என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bribery Arrest"

    • பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
    • பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்து குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 39). இவர் பாப்பாபிடி தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவரிடம் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி சுகுமார் (52) என்பவர் தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்வதற்காக கேட்டுள்ளார். அதற்கு அவர் பட்டா மாற்றுவதற்கு ரூ.8 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.

    அலுவலகத்திற்கு சென்ற குமார் பணத்தை வி.ஏ.ஓ. செல்வராசிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் செல்வராசுவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தில் தீவிர சோதனையும் நடத்தினார்கள். அப்பொழுது பட்டா மாற்றம் செய்வதற்காக நீண்ட நாட்களாக வைத்திருந்த சில ஆவணங்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி னர்.

    கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. செல்வராசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக செல்வகுமார் கடையம் போலீஸ் நிலையத்தில் தினமும் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா போலீஸ்நிலையத்தில் வைத்து செல்வகுமாரிடம் வழக்கு தொடர்பாக பேசியுள்ளார். அப்போது வழக்கை சீக்கிரம் முடித்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை வெளியே எடுப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறிய அவர் அதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த நோட்டுகளை இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து இருந்தார். மேலும் அதற்கான கட்டணம் ரூ.42 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரமும், ஊழியர்களுக்கு கொடுக்க ரூ.6 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முகமது பிலால் இன்று காலை மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9 ஆயிரம் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின்பேரில் ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் இன்று காலை முகமது பிலால் கொடுத்தார். அப்போது அதில் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீதி பணம் ரூ.6 ஆயிரத்தை அங்கு பணிபுரியும் வயர் மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.

    அதன்படி இருவரும் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கமாடத்தெரு பகுதியில் உள்ளது. அதில் வீடு கட்ட அவர் முடிவு செய்தார்.

    இதையடுத்து நகராட்சியில் கட்டிட பிளான் அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதி மணி (56) என்பவரிடம் முறையாக அனுமதி கோரி மனு செய்துள்ளார். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் முறைப்படி செலுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று கட்டிட அமைப்பு வரைபட ஆய்வாளர் ஜோதி மணியை அணுகியபோது, அவர் கட்டிட வரைபட அனுமதி கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சால்வன் துரை ஆகியோரிடம் புகார் அளித்தார்.

    அந்த புகார் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய பணத்தை வாசுதேவனிடம் கொடுத்து அனுப்பினர். இந்தநிலையில் இன்று காலை வாசுதேவன் லஞ்ச பணத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த ஜோதிமணி, நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.10 ஆயிரம் பணத்தை ஜோதிமணி பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் தனி அறையில் வைத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் அதிகாரி ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற என்ஜினீயராக பாரதிகண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டு மனைகளுக்கு நகராட்சியில் திட்ட ஒப்புதல் பெறுவதற்கு கட்டணமாக ரூ.76 ஆயிரத்து 850-ஐ கடந்த வாரம் செலுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக நகராட்சியில் நகரமைப்பு திட்ட அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதிகண்ணன் விவரம் கேட்டார். அப்போது ஒரு வீட்டு மனைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நான்கு வீட்டுமனைகளுக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு என்ஜினீயர் பாரதிகண்ணன், நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணத்தை முழுவதும் செலுத்தி உள்ளேன். ஆகையால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    ஆனாலும் நகராட்சி அதிகாரி பர்குணன் லஞ்சம் கொடுத்தால் மட்டும் அடுத்த கட்ட பணிகள் நடக்கும் என்றும், திட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேறு வழியின்றி தவித்த பாரதி கண்ணன் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்து சென்றார்.

    இருந்தபோதிலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதி கண்ணன், இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, இன்று காலை 'கூகுள்பே' மூலமாக நகராட்சி அதிகாரி பர்குணன் செல்போன் எண்ணிற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை அனுப்பினார்.

    அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் பெற்ற பர்குணனை செல்போனுடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது ஆன் லைன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்றுள்ளாரா? என்று விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பரமக்குடி நகராட்சியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×