என் மலர்
இந்தியா
- கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.
- சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியின் சிறப்புப் பிரிவு போலீசார் வடகிழக்கு டெல்லியில் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் பிரபல தாதா ஹாசிம் பாபாவின் மனைவி சோயா கானை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 270 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைபற்றப்பட்டது.
போலீசார் விசாரணையில் சோயா கான் பற்றி பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
டெல்லியை கலக்கி வந்தவர் பிரபல தாதாவான ஹாசிம் பாபா, இவருடைய 3-வது மனைவி சோயா கான். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஹாசிம் பாபாவை திருமணம் செய்து கொண்டார்.
கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தல் வழக்குகள் தொடர்பாக ஹாசிம் பாபா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து கணவரின் இடத்துக்கு சோயா கான் வந்தார். கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட போதிலும் எதிலும் தனது பெயர் வராமல் பார்த்து கொண்டதால், போலீசார் இவரை நெருங்க முடியாமல் இருந்தது.
இதுவரை அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கும், ஆதாரம் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதனால் பல ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் அவர் டிமிக்கி கொடுத்து வந்தார். தற்போது ஆதாரத்துடன் போலீஸ் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். சோயா கான் தலைமையிலான கும்பல், போதைப்பொருள் கடத்தலை முக்கிய தொழிலாக செய்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தனது கணவர் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி திகார் சிறைக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக அவர் தனது கணவருக்கு பகிர்ந்து வந்துள்ளார்.
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, சோயா கானின் தாயார் கடந்த 2024-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது தந்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு பிரதமர் மோடி உதவி செய்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தலைநகர் டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுடன் சேர்ந்து, சரத் பவார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு உதவி செய்தார். பின்னர் சரத் பவாருக்கு மோடி கொடுப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர் மோடி, "மகாராஷ்டிரா மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஒரு புதிய உச்சத்தை அளித்திருக்கிறது. சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
சரத் பவாரும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளது, இந்தியா கூட்டணியில் விரிசலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and NCP chief Sharad Pawar at the inauguration of the 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan.(Source: DD News) pic.twitter.com/W2TJpqyeqv
— ANI (@ANI) February 21, 2025
- உற்சாகமான திருமண கொண்டாட்டம் சட்டென்று அமைதியானது.
- வீடியோ பல லட்சம் பார்வைகளைப் பெற்றது.
திருமணம் என்றாலே மகிழ்ச்சி, உற்சாக கொண்டாட்டமாக இருக்கும். அப்போது மணமக்கள், அவர்களின் தோழிகள், நண்பர்கள் உற்சாகமாக நடனமாடுவது, கேலியாக பேசி சிரிப்பது வாடிக்கையே.
ஆனால், ஒரு திருமண விழாவில், உற்சாக மிகுதியில் ஆடிய நடனம் களேபரத்தில் முடிந்தது. ஆம், தங்கையுடன் மற்றொரு வாலிபர் ஜோடி சேர்ந்து ஆடுவது ஒரு அண்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விபரீத விளைவை ஏற்படுத்தியது.
அந்த சகோதரர் திடீரென மணமேடைக்கு வந்து, தனது தங்கையை கோபத்துடன் வெளியேறச் சொல்கிறார். அடுத்த கணமே தங்கையுடன் ஜோடியாக ஆட்டம்போட்ட வாலிபரின் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த வாலிபர் சரிந்து விழுந்தார். இதனால் உற்சாகமான திருமண கொண்டாட்டம் சட்டென்று அமைதியானது. வாக்குவாதம் ஏற்பட்டது.
வாலிபர், நடனமாடியவரை தாக்கும் வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. வலைத்தளவாசிகள் அறைந்த வாலிபரை ஆதரித்தும், கண்டித்தும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். வீடியோ பல லட்சம் பார்வைகளைப் பெற்றது.
- அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த அரசு முயற்சிக்கலாம் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டிறைச்சி கடத்தியதாக இளைஞர் ஒருவர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீசார் வாகன சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடித்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன இறைச்சி என்பதை அவர் கூற மறுத்துள்ளார். இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது தரப்பு நபர், ஒரு கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.
2 தரப்பு வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி விற்கப்படும் இறைச்சி மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.
- 5 மாநிலங்களில் 11 இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.
