என் மலர்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு"
- தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
- காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.
திருவனந்தபுரம்:
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்ற நிலையில், கேரள மாநில மக்களவை தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதனால் அந்த கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு பலம் பொருந்திய கட்சியாகவே கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்து வருகின்றன.
அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் மக்களவை தொகுதிகள். இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் எம்.பி.க்களாக உள்ளனர். அதிலும் 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடும் அதே நேரத்தில், பாரதிய ஜனதாவையும் கம்யூனிஸ்டு கட்சிகள் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.
ஏனென்றால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு பெருகி வருவது தான் அதற்கு காரணம். 2014 தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு 10 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
அந்த வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் அதிகரித்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 13 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
தற்போது அதன் செல்வாக்கு கேரளாவில் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அதனை வைத்து கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி அங்கு கால்பதித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல் பட்டது. அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா களமிறக்கி இருக்கிறது.
இதன் காரணமாக தற்போதைய தேர்தலில் கேரளாவில் சில தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள மக்களவை தேர்தலில் களம் காணுகின்றன.
மாநிலத்தில் தங்களின் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை அதிகரித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.
மேலும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தன. சில மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது.
தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேரள உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வந்தபிறகே அந்த கேள்விக்கான பதில் தெரியவரும்.
- வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் ராகுல்காந்தி.
- ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா களம் இறக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார் ராகுல்காந்தி.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்த்து உள்ள கம்யூனிஸ்டுகள், கேரளாவில் மட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனை பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் இறங்கியதற்கு இடது சாரி கட்சியும், ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் ராகுலுக்கு எதிராக வயநாடு பிரசாரத்தில் இடதுசாரி கூட்டணியினர் பெரும் அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடும் நிலையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வயநாட்டில் பிரசாரத்தை பெரிதுபடுத்தவில்லை. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன் சென், சுபாஷினி அலி ஆகியோர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், அவர்கள் வயநாடு தொகுதிக்கு செல்லும் வகையில் பிரசார நிகழ்வு இல்லை. மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணா மட்டுமே, வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்திய செயலக உறுப்பினரும் ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் ஆகியோரும் வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ராகுலுக்கு எதிராக இடது சாரி கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அடிப்படை வசதிகள் செய்யக்கோரி நடத்தினர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி, தொரப்பாடி, 49-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.
இதில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து சாலைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். 445 ஏக்கரில் உள்ள ஏரியை தூர்வாரி சுற்றுக்கால்வாய்களை உயர்த்தி மதகுகளை உயர்படுத்தி ஏறி வடிகால் செல்லும் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும்.
பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குடிநீர் வசதி மற்றும் வீதிகள் தோறும் பொதுமக்கள் பயன்படுத்த போதுமான குடிநீர் பொதுக் குழாய்களை அமைத்து தர வேண்டும்.
பொதுமக்களும் இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் சமுதாயக்கூடம், நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பூங்காவை சீர்படுத்தி முதியவர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொரப்பாடி ரெயில்வே கேட் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நோக்கங்களை மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மூத்த நிர்வாகி கணேசன், நகர செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சங்கரி, முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நடவடிக்கையை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் 80 நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர்.
- சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர்.
திருவனந்தபுரம்:
கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்து காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அனைத்து மாநிலத்திலும் கொண்டு செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.
இதில் முதல் கட்டமாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமான நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் முன்பு கூட்டணியில் இருந்த கேரளா காங்கிரஸ் (மாணி பிரிவு) கட்சியை மீண்டும் தங்கள் அணிக்கு இழுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர். அவர்களுக்கு மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு உள்ளது. இதனாலேயே அவர்களை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர். இதனை கருத்தில் கொண்டும் தான் காங்கிரஸ் இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- சிவகங்கையில் இ.கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகர இ.கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூட்டம் பொருளாளர் சேகர் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், நகரச் செயலாளர் மருது, துணைச் செயலாளர் சகாயம் பாண்டி, ஆட்டோ சங்க செயலாளர் பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர்கள் குஞ்சரம் காசிநாதன், சாரதா அமிர்தசாமி, சசிகுமார் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருகிற மே 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை நகர் முழுவதும் நடைபயணம், தெருமுனை பிரசாரம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றி சமூக விரோத செயலுக்கு இடமளிக்கும் வகையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் தலை, நரம்பு, இருதய மற்றும் கேன்சர் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த வித வசதியும் இல்லை. இந்த குறையை உடனடியாக அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். சிவகங்கையின் கிழக்குப்புறத்தில் உள்ள சுற்றுச்சாலையை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை நகர் பகுதியில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
சிவகங்கையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு எந்த அரசு அலுவலகங்களையும் மாற்றக்கூடாது. சிவகங்கையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ெரயில் விட வேண்டும். வட மாநிலங்களுக்குச் செல்லும் ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் முன்பாக நின்று குப்பை வரி பிரச்சனையை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.
