என் மலர்
நீங்கள் தேடியது "Bathing Prohibited"
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை நீடித்து வருகிறது.
- இன்று காலை ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
குளிக்க அனுமதி
இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து சீரானதை தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் மெயினருவியில் மட்டும் 3-வது நாளாக தடை நீடித்தது.
அங்கும் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெயினருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க சென்றனர்.
அணை நிலவரம்
அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.
குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதை யடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.
இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.
அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.
அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 28.8,
பெருஞ்சாணி 32.4,
சிற்றார் 1-16.4,
சிற்றார் 2-18.2,
கன்னிமார் 6.2,
கொட்டாரம் 3,
மயிலாடி 4.8,
நாகர்கோவில் 5.4,
பூதப்பாண்டி 12.4,
முக்கடல் 10.4,
பாலமோர் 52.4,
தக்கலை 10,
குளச்சல் 5,
இரணியல் 6,
அடையாமடை 21,
குருந்தன்கோடு 3.8,
கோழிப்போர்விளை 12.4,
மாம்பழத்துறையாறு 6.4,
களியல் 18.6,
குழித்துறை 12.4,
புத்தன் அணை 29.2,
சுருளோடு 6.2,
ஆணைக்கிடங்கு 5,
திற்பரப்பு 14.8,
முள்ளங்கினாவிளை 14.8.
- அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கோவை:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி முதல் அருவிக்கான பாதை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் சாடிவயல் பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழிப்பாதையிலும் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதுதொடர்பாக வனஅதிகாரிகள் கூறுகையில், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடை உத்தரவு தொடரும்.
மேலும் மறுஉத்தரவு வரும்வரை பொதுமக்கள் யாரும் குற்றாலம் அருவியில் குளிக்க வர வேண்டாமென தெரிவித்து உள்ளனர்.
- அருவிகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது.
- குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது.
ஒருகட்டத்தில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் 5 கிளைகளும் ஒருசேர காட்சியளிக்கும் அளவு தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் நேற்று விடு முறை நாளில் குடும்பத்துடன் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயினருவிகளில் வெள்ளப்பெருக்கை தூரத்தில் நின்று பார்த்து ரசித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து இரவு முழுவதும் மலைப்பகுதியில் மழை பெய்தவண்ணம் இருந்ததால் வெள்ளப்பெருக்கு குறைய வில்லை.
இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் சாரல் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவில் சற்று தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்து வருகிறது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.
அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
- தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் போலீசார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வரு கிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்துக்கு 1500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.
இதனால் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் விடு முறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை யொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கொடிவேரியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் இது பற்றி தெரியாமல் பல்வேறு பகதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இரு சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். கொடிவேரியில் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து மக்கள் அணைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
- திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத நிலையிலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதகுகள் வழியாக 478 கனஅடியும், உபரி நீராக 378 கன அடியும் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறு ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.
இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று மாலை தடை விதிக்கப்பட்டது.

இன்று காலையும் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் குளிக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆனந்த நீராட வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 44.46 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.2 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 625 கன அடி தண்ணீர் வநம் சூழலில் 460 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது அதிக அளவில் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீரானது தற்பொழுது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மழை குறைந்துள்ள நிலையில், தண்ணீரின் அளவு அருவிகளில் குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் சரி செய்யும் பணிகள் தீவிரம்.
- தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடியது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்க ளும் ஏற்பட்டது. மெயின் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழ தொடங்கி உள்ளது. மெயின் அருவி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் கற்கள், மரக்கிளைகள் நடைபாதை முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அதனை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அருவி பகுதிகளை சுற்றி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அதனையும் சரி செய்யும் பணிகள் முழுமையாக நடைபெற்ற உடன் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் சீற்றம் குறைந்து மிதமாக விழத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து இன்று 5-வது நாளாக குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.