search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உயிர் காக்கும் மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள்!
    X

    உயிர் காக்கும் மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள்!

    • கொரோனா நோய் பரவல் காலக்கட்டம் என்பது உலக நாடுகளுக்கு பெரும் சிக்கலான காலமாக அமைந்தது.
    • மருத்துவத் தொழிலை புனிதமாக கருதுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    மருத்துவம் என்பது தொழில் அல்ல, அது ஒரு சேவை. சேவையை விட ஊழியம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு மருத்துவரும் ஆஸ்பத்திரியை கோவிலாக நினைக்கிறார்கள். அதேபோல நோயாளிகளும் ஆஸ்பத்திரியை கோவிலாகத்தான் நினைத்து வருகிறார்கள்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். என்னை பொருத்தவரையில் மாதா, பிதா, குரு, மருத்துவர், தெய்வம் என்று தான் சொல்வேன். கொரோனா நோய் பரவல் காலக்கட்டம் என்பது உலக நாடுகளுக்கு பெரும் சிக்கலான காலமாக அமைந்தது. அந்த நேரத்தில் கோவில்கள் கூட மூடப்பட்டது. அப்போது திறந்திருந்ததும், செயல்பட்டதும் மருத்துவமனைகள் மட்டும் தான் என்பதை நான் பெருமையோடு கூறுவேன்.

    வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்ட காலம் அது. ஆனால் மருத்துவர்கள் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொட்டு வைத்தியம் அளித்தார்கள். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். செவிலியர்களும் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். நாட்டுக்காக உயிரை கொடுக்க தயாராக இருப்பவன் ராணுவ வீரன். அதேபோல நோயாளிகளுக்காக தங்கள் இன்னுயிரையும் கொடுக்க தயாராக இருப்பவன் தான் மருத்துவன். தனது கஷ்டத்தை பொருட்படுத்தாமல் நோயாளிகளின் கஷ்டத்தை உணர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மனிதருள் மாணிக்கமாக மருத்துவர்கள் திகழ்கிறார்கள்.

    உயிர் வாதையில் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உயிரை காணும் போதெல்லாம் மருத்துவரின் மனதில் அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என்ற நம்பிக்கை மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் ஒப்பிடவே முடியாது. இந்த உலகில் தெய்வமே இல்லை என்று வாதிடுபவர்கள் கூட மருத்துவர்களின் அளப்பரிய சேவையை கண்டு அவர் வடிவில் தெய்வத்தை கண்டதாக கூறுவது உண்டு.

    தெய்வங்கள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை. அன்பும், சேவையும், கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவே தான் இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள். அவர்களே மறுபிறவி தரும் கடவுள்கள். மருத்துவர் என்பவர் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு பிரதிநிதி. அல்லது கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் என்று சொல்லலாம்.

    மற்றவர்களின் துன்பத்தில் பங்கு கொள்பவன் தான் மனிதன். மற்றவர்கள் துன்பத்தை தனது துன்பமாக கருதி எவன் ஒருவன் அந்த துன்பத்தை நீக்க முற்படுகிறானோ அவன் தான் மருத்துவன். மருத்துவச் சேவையில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த எண்ணம் உண்டு. நோயாளி, வேதனையால் துடிக்கும் சமயத்தில் உடனடியாக மருத்துவச் சேவை செய்ய வேண்டியது ஒவ்வொரு மருத்துவனின் முக்கியப்பணியாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பணத்தை கொடு, உனது நோயை சரி செய்கிறேன் என்று கூறுபவன் வியாபாரியாகி விடுகிறான்.

    மருத்துவத் தொழிலை புனிதமாக கருதுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் 5 ரூபாய்க்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் ஆலோசனைக்கு 2 ஆயிரம் ரூபாய் வாங்கும் மருத்துவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்தியா, பாமர மக்கள் ஏராளமானோரை கொண்ட நாடு. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, 2 வேளை பட்டினி கிடப்பார்கள். அப்படி கஷ்டப்படும் மக்களும் இருக்கிறார்கள். அத்தகைய ஏழைகளிடம் ரூ.1000 கொடு, ரூ.500 கொடு என்றால் அவன் எங்கே போவான். அதற்காகத்தான் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை எள்ளளவும் குறை சொல்ல முடியாது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை காட்டிலும் அங்கு பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன. அரசு மருத்து வமனைகள் அபரிமிதமான சேவைகளை செய்து வருகிறது. நல்ல மருத்துவர்கள் பலர் அங்கும் பணியாற்றுகிறார்கள். ஏழைகளுக்கு மருத்துவம் செய்யக்கூடிய மருத்துவன் உண்மையான மருத்துவன். அது அரசு மருத்துவமனையாகவோ அல்லது தனியார் மருத்துவமனையாகவோ இருக்கலாம்.

    மருத்துவருக்கு 6 மணி நேர வேலை, 8 மணி நேர வேலை என்றெல்லாம் கிடையாது. மருத்துவன் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதை தான் மருத்துவப்படிப்பும் சொல்லிக் கொடுக்கிறது. அதற்காக 24 மணி நேரமும் அவன் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. குறைந்தது 14 மணி நேரம் மனப்பூர்வமாக வைத்தியம் செய்ய வேண்டும். கடவுள் தந்திருக்கக் கூடிய இந்த அற்புத பணியை கஷ்டப்பட்டு செய்யக் கூடாது. இஷ்டப்பட்டு செய்ய வேண்டும். அவர் தான் மருத்துவருக்கு தகுதியான நபர்.