- ஆந்திரா மற்றும் பீகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்படும் ரிசர்வ் வங்கி முத்திரை மற்றும் சரிகைநூல் ஆகியவற்றுடன் கூடிய உயர் ரக காகிதத்துடன் 2 பேர் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் இவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் மற்றும் பெங்களூரு நகரங்களில் சோதனை நடத்தப்பட்டபோது பிடிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்தநாள் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மற்றும் அரியானாவின் பிவானியில் அச்சு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மராட்டியம், அரியானா, தெலுங்கானா, பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் 11 இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் 7 எந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மும்பையின் விக்ரோலி பகுதியில் ரூ.50, ரூ.100 நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சங்கமனர் மாவட்டம் மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தில் 2 பேரும், பெல்காமில் 3 பேரும் கைதானார்கள். இதுபோல ஆந்திரா மற்றும் பீகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பாரதிய நியாய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் போர்வைகள் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் அரசாங்கத்தின் 'லக்பதி தீதி' திட்டம் குறித்த விவாதத்தின் போது பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை "ஆப்கி தாதி" (உங்கள் பாட்டி) என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனையடுத்து ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு சட்டமன்றத்திற்குள் போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
VIDEO | Congress MLAs continue their sit-in protest inside Rajasthan Assembly over the suspension of six of its members from the remaining period of the Budget Session for "indecent behaviour" in the House.Quilts and mattresses have been arranged for the protesting Congress… pic.twitter.com/MxFTCWL0VG
— Press Trust of India (@PTI_News) February 21, 2025
- அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் பேருந்து நடத்துநரிடம் மராத்தியில் பேசினார்.
- மராத்தியில் பேசிய பெண்ணிடம் கன்னடத்தில் பேசுங்கள் என்று நடத்துநர் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேச தெரியாது எனக்கூறிய பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட நடத்துநர், அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் என்னிடம் மராத்தியில் பேசினார். அதற்கு தனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்தப் பெண் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி என்னைத் திட்டினார். அப்போது திடீரென்று ஏராளமான மக்கள் ஒன்றுகூடி என்னை தாக்கினர்" என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் நடத்துநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர்.
பெலகாவி மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி பேசக்கூடிய மக்கள் கணிசமானோர் வாழ்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது அங்கு எல்லைப் பிரச்சினையைத் தூண்டி விடுகின்றன. இந்த மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டுமென மராத்தி பேசக்கூடிய மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை கன்னட மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுகிறது.
- பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிரா முதல் மந்திரி பட்னாவிசுக்கும், துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். அந்தத் திட்டத்தை பட்னாவிஸ் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன்.
சட்டசபையில் எனது முதல் உரையிலேயே தேவேந்திர பட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறுகிறேன் என்றார்.
- உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும்.
- அதானி விவகாரமானது தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றார்.
லக்னோ:
சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் டிரம்புடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, தனிப்பட்ட பிரச்சனைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ளார். லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்சனை என்றும், இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
நரேந்திர மோடிஜி, இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இது நாட்டின் விஷயமாகும்.
உத்தர பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. மத்திய அரசு தனியார் மயமாக்கலை நாடுகின்றது.
உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும் என தெரிவித்தார்.
- டி.கே.சிவகுமாரின் கருத்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
- சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது என்றது பாஜக.
பெங்களூரு:
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவை 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்ற முடியாது.கடவுளால் கூட அதைச் செய்யமுடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் துணை முதல் மந்திரி சிவகுமாரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சித்த ராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு திறமையற்றது.
துணை முதல் மந்திரி சிவகுமார் போலல்லாமல் பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
அவர் தனது தனிப்பட்ட லட்சியங்களுக்கு நிதியளிப்பதற்காக பெங்களூரை பணப் பசுவாக மட்டுமே கருதுகிறார்.
பெங்களூருவின் குடிமைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும் பொறுப்பை டி.கே.சிவகுமார் ஏற்கவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும். திறமையான ஒருவருக்கு அவர் வழிவிட வேண்டும் என தெரிவித்தது.
- ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைப்பு.
- 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டம்.
நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதேபோல், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதில் முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
- சிபிஎஸ்இ அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
- ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது.
அதன்படி, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என்பது புதிய நடைமுறை ஆகும்.
அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறகு, விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா ? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும்.
ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.