search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asking"

    • சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செஞ்சி:

    செஞ்சியை அடுத்த வல்லம் ஒன்றியம் பெரும்பூண்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீரை பிடித்து வந்து, அதை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பெரும்பூண்டியில் உள்ள செஞ்சி-நெசூர் சாலையில் காலிகுடங்களுடன் நேற்று காலை திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புருஷோத்தமன் மற்றும் வளத்தி இன்ஸ்பெக்டர் குமரபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள், ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அருகே உள்ளது கெங்கபுரம் கிராமம். இங்குள்ள அம்பேத்கர் காலனி பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீர்த் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற பயன்படும் மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் கெங்கபுரம் கிராமத்தில் கள்ளப்புலியூர்-வளத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம், வளத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், மேலும் குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகரிகள் உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
    முத்தம்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.
    லாலாபேட்டை:

    கடவூர் ஒன்றியம் வடவம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று கரூர்- பஞ்சப்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோ கரன் மற்றும் லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், முத்தம்பட்டி பகுதியில் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கரூர்- பஞ்சப்பட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி வார்டு எண் 22-ல் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தினமும் தண்ணீருக்காக பகல், இரவு என அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வேதனைக்கு ஆளான மக்கள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆணையர் சுதா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் போராட்டம் நடத்திய நாள் மட்டும் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

    அதன் பின்னர் இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால் போராட்டம் நடத்தினால் மட்டும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்கின்றீர்கள். ஆகவே தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் சுதா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்த பகுதியை பார்வையிட்டு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அந்த பகுதியை பார்வையிட சென்றதை தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    காவேரிப்பாக்கம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பனப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆயல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி டேங்க் ஆபரேட்டரிடம் பலமுறை முறையிட்டும், ஆயல் ஊராட்சி செயலாளர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக தங்கள் ஊருக்கு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட அவ்வைநகர், சவுளுப்பட்டி, கொட்டாவூர், நேருநகர், சித்தேஸ்வரநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஊராட்சி நிர்வாகம் பஞ்சாயத்து குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் ஆகியவை வழங்கி வந்தது. இந்த குடிநீரை கடந்த 3 மாத காலமாக முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று, பழைய குவார்ட்ஸ் பகுதியில் உள்ள தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழிதேவன், ஆனந்தன் மற்றும் தாசில்தார் பழனியம்மாள், அதியமான்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தனர். அப்போது 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும், ஊராட்சி செயலரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 
    குடிநீர் வினியோகிக்க கோரி கீழக்கணவாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தினர்.

    ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்தகிராமமக்கள் நேற்று காலையில் கீழக்கணவாய் பஸ் நிறுத்தம் அருகே பெரம்பலூர்-செட்டிக்குளம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன.

    இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பின்னர் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    போளூர் தாலுகா கல்வாசல் கிராமம் கருங்காலிகுப்பத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘போளூர் தாலுகா கருங்காலிகுப்பத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்து வந்த 2 ஆழ்துளை கிணறுகளில் ஒன்றில் சுத்தமாக நீர்வரத்து நின்று விட்டது. மற்றொரு ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை’ என்றனர்.

    இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்கள் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில், உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் குடிநீர் பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல எங்கள் கிராம மக்கள் குடும்பங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்ய உள்ளோம் என்று கூறி இருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வாடியான்களம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் நீர்தேக்கத் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக போதிய அளவு குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த வாடியான்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து குடிநீர் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை ஆணையர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    போச்சம்பள்ளி அருகே முதியோர் உதவித்தொகை கேட்டு முதியவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முதியவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

    அதன்படி போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேதோட்டம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி பாலேதோட்டத்தில் கொடமாண்டப்பட்டி - போச்சம்பள்ளி செல்லும் சாலையில் நேற்று முதியவர்கள் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் வெகு நேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் நிற்க முடியாத முதியவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
    அடிப்படை வசதிகள் கேட்டு புதுவளசல் கிராமமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோவில்பட்டி பகுதியில் நகராட்சியின் பராமரிப்பில் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இருந்து வந்தது. இதில் தற்போது மயான கொட்டகையை காணவில்லை. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் மனு அளித்து இருந்தோம். ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இனியாவது எங்களுக்கு புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கறம்பக்குடி தாலுகா புதுவளசல் கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் தேவைக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும். பஸ் நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலைக்கடை அமைத்துத்தர வேண்டும். புதுவளசல் ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். மேலும் குறைந்த மின்அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், காயம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இருந்து காலை 10 மணிக்கு மேல் எந்த பஸ்சும் இயக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் புதுக்கோட்டைக்கு வர வேண்டுமானால் காயம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவரங்குளத்திற்கு நடந்தே சென்று, பின்னர் பஸ் ஏறி புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கூறியிருந்தனர். 
    ×