    உதாரணத்துக்கு ஒரு டாக்டருக்கு காலை 8 மணியில் தொடங்கி மாலை 6 மணியுடன் பணி முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். சரியாக 6 மணிக்கு வேலை முடிந்து விட்டது என்று ஓடி விட முடியாது. அப்போது தான் ஒருவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஹார்ட்அட்டாக் என வருவார். அந்த நபரை தனது தந்தை என நினைத்துக் கொண்டு பாருங்கள், வேலை முடிந்தது என்று ஓடுவோமா, ஓட மாட்டோம். அவர் உடல் நிலை சரியாகும் வரை அவருடன் இருப்போம். அதைப்போலத்தான் அனைத்து நோயாளிகளும். அதனால் கால, நேரம் பார்க்காமல் பணியாற்றக்கூடியவன் மருத்துவன்.

    மருத்துவனுக்கு ஓய்வே கிடையாது. மற்ற பணிகளில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கொடுக்கிறார்கள். மருத்துவனுக்கு விடுமுறை கொடுக்க முடியாது. காரணம் ஞாயிற்றுக்கிழமை அன்றும் நோயாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது, பிரசவங்கள் நடக்கின்றன. விபத்துக்கள் நடக்கின்றன. எனவே தனக்கான சுக, துக்கத்தை மறந்து நோயாளிகளுக்காக இரவு- பகல் பாராமல் பணியாற்றுகிறான். அவனே மருத்துவன்.


    ஜி.பக்தவத்சலம்

    அத்தகைய மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் முதல்- மந்திரியாக பணியாற்றியவர் மறைந்த பி.சி.ராய். அவர் வெளிநாட்டில் போய் படித்த பெரிய டாக்டர். அவர் மக்களுக்காக வாழ்ந்ததால் மக்களின் டாக்டர் என அழைக்கப்பட்டார். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து 14 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். முதலமைச்சராக பதவி வகித்தபோதும் கூட மாலை நேரங்களில் 2 மணி நேரம், 3 மணி நேரம் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தார். அவர் வந்த பின் தான் தரம் நிர்ணயிக்கக் கூடிய மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நிறுவினார்கள். பி.சி.ராய் ஜூலை 1-ந் தேதி பிறந்தார். அதே நாளில் தான் மரணத்தையும் தழுவினார்.

    மருத்துவச் சேவையை அனைவரும் அறியும் வண்ணம், அவரது பெயரில் 1976-ம் ஆண்டு முதல் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு டாக்டர் ராய் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 1984-ல் டாக்டர் ராய் விருதை எனக்கு வழங்கி கவுரவித்தார்கள் என்பதை இந்நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 2005-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்.

    மேடை கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் கைதட்டலை தான் பாக்கியமாக கருதுவார்கள். அதேபோல நோயாளி பிழைத்துக் கொண்டார் என்ற வார்த்தை தான் மருத்துவர்களுக்கு சன்மானம். மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதது, பல கோடி ரூபாய் மதிப்பை கொண்டது. அத்தகையாக நோயாளிகளை காப்பாற்றுகிறோம், அதற்காக அவர்கள் உண்டியலில் போடும் பணம் போலத்தான் அவர்கள் மருத்துவர்களுக்கு கொடுக்கும் கட்டணம். மருத்துவர்களை நோயாளிகள் கடவுளாக பாவிக்க வேண்டும். அதேபோல மருத்துவர்கள், நோயாளிகளை கடவுளாக பார்க்க வேண்டும்.

    இந்த நேரத்தில் நோயாளிகளுக்கும் சில ஆலோசனைகள் வழங்குவது அவசியமாகிறது. நோய் வந்தால் வைத்தியம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் வியாதி வராமல் தடுப்பது மருத்துவத்துறையில் வருமுன் காக்கும் திட்டம் எனப்படுகிறது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள், அரை மணி நேரம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அதுவும் நன்றாக மூச்சை இழுத்து விட்டு மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள். அப்படியே தாய், தந்தையரை, கடவுளை நினைத்துக் கொண்டு தியானம் செய்யுங்கள். அதிகாலை 5 மணிக்கு தியானம் செய்து பாருங்கள், உங்களுக்கு நல்ல எண்ணங்கள் பல தோன்றுவது நிச்சயம்.

    தினமும் 3 கிலோ மீட்டர் வீதம் மாதத்துக்கு 100 கிலோ மீட்டர் ஓட வேண்டும் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். மைதானம் இல்லாவிட்டால் நின்ற இடத்தில் இருந்தே ஓடி பயிற்சி மேற்கொள்ளுங்கள். நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும். பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும். முக்கால் வயிறுக்கு சாப்பிட்டாலே போதுமானது. அனைத்து வகையான காய்கறி உணவுகளையும் சாப்பிட வேண்டும். முடிந்தவரை அசைவ உணவை தவிருங்கள். மதுப்பழக்கத்தை கைவிடுங்கள், சிகரெட் பிடிக்காதீர்கள். வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். தாய், தந்தையரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கோபம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கோபம் வந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். நாக்கின் சுவைக்கு அடிமையாகாமல் வெளி உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். அசைவ உணவு சாப்பிடும் போது கொழுப்பு அதிகரிக்கும்.

    பெருகி வரும் மக்கள் தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள், போதைப் பொருட்கள், நெருக்கடி மிகுந்த வாழ்க்கை முறையால் மனிதர்கள் முன் எப்போதையும் விட அதிகமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களின் உடலையும், உள்ளத்தையும் காத்து நிற்கும் மருத்துவர்களின் சேவையை போற்றுவோம்.

    Next Story
    ×