search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள்.
    • அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் என்ன பயிர் பயிரிடப்படுகிறது, அதனை பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்காக 192 மாணவிகள் மற்றும் 8 பேராசிரியர்கள் உள்ளடங்கிய குழு காரியாபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று வந்தனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இதனால் அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

    இந்நிலையில், மாணவியர்களின் சிரமம் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தன்னுடைய மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தை மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கினார்.

    மேலும், வருகின்ற 20ஆம் தேதி வரை மாணவியர் தங்குவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே, மாணவியரை நேரில் சந்தித்த அமைச்சர் அவர்களுடன் உரையாடி அனைத்து வசதிகளும் போதுமானதாக உள்ளதா என கேட்டறிந்தார். 

    • வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள்.
    • சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள். மேலும் பலர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனியார் விடுதிகளிலும் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக கோவை போலீசார் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போதைப் பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒரு கும்பல் மாணவர்கள் மத்தியில் சப்ளை செய்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரெயிலில் கோவைக்கு கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன், மாணவர்கள் அல்லாத சிலரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 450 தனிப்படை போலீசார் செட்டிபாளையம், மதுக்கரை, கே.கே. சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அறைகளில் கஞ்சா, போதை மாத்திரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் தானா? அவர்களது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்கள் வைத்துள்ள வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், பைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் போதைப்பொருள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

    இதில் மாணவர்கள் சிலர் நேரடியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இவ்வாறு போதைப்பொருள்கள் விற்பனை செய்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இவர்களின் பெற்றோர் சமூகத்தில் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து, போதைப்பொருளும் விற்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த மாணவர்களை கண்டுபிடித்து இந்த நெட்வொர்க்கை உடைக்கவும் அவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுகிறது.
    • தேர்வு தாளில் கிறுக்குவதை தடுக்க ஏ ஐ தொழில்நுட்பம்.

    விடைத்தால் திருத்தும் பணியில் ஈடுபடும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு அவற்றை அடையாளம் காண்பதில் குழப்பம் அடைகின்றனர்.

    இந்த கேள்விக்கு மதிப்பெண் போடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்படுகிறது.

    இது போன்ற மாணவர்கள் தேர்வு தாளில் கிறுக்கி வைத்து மதிப்பெண் பெறுவதை தடுக்க ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் விடைத்தால் திருத்தும் பரிசோதனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

    ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எந்திரம் மூலம் விடைத்தாள்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஏ ஐ தொழில்நுட்ப எந்திரத்திற்கு அனுப்பப்படும்.

    செயற்கை நுண்ணறிவு நகலை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து அது பேராசிரியர்களை எச்சரிக்கும். ஒவ்வொரு மாணவரின் கையெழுத்தும் வித்தியாசமாக இருக்கும்.

    ஏஐ தொழிநுட்பத்தில் இது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

    தேர்வுத்தாள் திருத்தம் பேராசிரியர்களுக்கு ஒரு ஏஐ தொழில்நுட்ப கருவி வழங்கப்படும்.

    இதன் மூலம் அவர்கள் விடைத்தாளில் உள்ள பிழைகளை கண்டறிந்து சரியான மதிப்பெண் தர முடியும். இதற்கென பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பாட அறிவு தொடர்பான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்துவது குறித்து பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் விடைத்தாள்களை திருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த தொழில்நுட்பத்தின் செயல் திறனை சரியாக பயன்படுத்திய பிறகு விரிவான முடிவுகள் செய்து அனைத்து பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது.

    இதனை மாநில திட்ட குழு முடிவு செய்யும். ஏஐ தொழில்நுட்பத்தால் கல்லூரி விடைத்தாள்களை திருத்த ஒரு எந்திரன் வந்துவிட்டது.

    இதன் மூலம் தேர்வில் ஏதாவது எழுதி கிறுக்கி வைத்தால் மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற மாணவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. சரியான விடைக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    • சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

    சஞ்சய் ராய் மீது நிதி முறைகேடுகள் தொடர்பாகவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    மேலும் சந்தீப் கோசின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் சுமார் 90 நிமிடங்களாக வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் 11 மணிநேரமாக சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

     

    அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தீப் கோஷ் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • 2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
    • 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்க வேண்டும்

    2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில்,பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்கி அதைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

     

    பரிந்துரைக்கப்பட்ட அந்த 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அடங்கும். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதியில் அங்கம் வகித்தவர்கள் ஆவர்.

     

    இதைத்தவிர்த்து மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் குறித்து விலகிச் சொல்ல, அனைத்து கல்லூரிகளிலும், பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா [பாராபரிய அறிவை கற்றுத்தரும்] செல்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.
    • தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான்

    அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது.

     

    அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த  தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத  பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும்  இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

     

     அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

    ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.

    • அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
    • கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 24-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 30 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்குகிறது.

    முதலாம் ஆண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் (செமஸ்டா்) அக். 31-ல் தொடங்கி, நவ. 25-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிச. 16-ந் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
    • நெட் தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

    அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.

    ஆனால் தேர்வு நடைபெற்ற அடுத்த நாளே திடீரென நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.

    அதில், 'தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது.

    ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு பேனா பேப்பர் கொண்டு எழுத்து முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள நெட் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கம்ப்யூட்டர் முறையில் நடைபெறும் NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதியும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை போன்ற பணிகள் நடைபெறும்.
    • கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுவரையில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் ஜூன் 6-ந் தேதியுடன் அவகாசம் முடிகிறது. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு, தர வரிசை பட்டியல் வெளியீடு, ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை போன்ற பணிகள் நடைபெறும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் கூறியதாவது:-

    பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்குகிறது. இந்த ஆண்டும் புதிய கல்லூரிகள் மற்றும் புதிய இடங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படலாம். அங்கீகாரம் வழங்கும் பணி முடிந்து ஜூலை 2-வது வாரத்தில் பொறியியல் கல்லூரிகளின் விவரம், பி.இ., பி.டெக் இடங்கள் குறித்த பட்டியலை தருவ தாக அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது அண்ணா பல்கலைக் கழகம் அளிக்கும் பட்டியலுக்கு பிறகே தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
    • அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மணிப்பூரின் பல பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

    இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிப்பூர் மற்றும் தேரா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.

    இந்நிலையில், மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக 2024 மே 6 மற்றும் மே 7ம் தேதிகள் அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். தற்போதைய வானிலையால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்,"அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது," என்றார்.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×