search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air Pollution"

    • 2013-ம் ஆண்டு, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
    • மாசுக்கு எதிரான போரில் சீனா ஒரே நாளில் வெற்றியைப் பெறவில்லை.

    சீனா கடந்த சில ஆண்டுகளாக மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளாலும் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பெருமளவில் மாசுபாட்டைச் சமாளித்து வருகிறது. CREA அறிக்கையின்படி, சீனாவின் காற்றின் தரம் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் மேம்பட்டது. ஏனெனில் 2023 உடன் ஒப்பிடும்போது நுண் துகள்கள் (PM2.5) 2.9 சதவீதம் குறைந்துள்ளது.

    கரடுமுரடான துகள்கள் (PM10), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), மற்றும் சல்பர் டை ஆக்சைடு (SO2) ஆகியவற்றின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு காரணமாக சீனா கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்தது. ஏறக்குறைய ஆண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டு, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. PM2.5 அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 101.56 மைக்ரோகிராம்களை எட்டியது.

    அதே அளவுரு 10 ஆண்டுகளில் கடுமையாக மேம்பட்டது. 2023 ஆம் ஆண்டில், சீனாவில் PM2.5 காற்று மாசு அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 38.98 மைக்ரோகிராம் இருந்தது.

    மாசுக்கு எதிரான போரில் சீனா ஒரே நாளில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் திட்டங்களை அது செயல்படுத்த வேண்டியிருந்தது.

    ICLEI-உள்ளாட்சிகள் நிலைத்தன்மைக்கான அறிக்கையின்படி, முக்கிய மாற்றத்தின் முக்கிய காரணிகளில் ஒன்று நகர்ப்புற ரெயில் விரிவாக்கம். நாட்டின் காரை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பு நிலையான இயக்கம் மாதிரியாக மாற்றப்பட்டது.

    ஒரு அதிநவீன ஒருங்கிணைந்த காற்றின் தர கண்காணிப்பு நெட்வொர்க் 2016 இல் நிறுவப்பட்டது, இது எச்டி செயற்கைக்கோள், ரிமோட் சென்சிங் மற்றும் லேசர் ரேடார் போன்ற உயர்தர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது என்று அறிக்கை கூறுகிறது. இது மாசுபாட்டை சிறப்பாக கண்காணிக்க சீனாவுக்கு உதவியது.

    • புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
    • தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனம் தெரியாததால் மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்படுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்கள் கடுமையான புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி, அதனையொட்டிய உத்தர பிரதேச நகரங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    பனி போன்று புகை மூட்டம் அடர்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அருகில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளிவற்கு புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

    இன்று உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தில் பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கிழக்கு பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வே-யில் இரண்டு சரக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றான மோதி விபத்துக்குள்ளாகின.

    பானிபட்டில் இருந்து மதுரா சென்ற பேருந்து முன்னே சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் பேருந்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பரிசாபாத்தில் ஆக்ரா அருகே லாரி மீது கார் மோதி நின்ற நிலையில் அடுத்தடுத்த ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயம் அடைந்தனர். இதேபோன்று ஏராளமான சொகுசு கார்கள் விபத்தை எதிர்கொண்டன.

    புலந்த்ஷாஹ்ர் என்ற இடத்தில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். பதான் என்ற இடத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதியதில் ஆசிரியர் பள்ளிக்கு சென்ற வழியில் உயிரிழந்தார்.

    • இன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது.
    • இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது.

    டெல்லி இன்னும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பு இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புக்கு மாறி வருகின்றன.

    டெல்லி காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 40 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளுக்கு ஈடாகும் என்று கூறப்படுகிறது. இன்றைய தினம் [செவ்வாய்கிழமை] டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது.

