என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Civic Polls"
- 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட ஊராட்சிகளும் இயங்கி வருகின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வார்டு மறுவரையறை, மாவட்ட எல்லை பிரிவு விவகாரம் போன்ற காரணங்களால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, இந்த 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கி.பாலசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண, தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. இதில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்கு பெட்டிகள், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் தன்மையினை ஆராய வேண்டும்.
அதாவது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து, அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.
- தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுசீமைப்பு பணிகள் முடியாத காரணத்தால் மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரி மாதம் பதவி ஏற்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2021 அக்டோபர் மாதம் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
இந்த தேர்தல்கள் 27 மாவட்டங்களுக்கு மற்றும் 9 மாவட்டங்களுக்கு என தனித்தனியாக நடந்ததால் இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் 21 மாதம் உள்ளது.
இதனால் இந்த வித்தியாசத்தை மாற்றி சீராக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் டிசம்பரில் முடிந்ததும் தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்பு செயல்பாட்டை நீட்டிக்க வேண்டும். இதற்கு சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும்.
இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் ஏற்கனவே கொண்டு சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். அப்போது வெவ்வேறு நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும்.
2026 செப்டம்பர் என்பது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு வருவதாகும். அந்த கால கட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது பாதகமாகவும் இருக்கலாம். அந்த சூழல்களை அப்போது தான் கணிக்க முடியும்.
எனவே தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்து 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சூழல் அமைந்து விட்டால் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு உள்ளாட்சி தேர்தலை நடத்த முற்படும் போது 2026-ல் பதவி காலம் முடியும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு பதவிகளை கலைத்து விட்டு இந்த டிசம்பர் தேர்தலோடு சேர்த்து நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு எடுப்பார் என தெரிகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீனியர் அமைச்சர்களிடம் அடுத்து உள்ளாட்சி தேர்தலையும் விரைவில் எதிர்கொள்ள வேண்டும். அதிலும் முழுமையாக வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதையும் சட்டசபையில் அமைச்சர்களும் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.
- சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 25 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வேட்பு மனு பெறப்பட்டது.
இதில் 14 கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 11 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேற்கண்ட 11 இடங்களுக்கு 38 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
இன்று மேற்கண்ட பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் மந்த நிலை காணப்பட்டது.
28 வாக்குச்சாவடிகளில் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்ட 9 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 202 ஆண்களும், 7 ஆயிரத்து 664 பெண்களும், இதரர் 1 என மொத்தம் 14 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கின்றனர்.
சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது. சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
2795 ஆண்களும், 2990 பெண்கள் என மொத்தம் 5785 வாக்காளர்கள் ஓட்டுபோடுகின்றனர். இன்று அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் 9 வாக்குசசாவடிகளில் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
+2
- அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் 8-வது வார்டு, சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டி இருந்ததால் அங்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
- மேலப்பாவூர் கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மரணம் அடைந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் விடுபட்ட ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடுபட்ட காலியிடங்களில் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் காலியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் கடந்த மாதம் 20-ந்தேதி அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்றது.
மாவட்டத்தில் மொத்தம் 7 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் களக்காடு யூனியன் படலையார்குளம், மானூர் யூனியன் சுண்டங்குறிச்சி, பாளை யூனியன் கீழப்பாட்டம், பாப்பாக்குடி யூனியன் திருப்புடைமருதூர், வள்ளியூர் யூனியன் ஆனைகுளம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் 8-வது வார்டு, சேரன்மகாதேவி யூனியன் உலகன்குளம் ஊராட்சி 1-வது வார்டு ஆகியவற்றில் போட்டி இருந்ததால் அங்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு அந்தந்த யூனியன் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி யூனியன், உமரிக்கோட்டை, செய்துங்கநல்லூர், பராக்கிரமபாண்டி, பிச்சிவிளை, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து, பிடாநேரி, கோமாநேரி, சுரைக்காய்பட்டி, சிதம்பரபட்டி, ஜெகவீரபாண்டியபுரம், ஜமீன் கோடாங்கிபட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, மாதலாபுரம் ஆகிய பகுதிகளில் 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிச்சிவிளை ஊராட்சி 6-வது வார்டில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
இதைத்தொடர்ந்து அகரம், குறிப்பன்குளம், வெள்ளானகோட்டை ஆகிய பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 பேரும், மறவன்மடம் பஞ்சாயத்து 2-வது வார்டு, முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து 8-வது வார்டு, பிச்சிவிளை பஞ்சாயத்து 2-வது வார்டு, 3-வது வார்டு, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து 9-வது வார்டு, வெள்ளாளன்விளை பஞ்சாயத்து 1-வது வார்டு, சந்திரகிரி பஞ்சாயத்து 6-வது வார்டு ஆகிய 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 16 பேர் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் பதிவாகும் வாக்குகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து எண்ணுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாவூர் கிராம ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் மரணம் அடைந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 550 வாக்காளர்கள் உள்ளனர்.
