என் மலர்
திருவள்ளூர்
- பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
- தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 213 பேருக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.
ஆனால் அதிகாரிகள் பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயனாளிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பட்டா வழங்கிய இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறாத மனைகளின் பட்டாவை ரத்து செய்து நிலமற்ற வேறு நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதை கண்டித்தும், உடனடியாக இடத்தை அளவீடு செய்ய வலியுறுத்தியும் பயனாளிகள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மதன், வக்கீல் வேல்முருகன் ஆகியோரின் தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
- கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (சனி) அதிகாலை முதல் கடுமையான பனி பொழிவு காரணமாக சாலையில் எதிரே நடந்து செல்பவர்களை கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.
மேக மூட்டம் போல பனியானது சாலைகளை முழுமையாக ஆக்கிரமித்து பனி பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த பனி பொழிவானது, காலை 8 மணியை கடந்தும் சற்றும் குறையவில்லை. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. பெரும்பாலான வாகனங்கள் பனி பொழிவு காரணமாக விபத்தை தவிர்க்கும் பொருட்டு சர்வீஸ் சாலையில் சென்றதால் போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இது தவிர கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் கடும் பனி பொழிவு காரணமாக புறநகர் ரெயில் பயணிகள் ரெயில்களின் வருகையை கூட தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது விரைவு ரெயில்கள் அப்பகுதியில் செல்கின்றதா? என்பதை கூட அறிய முடியாத நிலை நீடித்தது. கடந்த சில நாட்ளை விட இன்றைய தினம் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
- குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
- குட்கா பதுக்கி விற்ற பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த பெங்களூரை சேர்ந்த அப்ரர் அகம்மது, லாரி டிரைவரான சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் மப்பேடு பஜார் பகுதியில் குட்கா பதுக்கி விற்ற பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.
- பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும் மதகு பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.
- மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி டிசம்பர் 12-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதன் பின்னர் மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. தற்போது பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மா பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 380 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டு கடலில் கலந்து வருகிறது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விட்பபட்டது.
மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். இதில் 3.645 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 22.33 அடியாக உள்ளது. 3.205 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும் மதகு பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- ஊராட்சி செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கொடூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறாததால் மீஞ்சூர் ஒன்றிய பற்றாளர் முத்துலட்சுமி தலைமையில் கொடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேசன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
மேலும் கிராம சபை கூட்டத்தை பார்வையிடுவதற்காக வந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதில்முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பானு பிரசாத், முன்னாள் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், ஊராட்சி செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார்.
- சக பயணிகள் பரிதாபப்பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.
அரக்கோணம்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீராஜ்குமார். இவர் பெங்களூரு செல்வதற்காக பீகாரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
ரெயில் பெரம்பூர் வந்த போது அவருக்கு பல்வலி ஏற்பட்டது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள். வயிறு வலி என கூறினால் உடனடி சிகிச்சை கிடைக்கும் என நினைத்தார்.
தனக்கு கடும் வயிறு வலி ஏற்பட்டதாக கூறி ரெயிலில் உருண்டு புரண்டு துடித்தார். வலி தாங்க முடியாதவர் போல் நடித்து அட்டகாசம் செய்தார். சக பயணிகள் பரிதாப பட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர்.
மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே நிலைய மேலாளர் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனை டாக்டர்கள், உதவியாளர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை என குழுக்களாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
ரெயிலில் பயணம் செய்பவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி நடைமேடை 1-ல் அனுமதித்து ரெயிலை நிறுத்தினர்.
தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் நீராஜ் குமார் வயிற்றை காண்பிக்காமல் வாயை திறந்து பல்வலி என கூறினார்.
இதனை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்று வலிக்கான மாத்திரை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் பல் வலி என கூறியதால் ரெயில்வே டாக்டர்கள் கடிந்து கொண்டனர். பல் வலிக்கான மாத்திரையை வழங்கினர்.
மேலும் அந்த நபரை இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான்.
- சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி விமானப் படை ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து கோல்போஸ்ட் தலையில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக விளையாடியபோது கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் ஆத்ரிக் (7) என்ற சிறுவன் மயக்கம் அடைந்துள்ளான். இதையடுத்து நண்பர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவனை பரிசோதித்த டாக்டர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது.
- தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி நாளை காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையல், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
- புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் பூண்டி ஏரிக்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. அதேபோல், பருவ மழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் போதிய நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3.231 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. அதாவது 100 சதவீதம் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. அதேபோல் 1.081 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 346 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 32.01 சதவீதம் நீர் உள்ளது.

இதேபோல் 3.300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3.136 டி.எம்.சி. இருப்பு மூலம் 95.03 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 471 மில்லியன் கன அடி இருப்பு மூலம் 94.20 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3.645 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3.289 டி.எம்.சி. இருப்பு மூலம் 90.23 சதவீதம் நீர் இருப்பு இருக்கிறது.
1.465 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1.465 மில்லியன் கன அடி இருப்பு மூலம் ஏரி 100 சதவீதம் நிரம்பி உள்ளது.
13.222 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த 6 ஏரிகளிலும் சேர்த்து 11.938 டி.எம்.சி. நீர் இருப்பதன் மூலம் 90.29 சதவீதம் நீர் மொத்த இருப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான நீர் கையிருப்பில் உள்ளது. பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தொடர்ந்து புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால் அனைத்து ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
- போலீசார் கட்சூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை ஆந்திரா தமிழக எல்லையில் உள்ளது. இந்த கிராமம் வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி செல்வதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் படி பென்னாலூர் பேட்டை போலீசார் கட்சூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக நிற்காமல் சென்ற வரை போலீசார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்தது திருவள்ளூர் அடுத்த காக்கலூர் கிராமத்தை சேர்ந்த ஹரிணி (33) என்ற திருநங்கை என்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை சென்னையில் விற்பனை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
- பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடிவீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
- கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து கடந்த மாதம் 12-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர்மட்டம் குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையாலும் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடிவீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏரிக்கு தொடர்ந்து 450 கனஅடி தண்ணீர் இன்னும் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 1 டி.எம்.சி. தண்ணீர் இப்படி வீணாக கடலில் போய் சேர்ந்துள்ளது. இது சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை ஆகும்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் நிரம்பி உள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து இந்த ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் உபரிநீராக வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பலத்த மழையின் போது பூண்டி ஏரி நிரம்பும் போதெல்லாம் உபரி நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீரும் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு உபரி நீரை சேமிக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.