    டெல்லியின் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளோடு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் காற்று மாசு பிரச்சனை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர பாராளுமன்ற எம்.பி.யுமான சசி தரூர் தனது சமூக வலைதள பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

     

    அவரது பதவில், 'உலகின் அதிக மாசுபட்ட நகரமாக டெல்லி அதிகாரப்பூர்வமாகவே மாறியுள்ளது. உலகின் இரண்டாவது அதிக மாசுபட்ட நகரமான டாக்கா [வங்க தேசம் தலைநகர்] நகரை விட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கொடுங்கனவை நாம் எதிர்கொண்டு வந்தாலும் நமது அரசு அது பற்றி ஏன் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

    கடந்த நானும் 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்கான காற்றின் தர வட்ட மேஜை கூட்டங்களை நடத்திவந்தேன், ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை, எனவே கடந்த வருடம் அதைக் கைவிட்டுவிட்டேன்.

    இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ வாழலாம் என்றுதான் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது
    • தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ளது

    டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

    டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது. இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் காற்றின் தரம் தாறுமாறாக குறைந்து வருகிறது. இதற்கிடையே மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் உடல்ரீதியான பலவித நோய்களும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் சிகெரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயங்களான புற்று நோய் உள்ளிட்ட  தீங்குகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் ஏற்படுகிறது என்ற ஒப்பீடு வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவிலேயே டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் உள்ளது. டெல்லியில் இருப்பது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது. அரியானாவில் இருப்பது ஒரு நாளைக்கு 29 சிகெரெட்டுகளை சுவாசிப்பதற்கு சமமாகும்.

    தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு நாளைக்கு 2 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளை விளைவிக்கும். இதேபோல், ஆந்திர தெலுங்கானாவில் தினம் 2 சிகெரெட்டுகள், கேரளா, கர்நாடகாவில் தினம் 1 சிகெரெட்டுகள் புகைப்பதற்கு ஈடாக காற்றின் தரம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

    • அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • இன்றும் நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. இது பேரழிவு அளவாக இருக்கிறது.

    அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசுக்களால் ஏற்படும் அடர்ந்த புகை, பஞ்சாபின் பல நகரங்களை சூழ்ந்துள்ளது. லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    அவர்கள் சுவாசப் பிரச்சனைகள், கண் பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசரநிலையை அம்மாகாண அரசு விதித்து இருக்கிறது. லாகூர், முல்தான் மாவட்டங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புகைமூட்டம் தற்போது ஒரு தேசிய பேரழிவாக உள்ளது என்றும் இது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் முடிந்துவிடாது. 3 நாட்களுக்குப் பிறகு நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 17-ந்தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து மோசமான நிலை இருப்பதால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகைமூட்டம் அதிகம் உள்ள லாகூர், முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது. அதன்படி அங்கு இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம்.
    • நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்

    இந்தாண்டு அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

    தீபாவளி அன்று தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆதலால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

    இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி போலீஸ் சார்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதையும் விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும், "எந்த மதமும் மாசுபடுத்தும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை. பேஷனுக்காக பட்டாசு வெடிப்பதாக கூறினால்.. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்ததால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனவே நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மமேலும் லாகூர் உலகின் மிகுவும் மாசுபட்ட நகரமாக மாறி உள்ளது.

     

    ஒரு கன மீட்டருக்கு ஐந்து மைக்ரோகிராம்களுக்கு மேல் உள்ள எதையும் அபாயகரமானது என்று உலக சுகாதர அமைப்பு வரையறுக்கிறது. ஆனால் இங்குள்ள நகரங்களில் காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 947 மைக்ரோகிராம்கள் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு அபாயம் என்று வரையறுத்ததை விட 189.4 மடங்கு அதிகமாகும்.

    • காற்று மாசு நிறைந்த நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
    • அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட பத்து நகரங்கள்.

    இந்தியாவில் அதிக காற்று மாசு நிறைந்த நகரமாக டெல்லி மாறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய அளவில் அதிக காற்று மாசு நிறைந்த நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    எனர்ஜி அன்ட் க்ளீன் ஏர் என்ற ஆராய்ச்சிக்கான சிந்தனைக் குழுவின் (CREA) மேற்கொண்ட ஆய்வின்படி, அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட பத்து நகரங்களும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அமைந்துள்ளன.

