என் மலர்
நீங்கள் தேடியது "case"
- தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
- மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது55). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ரிவன்ராஜா (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரிவன்ராஜா குடிபழக்கத்திற்கு அடிமையானதால் யாரும் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் தனது தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவரது தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் குடிபோதையில் ரிவன்ராஜா தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை தமிழன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இன்று அதிகாலை வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற தமிழன் தான் வெட்டிய அரிவாளுடன் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதித்தனர்.
- முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்தி கண்காணித்தனர்.
பெங்களூரு:
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்த நிலையில் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்தி கண்காணித்தனர்.
மேலும் மது குடித்து விட்டு யாராவது வாகனங்கள் ஓட்டுகிறார்களா என்று 28 ஆயிரத்து 127 வாகனங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது குடித்து விட்டு கார், இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த சுமார் 513 பேரை மடக்கிபிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி வி.சி.க. தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக, ஏற்கனவே இருந்த 25 அடி உயர கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, அனுமதியின்றி கூடுதல் உயரமுள்ள 45 அடி உயர கொடிக்கம்பத்தை கட்சியினர் நிறுவியுள்ளனர்.
இதனை அகற்றுமாறு வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்திய போது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் பரமசிவம், பழனியாண்டி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.
- நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயந்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு கடந்த 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
முன்னதாக ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகள் முன் அனுமதி இல்லாமல் இடம் பெற்றுள்ளதாகவும் இதற்கு இழப்பீடாக ரூ.10 கோடி கேட்டும் நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதை கண்டித்து தனுஷ் மீது நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தனுஷ் எதிர்ப்பை மீறி கடந்த 18-ந்தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் நயன்தாராவுக்கு எதிராக தனுசின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளி வைத்தார்.
- மாணவர் ஆசிரியரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் சேட்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கெடிலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 கணித ஆசிரியர் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்ததால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியராக ஜெய்சங்கர் பணி ஆற்றி வருகிறார். அவரை அதே பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு சி குரூப் மாணவன் சேட்டு ஜெய்சங்கரை அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அவர் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவன் ஆசிரியர் ஜெய்சங்கர் அடித்து விட்டதாக கூறி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் மாணவர் ஆசிரியரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் சேட்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே கிடைத்த தகவலின் பேரில் ஆசிரியர் பள்ளிக்கு வராததால் ஆசிரியர் மீது ஏன் பொய் வழக்கு போட்டீர்கள் என்று மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் இளையராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாபர் அலி, ஜெயா, அஷ்டலட்சுமி தனி பிரிவு போலீசார் செந்தமிழ் செல்வன், சரவணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
- எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.
- தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.
அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. எனினும் இம்ரான்கான் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த நிலையில் தோஷகானா வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மற்றொரு வழக்கில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
- கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.
- கஸ்தூரி மீது சென்னை எழும்பூரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.
இதைத் தொடர்ந்து கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சம்மன் கொடுக்க சென்றபோது நடிகை கஸ்தூரி தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. கஸ்தூரியின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
- சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது.
- எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் திருச்சியில் வசித்து வந்தேன். எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த எழில் அரசன் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.
அவர் கோவையில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னுடன் நட்புடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரது நட்பை ஏற்றுக்கொண்டேன்.
இதையடுத்து நாங்கள் 2 பேரும் பேஸ்புக்கில் பேசி வந்தோம். சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். இதையடுத்து நான் திருச்சியில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு வந்தேன்.
இதையடுத்து எழிலரசனும், நானும், கோவை கணபதி அருகே லட்சுமணபுரத்தில் திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்தோம்.
அப்போது எழிலரசன் என்னுடன் உடலுறவு கொண்டார். நானும், திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என அனுமதித்தேன்.
ஆனால் அதன் பிறகு எழிலரசனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டவும் செய்தார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, இளம்பெண்ணை ஏமாற்றிய எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நாய் குட்டிகள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து குரைத்ததால் அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
- 2 பேரும் 5 நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டின் கன்கர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று சமீபத்தில் 5 நாய் குட்டிகளை ஈன்றது.
இந்நிலையில் அந்த நாய் குட்டிகள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து குரைத்ததால் அப்பகுதியை சேர்ந்த ஷோபா, ஆர்த்தி என்ற 2 பெண்கள் ஆத்திரமடைந்துள்ளனர். சம்பவத்தன்று ஷோபா, ஆர்த்தி ஆகிய 2 பேரும் 5 நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
இதுகுறித்து விலங்குகள் நல அமைப்பின் நிர்வாகியான அன்சுமாலி வசிஷ்த் அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபா, ஆர்த்தி ஆகியோர் மீது விலங்குகள் வகை தடுப்பு சட்டப்பிரிவு 325-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார்.
- பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் அழகுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (வயது 40) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு திருமணமாகி பின்னர் கடந்த 2012ல் விவாகரத்து ஆனது. இவர் வயலூர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் இலங்கையை சேர்ந்த இளங்கோ என்கிற ஜானி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் துபாயில் கலாவதி தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க லைசன்ஸ் எடுக்க முயற்சித்தார். இதற்காக இளங்கோவை அழைத்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் துபாயில் இருந்தார். அப்போது அவர் உடை மாற்றுவதையும் குளிப்பதையும் இளங்கோ வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அதை வைத்து இளங்கோ அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கலாவதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதில் நான் தற்போது ஈரோட்டை சேர்ந்த ஜீவா என்பவரை மறுமணம் செய்து முசிறியில் வசித்து வருகிறேன். என் கணவரை விட்டு பிரிந்து லண்டனுக்கு வந்து விட வேண்டும். இல்லாவிட்டால் எனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலும் நாம் தமிழர் குழுவிலும் பதிவேற்றம் செய்து விடுவேன் என இளங்கோ மிரட்டி வருகிறார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் இளங்கோ மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் கடந்த 7-ந்தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இழிவுபடுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் கடந்த 7-ந்தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை தொடர்ந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கரூர் தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் சீமான் மீது அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.