search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bull"

    • போலீசாரும் அங்கு திரண்டு அந்த காளையை போலீஸ் நிலைய மேற்கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர்.
    • கூட்டம் திரண்டதால் பீதி அடைந்த காளை மாடு மேற்கூரையில் இருந்து அருகே உள்ள வீட்டின் தகர கொட்டகை மீது பாய்ந்தது.

    உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஏறி நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ரேபரேலியில் சலோன் புறக்காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஏறி நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அப்பகுதியில் கூட்டமும் திரண்டது. அவர்கள் அந்த மாடு மீது கம்புகளை வீசினர். அதற்குள் போலீசாரும் அங்கு திரண்டு அந்த காளையை போலீஸ் நிலைய மேற்கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்தனர்.

    கூட்டம் திரண்டதால் பீதி அடைந்த காளை மாடு மேற்கூரையில் இருந்து அருகே உள்ள வீட்டின் தகர கொட்டகை மீது பாய்ந்தது. இதில் அந்த மாடு பலத்த காயம் அடைந்தது. பின்னர் அந்த மாட்டை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது.
    • ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும்.

    உலகம் முழுவதும் சமீபகாலமாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் தங்களது திறமைகளால் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது. அங்கு ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது. கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி இதற்கு முன்னர் இந்த சாதனை டாமி என்ற காளையிடம் இருந்தது. அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ புதிய சாதனை படைத்துள்ளது.

    இதுகுறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில், ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது. இந்த காளை வளர்ப்பதற்காகவே உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது என்றார்.

    • வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்தது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

    நகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது பாய்வதும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் செல்போன் கடைக்குள் காளை மாடு ஒன்று சீறிப்பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிராக் பர்ஜாத்யா என்ற பயனரால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் டெல்லியின் சங்கம்விஹார் பகுதியில் உள்ள ஒரு சிறிய செல்போன் கடையில் 2 வாலிபர்கள் வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென அந்த செல்போன் கடைக்குள் சீறிப்பாய்ந்தது.

    இதனால் கடையில் இருந்த தொழிலாளர்கள் பீதியுடன் வெளியேற முயன்றனர். ஆனால் காளையை விரட்ட முயன்ற நிலையில் கடையின் கவுண்டரை திறக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், ஒரு மாடு சிறிய அறைக்குள் சீறிப்பாயும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர், வீடியோ காட்சிகள் இல்லை என்றால் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை நம்ப வைக்க முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என கேளிக்கையாக பதிவிட்டார். இதே போல பயனர்கள் பலரும், 'சீனா கடையில் காளை' என்ற பிரபலமான பழமொழியுடன் இந்த காட்சி பொருந்துகிறது என குறிப்பிட்டிருந்தனர்.


    • பேரண்டப்பள்ளி, சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.
    • 500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா - சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட தோரிப்பள்ளி ஊராட்சிக்கு சேர்ந்த கல்லுக்குறுகி கிராமத்தில் அமைந்த முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அப்பகுதி ஊர் கவுண்டர் குள்ளப்பா தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு தோரிப்பள்ளி, கல்லுக்குறுக்கி அட்ட குறுக்கி, காமன்தொட்டி, வெங்கடேசப்புரம், அத்திமுகம், பேரிகை, பேரண்டப்பள்ளி, ஓசூர், சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.

    500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் எற்பட்டது . அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பேரிகை, அத்திமுகம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.

    இந்த விழாவில் பேரிகை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எருது விடும் விழாவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செங்கவள நாட்டார்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்தனர்.

    ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.

    வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில

    காளைகள் களத்தில் நின்று கெத்து காட்டியதோடு, அருகில் வந்த காளையர்களை பந்தாடியது.

    பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அடக்கினர்.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, கிரைண்டர், டைனிங்டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

    • திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.

    200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பொங்கல் விழாவை முன்னிட்டு லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டையில் இன்று காலை நடைபெற்றது.

    போட்டியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு லாரி மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர். பலர் வீடுகளின் மாடியில் நின்று கண்டு ரசித்தனர். இதேப்போல் காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    களத்தில் நின்று விளையாடிய காளைகளை ஆக்ரோஷத்துடன் வீரர்கள் அடக்கினர்.

    காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 

    • அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது.
    • பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேலம்பட்டியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது. விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டது.

    இதில் வீரர்கள் காளைகளை விரட்டி பிடிக்க முயறன்றனர். நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டன. பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எருதாட்ட விழாவை காண குவிந்தனர்.

    விழாவிற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற காளையின் சொந்த காரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காலை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
    • வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

    இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வேலைகள் சிறப்பாக நடந்து வந்த நிலையில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைசசர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதனை தொடந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

    இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமாக மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    • கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
    • கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்.

    திண்டுக்கல்:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தயார்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையில் தொடங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அடிவாரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை பராமரித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இவர் தற்போது மரக்காளை, வீறிக்கொம்பு காளை, செவலக்காளை என 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.


    இந்த காளைகளின் உடல் வலிமைக்காக தவிடு, உளுந்தம்குருணை, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் வழங்கி வருகிறார். இதுதவிர காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டத்தில் பிரத்யேகமாக பெரியஅளவில் நீச்சல் குளத்தை கட்டி வைத்துள்ளார்.

    அந்த காளைகளுக்கு மாடுபிடிவீரர்களை வைத்து சிறந்த முறையில் பயிற்சியும் அளித்து வருகிறார். தினந்தோறும் ஜல்லிக்கட்டு காளையுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முற்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காளையின் உரிமையாளர் முருகன் தெரிவிக்கையில், இந்த 3 காளைகளையும் எனது குழந்தைகள் போல்தான். எனது குழந்தைகள் தினந்தோறும் சாப்பிட்டார்களா, நல்ல முறையில் விளையாடுகிறார்களா என்பதை கண்காணிப்பதை போல இந்த காளைகளையும் கவனித்து வருகிறேன்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் சென்று எனது காளைகள் பரிசுகளை பெற்று வந்துள்ளன. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் நான் வளர்க்கும் காளைகளை ஜல்லிக்கட்டில் துள்ளிவிளையாடும்போது அந்த மகிழ்ச்சியே எனக்கு போதுமானது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து மாடுகளும் போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள டோக்கன்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதேபோல ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கும் முன் காளைகளின் உரிமையாளர்களின் கருத்துகளையும் கேட்டறியவேண்டும் என்றார். 

    • என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்பத்தூர் அருகே ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.
    • திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் அங்காள பரமேசுவரி, கணவாய் கருப்பர் வருடாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 7 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாநில ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஒண்டிராஜ், மாநில இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×