search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சருக்கு கேட்குமா?...  கருணாபுரத்தின் மரண ஓலம்!
    X

    முதலமைச்சருக்கு கேட்குமா?... கருணாபுரத்தின் மரண ஓலம்!

    • ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழப்பு காரணமாக கள்ளக்குறிச்சி முழுக்க கண்ணீர் வெள்ளம் பூண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    "இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. உள்பட பத்து காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவவரும் கைது செய்யப்பட்டு தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது," என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


    ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய மரணங்கள் மாநிலத்தை துயரத்தில் ஆழ்த்தும் நிலையில், ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை மாற்றுவது, நிவாரணம் அறிவிப்பது உள்ளிட்டவைகளை நடவடிக்கைகளாக எடுப்பதையே ஆளும் அரசுகள் வாடிக்கையாக கொண்டுள்ளன.

    ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு, யூடியூபர் சங்கர் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    தொடர் குற்றச்சாட்டுகளுக்கு அரசு முறையாக செவி சாய்க்காமல் இருந்ததே, இத்தனை உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக எதிர்க்ட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உயிரிழப்புகளை கவனத்தில் கொண்டேனும், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

    ஆளும் அரசு மீது விழுந்துள்ள கறையை முதலமைச்சர் எவ்வாறு துடைத்தெறிய போகிறார். கள்ளச்சாராயமோ, விஷ சாராயமோ... எப்படி பெயர் வைத்து அழைத்தாலும் அது ஒரு உயிர் கொல்லியே. இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்....இதுவும் கடந்து போகும் என மக்கள் விடமாட்டார்கள்..காரணம், இது தொடர்கதையாகும் என்பதால். என்ன செய்ய காத்திருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

    Next Story
    ×