என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladesh"

    • வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவர் ஆவார்.
    • சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் கருத்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    பஸ்லூர் ரஹ்மான் தனது பேஸ்புக் பதிவில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவில் உள்ள 7 வடகிழக்கு மாநிலங்களையும் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகியவற்றை) வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு  பரிந்துரைத்துள்ளார்.

    இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

    இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் நிலையின்மை நீடித்து வரும் சூழலில், முன்னாள் ராணுவ தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.

    இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தங்கியுள்ள சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கண்டறிய மணிப்பூர் காவல்துறை மாநிலம் தழுவிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோத வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய நாட்டினர் ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளதைக் கண்டறிய, சரிபார்ப்பு இயக்கத்தை நடத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இம்பால் பள்ளத்தாக்கின் லிலாங், மினுதோங், குவாக்டா, மாயாங் இம்பால், சோரா, கைராங் போன்ற பகுதிகளிலும், உரிய விசாக்கள் அல்லது அரசின் நுழைவு அனுமதிச் சீட்டு (ILP) இல்லாமல் சட்டவிரோத வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் தங்கியிருப்பதாகச் சந்தேகம் உள்ள பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

    அங்கீகரிக்கப்படாமல் வங்கதேச, பாகிஸ்தானிய நாட்டினர் இருப்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகளால் உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.
    • சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

    குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடந்த சோதனை நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சட்டவிரோத வங்கதேசத்தினரைப் பிடிப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. அகமதாபாத் காவல்துறையினரால் 890 சட்டவிரோத குடியேறிகளும், சூரத் காவல்துறையினரால் 134 பேரும் பிடிபட்டனர்.

    குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக குஜராத் காவல்துறை மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். இவர்களில் பலர் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.

    அவர்களின் பின்னணி மற்றும் குஜராத்தில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    மேலும் குஜராத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

    • ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடதுக்கீட்டை எதிர்த்து கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

    இதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமர் மாளிகையில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்று வரை அவர் இந்தியாவிலேயே உள்ளார்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடுகடத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன.
    • போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் (வயது 58) மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்நாட்டில் பாலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வங்கதேசம் செல்லும் அமெரிக்க பயணிகளை அந்நாட்டு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

    மேலும் IED குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும், அமைதியான கூட்டங்களையும் கூட தவிர்க்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

    ஏனெனில் சிறிய எந்நேரமும் அவை வன்முறையாக மாறக்கூடும். வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பயங்கரவாத வன்முறை அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    • சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
    • பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி மாணவர் போராட்டத்தால் கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உருவான இடைக்கால அரசின் தலைவராக அமைதிகான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதிவு ஏற்றார்.

    ஆனால் அந்நாட்டில் அமைதி திரும்பிய பாடில்லை. முஸ்லீம் பெரும்பான்மை வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த வருட  இறுதியில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இஸ்கான் தலைவர் சாமியார் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்ட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இந்த நிலையில் தற்போது இந்து தலைவர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தினாஜ்பூர் மாவட்டம் பசுதேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பபேஷ் சந்திர ராய் (வயது 58). இவர் வங்காதேச பூஜா உத்ஜபன் பரிஷத்தின் பீரால் பிரிவின் துணைத் தலைவராகவும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் பபேஷ் சந்திர ராய் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் பபேஷ் சந்திர ராயை கடத்தி சென்றனர். நராபரி கிராமத்திற்கு கொண்டு சென்று அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். 

    • ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
    • யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    இதன்பின் அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீவா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. முகமது யூனுஸ் அரசை ஷேக் ஹசீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனது அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களிடம் வீடியோவில் உரையாற்றிய அவர், வங்கதேசத்தின் வரலாற்றை, குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவாமி லீக்கின் பங்களிப்புடன் தொடர்புடையவற்றை யூனுஸ் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

    அவர் கூறியதாவது, "வங்காளதேச சுதந்திர இயக்கத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்படுகின்றன. சுதந்திரப் போராளிகள் அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து மாவட்டங்களிலும் நினைவகங்களை நாங்கள் கட்டினோம், ஆனால் அவை தற்போது எரிக்கப்படுகின்றன.

    யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?. நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும். அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர் (யூனுஸ்), அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார்.

    வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார். 

    • இந்த ரத்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.

    வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த TRANS SHIPMENT வசதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

    நேற்று (ஏப்ரல் 8) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    அதில், வங்கதேசம் தனது ஏற்றுமதி சரக்குகளை மூன்றாம் நாடுகளுக்கு, இந்தியாவில் உள்ள சுங்க நிலையங்கள் வழியாகவும், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் கொண்டு செல்ல அனுமதித்த 2020 ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரத்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் மூலம் வங்கதேசம், இந்தியா வழியாக பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மருக்கு இதுவரை வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது.

    ஆனால் ஒப்பந்தம் கைலயெழுத்தான 2020 முதலே இந்திய ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஆடைத் துறையில், இந்த ஏற்பாட்டை நீண்ட காலமாக எதிர்த்தனர். டிரான்ஸ்-ஷிப்மென்ட் -இன் கீழ் வங்கதேச பொருட்கள் இவ்வாறு இந்தியா வந்து செல்வதால் சுங்க நிலையங்களில் தங்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக அவர்கள் வாதிட்டனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த ரத்து வங்கதேசத்தில் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். முந்தைய வழிமுறையில், இந்தியா வழியாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட பாதை இருந்தது, போக்குவரத்து நேரம் மற்றும் செலவு குறைந்தது. ஆனால் இப்போது, அது இல்லாமல், வங்கதேச ஏற்றுமதியாளர்கள் தாமதம் மற்றும் அதிக செலவை எதிர்கொள்வார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சீனாவுக்கு வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார்.

    அங்கு பேசிய அவர், "இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார். சீனாவில் யூனுஸ் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

    • 2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
    • அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு ஓடிவிட்டனர் என வங்கதேச இடைக்கால அரசின் தகவல் ஆலோசகர் மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்துள்ளார்.

    வங்கதேசத்தில் காணாமல் போனர்வர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற ரம்ஜான் பண்டிகை விழா டாக்காவில் நடைபெற்றது. மனித உரிமை குழுவான மேயர் டக் (Mayer Dak) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மஹ்ஃபுஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக மஹ்ஃபுஜ் ஆலம் கூறியதாவது:-

    ஷேக் ஹசீனாவின் பெற்றோர்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் அல்லது கொலை செய்தலை ஷேக் ஹசீனா பயன்படுத்தியுள்ளார்.

    2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் தேர்தல் முறையை அழிப்பதாகும்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனின் அறிக்கைப்படி, தனிப்பட்ட பல்வேறு நபர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் தங்கி நாட்டிற்கு எதிராக ஹசீனா இன்னும் சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாஃபியா குழு போன்று அவாமி லீக் செயல்பட்டு வருகிறது. ஒருபோதும் மீண்டும் வங்கதேச அரசியலக்கு திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது.

    ஷேக் ஹசீனாவுக்கும், அவருடைய பயங்கரவாத படைகளுக்கும் அடைக்கலம் கொடுக்க இந்தியா தேர்வு செய்தது துரதிருஷ்டவசமானது. கிட்டத்தட்ட 1,00,000 அவாமி லீக் உறுப்பினர்கள் அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் 16 ஆண்டு கால அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. உடனடியாக வங்கதேசத்தில் இருந்து ரகசியமாக வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இவ்வாறு மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்தார்.

    வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து படுகொலை, ஊழல் தொடர்பாக 100-க்கும் அதிகமான வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டுள்ளது.

    மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது படுகொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது விசாரணையைத் தவிர்க்க வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

    • இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
    • இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

    வங்கதேசத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார். சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ்  இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.

    இந்நிலையில் நேற்று சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).

    இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

     சீனாவில் முகமது யூனுஸ் இந்தியாவை பற்றி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. வடகிழக்கு மாநில தலைவர்கள் மற்றும் அமைப்புகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரும் பொருளாதார நிபுணரான சஞ்சீவ் சன்யால் இதுபற்றி பேசும்போது, வங்கதேசத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும்போது, 7 இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பு பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். 

    • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    இந்த நிலையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல் நிலையம் வழக்குப்பதிவு (FIR) செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் அபய் எஜ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தற்போது உத்தரவிட முடியாது. உள்-விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தலையிட முடியாது. தற்போது உத்தரவிட்டால் முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும், உள்விசாரணை முடிவடைந்ததும், அனைத்து தகவல்களும் வெளியாகும். தேவைப்பட்டால் தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த முடிவுக்கு நாம் ஏன் இப்போதே செல்ல வேண்டும்? என நீதிபகள் தெரிவித்தனர்.

    • மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
    • சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டது.

    மியான்மரில் இன்று நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

    சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

     

    ×