கூட அறிய முடியாத நிலை நீடித்தது. கடந்த சில நாட்ளை விட இன்றைய தினம் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.