    இந்த நகரங்களில் காசியாபாத் (கன மீட்டருக்கு 110 மைக்ரோகிராம்), முசாபர்நகர் (103), ஹாபூர் (98), நொய்டா (93), மீரட் (90), சார்க்கி தாத்ரி (86), கிரேட்டர் நொய்டா (86), குருகிராம் (83), மற்றும் பகதூர்கர் (83) ஆகியவை அடங்கும்.

    டெல்லியின் காற்று மாசு அக்டோபர் மாத சராசரி அளவு செப்டம்பர் மாத சராசரி அளவான 43 மைக்ரோகிராம் கன மீட்டரை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

    • சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.

    சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

    இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.

    இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.

    ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று தரநிலை குறியீட்டில் ஆயிரத்தை கடந்து மோசம்.
    • மோட்டார் ரிக்ஷாவுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் போடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள லாகூரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில், தொடக்க பள்ளிகளை ஒருவாரத்திற்கு மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சுவாசம் மற்றும் அதன் தொடர்பான மற்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாகூரில் 1.4 கோடி பேர் வசித்து வருகிறார்கள். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    க்ரீன் லாக்டவுன் என்பதின் ஒரு பகுதியாக 55 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷா போன்றவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குள் திருமண மண்டபங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காற்றுமாசை குறைக்க செயற்கை மழைக்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    வார இறுதி நாளில் காற்று தரநிலை குறியீட்டில் காற்று மாசு லாகூரில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது பாகிஸ்தானில் மிகவும் மோசமான தரநிலை ஆகும்.

    இந்தியாவை ஒட்டியுள்ள கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த காற்று மாசால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என லாகூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது
    • அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.

    டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில் நீர்நிலைகளின் தரம் நாளுக்குநாள் சீர்கெட்டு வருகிறது. யமுனை நதி ரசாயன கழிவுகள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

    வாகன புகை, வேளாண் கழிவுகளை எரித்தல், ஆலையில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது. இதனால் சமீப நாட்களாக காற்று தரக்குறியீடும் மோசமடைந்துள்ளது.

    இது குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டவர்களின் சுகாதார நலனிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் தண்ணீர் குறைந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து துவாரகா பகுதிக்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால், அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.

    அதனை அப்படியே கொண்டு சென்று , டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டின் வெளியே தரையில் ஊற்றினார். அந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் அழுக்கடைந்து, கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசியுள்ளது. தான் கொண்டு வந்த இந்த கருப்பு நிற நீரை டெல்லி மக்கள் குடிக்கவா? என ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    குடிநீரின் நிலை மேம்படவில்லை எனில், துர்நாற்றம் வீசும் நீருடன் கூடிய லாரியுடன் வருவேன் என்று அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால் தினமும் 10 பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கேலியாக பொழுதுபோக்குவது அவருடைய வேலையா? என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

    • டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் 21 ஆயிரம் பேரிடம் ஆய்வு.
    • 69 சதவீதம் குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் நேற்றும் கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக டெல்லியில் மிகவும மோசமடைந்தது.

    டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31-ந்தேதி) இரவு காற்றின் தரநிலை 999 என்ற மோசமான நிலைக்கு சென்றதாக காற்று தரநிலை குறியீடு மூலம் தெரியவந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவிற்கு மோசமானதாகும்.

    இதன் காரணமாக டெல்லியில் 69 சதவீத குடுமபத்தினரில் ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது டெல்லியில் வசிக்கும் 10 குடும்பத்தில் 7 குடும்பத்தில் ஒருவராவது காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத், காசியாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் 21 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 69 சதவீதம் குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    62 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டது தெரிவித்துள்ளது. 46 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது மூக்கு ஒழுகுதல் போன்ற பாதிப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    31 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது. அதேபோல் 31 சதவீதம் குடும்பத்தில் ஒருவராவது தலைவலியால் அவதிப்பட்டது தெரியவந்துள்ளது.

    காற்று மாசால் 23 சதவீதம் குடும்பத்தில் ஒருவருக்காவது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 15 சதவீதம் குடும்பத்தில் ஒருவருக்காவது தூங்குவதில் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்றின் தரநிலை மோசம் அடைவதற்கு அண்டை மாநிலங்களாக அரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பது முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×