என் மலர்
நீங்கள் தேடியது "Case"
- மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 53). விருதுநகர் மாவட்டம் மாத்தி நாயக்கன்பட்டி பவித்ரா நகரை சேர்ந்த அற்புதராஜ் (74) என்பவர் தனக்கு சொந்தமாக நெல்லை டவுனில் இடம் உள்ளது என மகாலிங்கத்திடம் கூறி உள்ளார்.
இதனை நம்பிய அவர் அந்த நிலத்தை கிரையம் பேசினார். அற்புதராஜ் அதற்கு ஒப்புக்கொண்டதையடுத்து முன்பணமாக அவரது வீட்டில் வைத்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் கொடுத்துள்ளார்.
அதன் பின் ஒரு செண்டுக்கு ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் காசோலை மூலம் அற்புதராஜூக்கு கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் இடத்தை கிரையம் செய்து தர முன்வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மகாலிங்கம், நெல்லை சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தபோது, குறிப்பிட்ட இடம் வேறொருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பணத்தை திருப்பி தருமாறு அற்புத ராஜிடம் கேட்டபோது, அப்போது அவர் ரவுடியை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு பணத்தை திருப்பித்தர மறுத்து விட்டார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரு தரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆடுகள் மீது மோதிய விவகாரம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 50). இவரது மனைவி கொளஞ்சியம்மாள். இவர்கள் தேவமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அவர்களது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழமலை(43) என்பவர், அவரது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆடுகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கல்யாண சுந்தரம் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பழமலை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவி கொளஞ்சியம்மாள் ஆகியோர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கொளஞ்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பழமலை(43), அவரது மனைவி லதா(40), மகள் காந்தமணி ஆகியோர் மீதும், பழமலை கொடுத்த புகாரின் பேரில் கல்யாணசுந்தரம் (50), கொளஞ்சியம்மாள், அவர்களது மகன் சூர்யா ஆகியோர் மீதும் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது.
- பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்லடம் :
பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் அந்தோணி,(வயது 40), பெயிண்டர்.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி புஷ்பா, மற்றும் மகளையும், மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது .இதில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில்,இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
- கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
கரூர்:
கரூர் மாவட்டம், குப்பம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரிக்கு எதிராக போராடி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, குவாரி உரிமையாளர் செல்வக் குமார் (வயது 39), வேன் டிரைவர் சக்திவேல் (24), குவாரி ஊழியர் ரஞ்சித் (43) ஆகிய 3 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் செல்வக்குமார், ஏற்கனவே குண்டர் தடுப்பு, சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சக்திவேல், ரஞ்சித் ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சுந்தரவதனம், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சீர்வரிசை எடுத்து செல்ல எதிர்ப்பு
அரியலூர்:
தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் வெடி வெடித்து மேளதாளங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வல்லவன் (வயது 41), ரவி (43), சுமதி (43), அருண் (30), ராஜதுரை (31) ஆகியோர் எங்கள் வீதி வழியாக சீர்வரிசை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் வல்லவன் உள்ளிட்ட 5 பேர் மீது விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிபி.ஐ. வழக்கில் தொடர்புடையவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- கோர்ட்டில் கையெழுத்து இடவில்லை
திருச்சி:
திருச்சி காந்தி மார்க்கெட் ராவுத்தர் சந்து பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்தர் மோபியா. இவர் மீது மோசடி தொடர்பாக சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அந்த வழக்கில் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் திருச்சி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற உத்தரவுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இந்த மாதம் திருச்சி கோர்ட்டில் கையெழுத்து இடவில்லை. இதனை தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீதிமன்ற அலுவலக தலைமை எழுத்தர் ஆண்டாள் அளித்த புகாரின் பேரில் செஷன்ஸ் கோர்ட் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம் சந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் ஆசிரியை-கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
- சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற அவர் மதியம் விடுப்பு எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிகள்
வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மகள் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டு வேலைகளை செய்யவில்லை என குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த அவர் திடீரென மாயமானார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- கம்பிவேலியை அகற்றிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
- கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கரூர்
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). இவர் தனது வீட்டின் அருகே சிமெண்டு ஹாலோபிளாக் கற்கள் தயாரித்து வருகிறார். இதற்காக தங்கவேல் தனது வீட்டை சுற்றி கம்பி வேலி அமைத்து அதில் சிமெண்டு ஹாலோபிளாக் கற்கள் மற்றும் இதர பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில், அதே பகுதியில் வசிக்கும் தங்கவேலின் உறவினரான வெள்ளைச்சாமிக்கும், இவருக்கும் விவசாய நிலம் சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை வெள்ளைச்சாமி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் தங்கவேல் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வெள்ளைச்சாமி இடத்தில் கம்பிவேலி அமைத்தது குறித்து தகாத வார்த்தையால் திட்டி கம்பி வேலிகளை அகற்றியுள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த தங்கவேல் மற்றும் அவரது உறவினர்களுக்கு வெள்ளைச்சாமி தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசில் தங்கவேல் அளித்த புகாரின் பேரில் காவல்காரன்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் என்கிற முருகானந்தம், கார்த்திக், வெள்ளைச்சாமி, சூரியபாலு, விஜயா, கிருஷ்ணன், லெட்சுமி, மணி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியர் மீது தாக்குதல்
- 2 பேர் மீது வழக்கு
திருச்சி:
திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 63). இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கும் இவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரவீந்திரனின் சகோதரர் ராஜாராமின் மகன் வினோத்குமார் மற்றும் செல்வி ஆகியோர் ரவீந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வினோத்குமார், செல்வி ஆகிய இருவர் மீதும் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
- 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசாகவுண்டரின் விவசாய நிலத்தில் கோழி மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். பின்னர் இருதரப்பும் கொடுத்த புகாரின் படி கோமதி, மகாலிங்கம், வசந்த், கவுதம், இருசாகவுண்டர், மாதையன், சுப்புரு ஆகியோர் மீது தாரமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- சம்பவத்தன்று செல்வத்தின் காய்கறி கடையில் பூட்டை உடைத்து வேறு பூட்டை போட்டு பூட்ட 3 பேர் முயன்றனர்.
கடலூர்:
கடலூர் வண்ணாரபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 45). இவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று செல்வத்தின் காய்கறி கடையில் பூட்டை உடைத்து வேறு பூட்டை போட்டு பூட்ட 3 பேர் முயன்றனர். அப்போது அங்கு வந்த மகாலட்சுமி இதனை தட்டி கேட்டபோது, அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயம் அடைந்த மகாலட்சுமி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மகாலட்சுமி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பஞ்சமூர்த்தி, பாண்டியன், சிவக்கொழுந்து ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.