இதனையொட்டி மேலப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.
- தி.மு.க சார்பில் சந்திரா மாதையன், பா.ம.க., அருண்மூர்த்தி, தே.மு.தி.க. அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- இடைத்தேர்தல் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலராக இருந்த தி.மு.க பிரமுகர் மாதையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து இடைத்தேர்தல் வரும் 9-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் பரிசீலனை செய்து 13 பேர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் கட்சி சின்னம் தொடர்பாக நிலவி வரும் குழப்பத்தால் அதி.மு.க. சார்பில் வேட்பு மனு செய்தவர்கள் நேற்று மனுவை வாபஸ் பெற்றனர்.
இதே போல் பா.ஜ.க. வேட்பாளர் உள்பட 10 பேர் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பி.டி.ஓ கிருஷ்ணன் தலைமையில் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டது.
இதன்படி, தி.மு.க சார்பில் சந்திரா மாதையன், பா.ம.க., அருண்மூர்த்தி, தே.மு.தி.க. அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ந்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அவர்களது சின்னங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் இந்த பதவிகளுக்காக போட்டியிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ஏ மற்றும் பார்ம் பி.யில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும்.
தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவங்கள் அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள்.
இதன் காரணமாக அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தால் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தலில் களம் கண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் சுயேட்சையாக போட்டியிடுவதால் புதிய சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது சிரமமான விஷயமாகவே மாறி உள்ளது என்றும், இதனால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க.வினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால் இந்த பதவி இடங்களுக்கான போட்டியில் சின்னம் தொடர்பான பிரச்சினை எழவில்லை.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
- இந்த 34 பதவி இடங்களும் மாவட்ட பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி மற்றும் நகர சபைகளில் உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 510 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 498 இடங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், 12 இடங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ளன.
இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து 510 உள்ளாட்சி அமைப்புகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த 510 இடங்களிலும் கடந்த 20-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.
நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்வது நிறைவடைந்தது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. போட்டியில் இருந்து விலகுவதற்கு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் ஆகும்.
மொத்தம் உள்ள 510 பதவிகளுக்கு 800 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 436 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 40 பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த 476 இடங்களுக்கும் கட்சி சார்பு இல்லாமல் தேர்தல் நடைபெறும்.
ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 34 பதவி இடங்களும் மாவட்ட பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி மற்றும் நகர சபைகளில் உள்ளன.
இந்த 34 பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்தை பெறுவதற்கு படிவம் 'ஏ' மற்றும் படிவம் 'பி' ஆகியவற்றை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் உள்ள கட்சி தலைவரின் ஒப்புதல் கையெழுத்தை அடிப்படையாக வைத்து தான் தேர்தல் அதிகாரி கட்சி சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்.
வேட்பாளர் பட்டியலில் கட்சியின் சின்னம் இடம் பெற்றிருந்தால் தான் அந்த வேட்பாளர் பெயர் பட்டியலில் முதன்மை இடத்துக்கு வரமுடியும். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அந்த நிலைக்கு வரமுடியாத துரதிருஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியே செயல்பட தொடங்கி உள்ளனர். இதுவரை அவர்கள் சமீபத்திய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது கையெழுத்தை பெற்று இரட்டை இலை சின்னம் மூலம் போட்டியிட்டனர்.
தற்போது இருவரும் பிரிந்துள்ளதால் கட்சி சார்பில் ஏ, பி படிவங்களை வழங்கவில்லை. இதனால் 34 உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தை பெறமுடியவில்லை.
படிவம் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி வைக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் ஆணையம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக தானாகவே சின்னம் முடக்கப்படும் நிலைக்கு சென்று விட்டது.
இது அ.தி.மு.க. வேட்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
என்றாலும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர். அந்தந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சுயேட்சையாக போட்டியிடுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறும்போது, 'எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட்ட படிவங்கள் எங்களிடம் உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை படிவங்களில் எழுதிக் கொடுப்பது வழக்கம். இந்த முறை இரு அணிகளாக இருப்பதால் அ.தி.மு.க. வினர் வெற்றி பெறும் போது சிக்கலை ஏற்படுத்தும். அதனால் சுயேட்சையாகவே போட்டியிடுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றனர்.
மாநில தேர்தல் ஆணையத்திடம் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்காக ஒதுக்கீடு செய்ய 60 சின்னங்கள் தயாராக உள்ளன. இவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைகளின் விருப்பத்திற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாளை மாலை மனுக்கள் வாபஸ் பெறும் கால அவகாசம் முடிந்ததும் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பது தெரிய வரும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலவில்லை. அதனைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது. நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 13 ஆயிரத்து 542 பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாரானது. இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
38 மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல அளவில் 7 கட்டமாக தேர்தல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்களும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், இந்த கூட்டங்களில் பங்கேற்றனர்.
தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்த மாநில தேர்தல் அதிகாரி பழனிக்குமார் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. தேர்தல் பணியில் தொண்டர்கள் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது தொண்டர்களை களப்பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது.
அதேபோல ஆளுங்கட்சியான தி.மு.க.வும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை போல நகர்ப்புற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில் வரைவு வாக்காளர் பட்டியலும் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள கட்சித் தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு முறையில் வாக்களிக்க அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தேர்தலின் போது பயன்பாட்டில் இருந்த வாக்குச்சாவடிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற வாக்குச்சாவடிகளை மாற்றி வேறு இடங்களில் அமைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தவும், அதற்கான பயிற்சி அளிக்கவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்கி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் சரிசமமான அளவில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள். தங்கள் வார்டு (ஆண்/பெண் /பொதுவானவர்/ தாழ்த்தப்பட்டவர்) எந்த பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதற்கு ஏற்றவாறு தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்கவும் இப்போதே தயாராகி வருகிறார்கள். தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஜனவரியில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளிவருகிறது. ஆனால் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. அதற்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் மாவட்ட அளவில் நிறைவு பெற்றுள்ளன.
அதனால் டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரம் தரப்பில் கூறும்போது, ‘‘அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அடுத்த வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது’’ என்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஏற்கனவே நாங்கள் சரியான முறையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அதுபோன்று செயல்படுவோம்.
வருகிற ஜூன் 1-ந்தேதி கூட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஆகியோருடன் முதல் கட்டமாக ஆலோசனை நடத்துகிறேன்.
அதன் பிறகு அடுத்த கட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் தயாராவோம்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரலாம் என்று நினைக்கிறேன். அதுபோல வேலூர் எம்.பி. தொகுதியில் தேர்தல் நடைபெற வேண்டி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும் அதற்கும் தயாராவோம். இதெல்லாம் வழக்கமான நடவடிக்கை தானே.
பாராளுமன்ற தேர்தலின்போது நான் அளித்த வாக்குகள் என்னவானது என்று பல கிராமங்களில், நகரங்களில் மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் வாக்களித்த பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. நாங்கள் அ.ம.மு.க.விற்குதான் வாக்களித்தோம்.
ஆனால் நமது பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள் பதிவாகியுள்ளதே என்று நான் நடைபயிற்சி சென்றபோது எங்கள் பகுதி மக்களே என்னிடம் கேட்கிறார்கள். இதுபோன்றுதான் தமிழகம் முழுவதும் மக்கள் கேட்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எங்களுக்கு பதிவாக வேண்டிய சதவீதம் என்ன? ஆனால் பதிவான சதவீதம் எவ்வளவு என்றுதான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது உங்களுக்கு தெரியப்போகிறது.
இவ்வாறு தினகரன் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்தியாவில் அனைவருக்கும் ஜனநாயக கடமை ஆற்ற உரிமை உள்ளது. அதனை பறிக்கக்கூடாது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ஒரே இடத்தில் பலரது பெயர்கள் விடுபட்டதை த.மா.கா. ஏற்கவில்லை. இதுபற்றியும் விசாரிக்க வேண்டும். இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது.
மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிகாரி ஒருவர் சென்று வந்தது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு எதிர் கட்சிகளே காரணம். இப்போது உள்ளாட்சி தேர்தலை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. தொடரும்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் 39 பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்தேன். அப்போது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவாக உள்ளனர்.
வட இந்தியாவிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அவர்களின் தேர்தல் அறிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரம் காங்கிரசின் தேர்தல் அறிக்கை செயற்கை தனமாக உள்ளது. எனவே அதனை மக்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும். மக்களின் குறைபாடுகளை எந்த கட்சியாலும் 100 சதவீதம் தீர்க்க முடியாது. ஆனால் இப்போது ஆட்சி செய்தவர்கள் மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். அந்த பணிகள் காரணமாக அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. அவர் அமோக வெற்றி பெறுவார்.
பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம்.
குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்றி பூங்கா அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், நிர்வாகிகள் ராஜமகாலிங்கம், டாக்டர் சிவக்குமார், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #TamilMaanilacongress #GKVasan #ADMK #CivicPolls
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் சேலம் வந்தார்.
இன்று காலை சேலம் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் மு.க.ஸ்டாலின் காரில் அங்கு வந்தார். முதலில் அவர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருக்கிறார்களா? என பெயர் வாசித்து ஆய்வு செய்தார்.