- அ.தி.மு.க.வை குறை கூறுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் 2023-2024 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேசினார். அவர் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. குறிப்பாக அம்மா உணவகத்தால் ஏராளமான ஏழை பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அதற்கான போதிய நிதி ஒதுக்கவில்லை. அதேபோல் குப்பை வரியை குறைக்க வேண்டும் என பல கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். குப்பை வரிவிதிப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கான வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த குறைபாடுகளை களைய வேண்டும் என்று பேசினார்.
அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் செல்வராஜ், கடந்த ஆட்சியின்போது தான் வரி உயர்த்தப்பட்டது என்று தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் முன்பாக நின்று குப்பை வரி பிரச்சனையை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர். அப்போது மேயர், கவுன்சிலர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து பேசும்படி கூறினார். அப்போது விவாதத்தின் போது நீங்கள் பதில் கூறுங்கள். உறுப்பினர்கள் பதில் கூறக்கூடாது என்றனர். இதனால் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய மேயர் தினேஷ் குமார், அவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து பேசக்கூடாது. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே வெளிநடப்பு செய்கிறார்கள் என்றார். தொடர்ந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே வந்தனர். அப்போது அ.தி.மு.க.வை குறை கூறுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை என்றனர். இதனால் மீண்டும் இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
- சேதமடைந்துள்ள பஸ்களை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும்
- கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நாகர்கோவில்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பல பஸ்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், தங்க மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மோகன், ராஜ்குமார், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- அருப்புக்கோட்டையில் இன்று கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- தரமான சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகள் உள்ளன. இதனை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சியின் 16-வது வார்டான திருநகரம் பகுதியில் புதிய சாலை அமைக்க நகராட்சி சார்பில் ரூ. 1 கோடியே 16 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பகுதியில் ஏற்கனவே உள்ள குண்டும், குழியுமான சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மேலேயே புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை கண்டித்தும், தரமான சாலையை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திருநகரம் விருதுநகர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகரச் செயலாளர் காத்த முத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது.
- ராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்தும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமை தாங்கினார். இதில் கணேசமூர்த்தி, வழக்கறிஞர் பகத்சிங், வரதராஜன், சேத்தூர் நகரச் செயலாளர் ராஜா, அய்யணன், மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க ேகாரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெத்தானியாபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு பஸ்சில் பயணம் செய்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறிவிழுந்து பலியானதன் காரணமாக அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.
பயணிகள் பஸ்படிகட்டில் பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது. நெருக்கடியான நேரத்தில் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையான இடங்களில் சிக்னல் அமைக்க வேண்டும். இறந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். குரு தியேட்டர் சந்திப்பு அருகில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருசாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.பகுதிகுழு செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் தொடங்கி வைத்தார். மேற்கு 1-ம் பகுதிகுழு செயலாளர் கணேசன், பகுதிகுழு உறுப்பினர் சுதாரணி ஆகியோர் பேசினார். மாவட்டச் செயலாளர் கணேசன் நிறைவுரையாற்றினர்.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன், மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் பாண்டி, மல்லிகா, சிவராமன், கவுன்சிலர் ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும்.
- நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கையாக பேசினர். அ.தி.மு.க. கவுன்சிலரும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க. ஊழல் செய்துள்ளது என்பதை ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும். இந்த குழு விசாரணைக்கு முழுமையாக அ.தி.மு.க. ஒத்துழைப்பு வழங்கும். பாதாள சாக்கடை மற்றும் நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும். இதுபோல் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் அமைக்க இட வசதி இல்லை. இதன் காரணமாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் ஒரு வரையறை செய்து எந்தெந்த பகுதியில் இடம் உள்ளது என்பது குறித்து தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே அந்த பகுதிகளில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடி தார் சாலை அமைக்க வேண்டும்.மின் விளக்குகள் சரிவர எரியாததால் அதனை சரி செய்ய வேண்டும். அதேபோல் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடப்பதால் அதனை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் பேசியதாவது:- காண்டிராக்ட் எடுத்தவர்கள் எந்த வேலையையும் சரிவர செய்யாமல் அரைகுறையாக விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மட்டும் அதிகப்படியான வேலைகள் நடந்துள்ளது. ஆனால் வடக்கு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை தோண்டுவதற்கு குழி தோண்டும்போது அனைத்து வீடுகளில் குடிநீர் பைப்பையும் உடைத்து உள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் அதற்கு பதில் அளித்து பேசினார்.
முன்னதாக கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரவி , கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒவ்வொரு கூட்டத்தின் போது ஸ்மார்ட் சிட்டி ஊழலையே கோரிக்கையாக வைத்து பேசுகின்றனர். என்ன ஊழல் நடந்தது என்று விசாரியுங்கள். அதற்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும். திரும்ப திரும்ப அதையே பேசி நேரத்தை வீண் அடிக்காதீர்கள். மக்களுக்கான பிரச்சினையை தீர்க்கும் வகையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றனர். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், கம்யூனிஸ்டு கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.