search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cloudburst"

    • மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
    • மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் அவதி.

    ராமநாதபுரம்:

    வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று காலை வரை விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.

    இதன் காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக் கூடிய தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    குறிப்பாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தங்கப்பா நகர், இளங்கோவடிகள் தெரு, சூரங்கோட்டை, அரண்மனை, வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


    தங்கப்பா நகர் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்று மழை நீரால் முழுவதுமாக மூழ்கியது. அதேபோல் அய்யர் மடம் பகுதியில் உள்ள ஊரணியும், சாலையும் ஒன்றாக சேர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் வரலாறு காணாத மழையால் இந்த இரண்டு நாட்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

    அதிலும் கடந்த 69 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1955-ம் ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரம் மாவடட்த்தில் குறிப்பாக ராமேசுவரத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தி அம்பாள் கோவில், உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம், உத்தரகோச மங்கை மங்களநாதர் கோவில்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பணியாளர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தினர்.

    அதேபோல் பாம்பன் ரோடு பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பாலத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்படி ஒரு மழையை நாங்கள் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மழையானது பெய்துள்ளதாகவும் முறையான வாறுகால்கள் இல்லாததாலேயே இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதாகவும் குற்றம் சாட்டினர்.


    குறிப்பாக பல ஊரணிகள் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையில் ஒரு சில ஊரணிகள் மட்டும் நிரம்பி வழிகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாறுகால்களை தூர்வாரி அந்தந்த குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு செல்லக் கூடிய பகுதிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-125.60, மண்டபம்-271.20, ராமேசு வரம்-438, பாம்பன்-280, தங்கச்சிமடம்-338.40, பள்ளமோர்க்குளம்-50.70, திருவாடானை-12.80, தொண்டி-7.80, வட்டா ணம்-12.80, தீர்த்தண்ட தானம்-20.20, ஆர்.எஸ்.மங்கலம்-14.90, பரமக்குடி -25.60, முதுகுளத்தூர்-49, கமுதி-49, கடலாடி-73.20, வாலிநோக்கம்-65.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,834.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 114.68 மில்லி மீட்டர் ஆகும்.

    மேக வெடிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒரு பெரிய அளவிலான மழைப் பொழிவை குறிக்கிறது. இந்த மேக வெடிப்புகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.

    குறைந்த பரப்பளவில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் வரையிலான இடத்தில் ஒரு மணி நேரத் தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவானால் அதுவே மேக வெடிப்பு எனப்படுகிறது. சில சமயங்களில் அது ஆலங்கட்டி மழையாகவும், இடியுடன் சேர்ந்த மழையாகவும் கொட்டுகிறது.

    நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நீரானது, மேல்நோக்கி செல்லும்போது வெப்பக் காற்றின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட அந்த பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.

    • ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது

    வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

    • கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.
    • மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது.

    உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்ணும், அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

    இந்நிலையில் கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையின் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதார்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்தனர்.

    மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கேதார்நாத்தில் சிக்கித்தவிக்கும் 150 முதல் 200 யாத்ரீகர்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும், மேக வெடிப்பைத் தொடர்ந்து இதுவரை எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    காங்டாக்:

    வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது.

    இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது.

    பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இதில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர்.

    கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் இறந்துவிட்டதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.

    இன்னும் 140 -க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில முதல் - மந்திரி பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    லாச்சென் மற்றும் லாச்சுங் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவிக்கும் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் இந்திய விமான படையை சேர்ந்த ராணுவ ஹெலி காப்டர்கள் பயன்படுத்தபட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் 5 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
    • முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிவிரைவாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

    "மண்டி மாவட்டத்தின் சம்பல், பன்டோ பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பகுதிகளில் இதுவரை ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள், தேடுதல் வேட்டை மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன," என்று முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு டுவீட் செய்துள்ளார்.

    முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். நேற்றிரிவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏழு பேரும், சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

    • குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
    • மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது.

    ஐதராபாத் :

    மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன" என்றார்.

    குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு, பெருமழையால் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
    • சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது.

    ஜம்மு :

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    படுகாயமடைந்த நபர்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

    பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்தது. அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது.

    இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியது. இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கப்பட்டன.

    இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சென்று சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். இதன்பின் அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

    அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து புறப்பட்டு தரிசனத்திற்கு சென்றுள்ளனர். இதுபற்றி பக்தர்கள் கூறும்போது, எங்களுக்குள் சக்தி நிறைந்துள்ளது. பாபாவை தரிசிக்காமல் நாங்கள் திரும்பி செல்லமாட்டோம். போலே பாபா மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவரது தரிசனத்திற்காக காத்திருக்கிறோம்.

    அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் பாதுகாப்புடன் பயணிக்க ஏதுவாக சி.ஆர்.பி.எப். மற்றும் பிற பாதுகாப்பு படையினர் எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என கூறியுள்ளனர். இதற்கு முன், நுன்வான் பகல்காம் பகுதியில் இருந்து அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கும் என ஸ்ரீ அமர்நாத்ஜி கோவில் வாரியம் தெரிவித்து இருந்தது.

    பக்தர்கள் பால்தல் முகாமில் இருந்தும் புறப்பட்டு செல்ல காத்திருக்கின்றனர். இதனை முன்னிட்டு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பகல்காமில் உள்ள பக்தர்களை நேற்று நேரில் சென்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புனித யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணவழிகளை சீர்செய்து உள்ளோம். பக்தர்கள் வரவேண்டும். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருவோம் என சின்ஹா உறுதி கூறினார்.

    • மேக வெடிப்பு நிகழ்வால் ஒரு மணி நேரத்தில் 28 மிமீ மழை கொட்டியது.
    • மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தம்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்தனர்.

    இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.

    #WATCH | Mountain Rescue Team (MRT) rescue work under progress after a cloud burst occurred in the lower reaches of the Amarnath Cave

    இந்நிலையில், அமர்நாத் குகை அருகே நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வால் கடும் மழை கொட்டியது. அமர்நாத் குகை கோவிலுக்கு மேலே உள்ள பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை 31 மிமீ மழை பெய்ததாக என்று வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் உருவான வெள்ளப்பெருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட பக்தர்களின் முகாம்களை அடித்துச் சென்றது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என கூறப்படுகிறது.  

    #WATCH | Rescue operations are being carried out in cloudburst affected area at the lower Amarnath Cave site

    அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் சமூக சமையலறைகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதாக, காவல்துறை. அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.75 மீட்புப் பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் இதில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
    • மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகினர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அமர்நாத் யாத்திரையின்போது மேக வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

    • அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது.
    • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.

    இந்நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே இன்று ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது.

    இதில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து இந்தோ திபெத்திய போலீஸ் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பனி நடைபெற்று வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×