விரைவில் 21 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 21 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி உறுதியாக உள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி தலைதூக்க விடக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
நாங்கள் உத்தரவு போட்டாலும், அதனை செயல்படுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது. உத்தரவுகளை அறிவிப்பது மட்டும் தான் நாங்கள். அதனை நிறைவேற்றுபவர்கள் நீங்கள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியில் தி.மு.க.வுக்கு எத்தனை ஓட்டுகள் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டுகள் எவ்வளவு உள்ளது. இந்த ஓட்டுகளை நாம் வாங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.
தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்களை நாம் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. தீர்ப்புக்கு பின் இந்த ஆட்சி நீடிக்காது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. வெற்றிக்காக நீங்கள் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசியதாவது:-
கடந்த 3-ந்தேதி திருவாரூரில் தலைவருடைய தொகுதியில் புலிவிலங்கு என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் நான் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தேன். இதனை தொடர்ந்து எல்லா தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வரலாம் என நேற்று இரவு திடீரென முடிவு எடுத்தேன். நியாயமாக இன்று காலை நான் சேலத்தில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். மாலையில் ஈரோட்டுக்கு போக வேண்டும். 2 நாட்களாக நான் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
கிராமத்தில் இருந்து தான் அரசியல் தொடங்குகிறது. கிராமங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கிறது. முதல் முதலில் மக்கள் பிரநிதிகளை தேர்ந்தெடுக்கிற முறை எங்கிருந்து தொடங்குகிறது என்று சொன்னால் கிராமத்தில் இருந்து தான்.
இது படிப்படியாக மாறி வாக்குச்சீட்டு முறைக்கு வந்து விட்டது. இப்போது எலக்ட்ரானிக் முறைக்கு வந்து விட்டது.
எம்.பி.யை தேர்ந்து எடுக்கிறோம். அவர் பாராளுமன்றத்திற்கு போகிறார். 6 சட்டமன்ற தொகுதிக்கு சேர்த்து ஒரு எம்.பி.
அதுபோல் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ. தேர்ந்தெடுத்து சென்னை கோட்டைக்கு அனுப்புகிறோம். பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவார்கள். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள்.
அதற்கு அடுத்து பார்த்தீர்களானால் உங்கள் ஊருக்கு ஒரு தலைவரை, ஒரு மெம்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் ஊர் பிரச்சனையை உள்ளாட்சி அமைப்பு கூட்டத்திலோ, ஊராட்சி ஒன்றிய கூட்டத்திலோ பேசி அதற்கான நிதியை வாங்கி மத்திய அரசு கிராமத்திற்கு என தனியாக நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதியை வாங்கி பயன்படுத்தி அந்த காரியங்களை செய்து முடிக்க வேண்டும். இது தான் உள்ளாட்சி அமைப்பு.
இப்போது உள்ளாட்சி அமைப்பு இல்லை. ஆட்சியும் முறையாக இல்லை. மத்தியில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி எதுவும் முறையாக இல்லை. ஆகவே முறையாக இல்லாத காரணத்தினால் தான் இன்றைக்கு நாடு ஒரு குட்டிச்சுவரான நிலைக்கு தள்ளிக்கொண்டு போயிருக்கிறது.
நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இங்கு வந்திருக்கிறீர்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.
மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம். மக்களுடைய மனங்களை எல்லாம் வெல்வோம் என்ற அந்த முழக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்த பணியை தொடங்கி இருக்கிறோம்.
நான் 2 வாரத்திற்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு போயிருந்தேன். அங்கு மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இதில் பல்வேறு மாநில தலைவர்கள், முதல்-அமைச்சர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள் வந்தார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வந்தார்கள்.
எல்லோரும் என்னை பார்த்து கேட்ட முதல் கேள்வி கிராம சபை கூட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துகிறீர்கள்?. உங்களால் எப்படி முடிகிறது என கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். நான் சொன்ன உடனே அவர்கள் திருப்பி சொன்னார்கள். இதுவரைக்கும் தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே, உலகத்திலே இப்படிப்பட்ட கிராம சபை கூட்டத்தை யாரும் நடத்தியிருக்க முடியாது என பெருமையாக சொன்னார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் ஒவ்வொரு பேராக எழுந்து வந்து தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள குறைகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று இரவு சேலம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #TNAssemblyElection
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா? இப்போது சென்று குறை கேட்பதா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.
அதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான்.
நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.
கிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம்.
12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.
ராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.
ஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு? என் தவறா? எடப்பாடி பழனிசாமி மீது தவறா? மக்களுக்கு உண்மை தெரியும்.
இப்போது நான் முதல்-அமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.
சயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.
தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.
இந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகாரை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்.
இந்த விஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.
மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
கவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Kodanad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்