search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone"

    • கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

    மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது.

    அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.

    இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

    புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த புயலால் ஏற்பட்ட தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி பலவீனமடைந்து வெள்ளி கிழமை கரையை கடந்தது.

    இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினாவும் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 800 மத்திய அவசரகால மேலாண் கழக அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு தகவல்கள் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் கிடைத்துள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

    அந்த வகையில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?, இந்த காலகட்டத்தில் மழைப்பொழிவு எந்த அளவு இருக்கும்? வானிலை சார்ந்த வலுவான நிகழ்வுகள் (தாழ்வு மண்டலம், புயல்கள்) எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட தகவல்கள் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் கிடைத்துள்ளது.

    அவ்வாறு முன்கூட்டி கணிக்கப்பட்ட தகவல்களை, தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) ஹேமச்சந்தர், அரசுக்கும் சமர்ப்பித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதாவிடம் இதுபற்றி விளக்கமாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரும் இந்த மாதம் இறுதிக்குள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி பேசுவோம் என கூறியுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் சமர்ப்பித்துள்ள முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந்தேதி முதல் 27-ந்தேதிக்குள், அதாவது 25-ந்தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டுகளை போல கிழக்கு காற்று போன்றவற்றினால் கிடைத்த மழைப்பொழிவு போல இந்த ஆண்டு இல்லாமல், தாழ்வு மண்டலங்கள், புயல்கள் ஆகியவற்றால் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறுகிய காலத்தில் அதிக மழை இருக்கக் கூடும், இந்த இடங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும். வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகக்கூடும். இந்த புயல்கள் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரையிலான ஒரு மாத கால இடைவெளிக்குள் ஏற்படும்.

    வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் இயல்பைவிட குறைவாகவும், வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை இருக்கும். மொத்தத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல் தனியார் வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாதம் இறுதிக்குள் முன்கூட்டி கணிக்கப்பட்ட தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
    • குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    காற்றின் வேகத்தால் ஊட்டி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து, கூரை ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கோடேரி, கைகாட்டி, வண்டிச்சோலை, பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    குறிப்பாக காமராஜர் புரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரையும் காற்றில் பறந்தன. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.

    உபதலை, மேல்பாரத் நகர், சப்ளை டிப்போ, பழைய அருவங்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மரங்கள் விழுந்த பகுதிகளில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சின்ன வண்டிச்சோலை பகுதியில் 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.

    காத்தாடி மட்டம் அருகே சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த கோவில் சேதம் அடைந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் தொடர்ந்து விழுந்து வருவதால், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வீசிய சூறவாளி காற்றுக்கு, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கொய்மலர் சாகுபடி குடில்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. பல இடங்களில் குடில்களின் பிளாஸ்டிக்குகள் கிழிந்துள்ளதால் மலர் சாகுபடி தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, கோத்தகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த பணிமனை தற்போது தான் புதிதாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வீசி வரும் சூறவாளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

    இதேபோல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதம் அடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து மின் வினியோகம், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்ந்து வீசுவதால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலையில் ஒடிசா கடற்கரை பூரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலையில் ஒடிசா கடற்கரை பூரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி தாழ்வு மண்டலம் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவில் நிலை கொண்டுள்ளது. பூரிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தென்மேற்கு மற்றும் கோபால் பூருக்கு கிழக்கு வடகிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் கரையை கடந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

    இதன் காரணமாக வட கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி ஏற்படும். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை செய்யக்கூடும்.

    நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இனி படிப்படியாக மழை குறையும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
    • சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரம்.

    வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.

    அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.

    மேலும், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

    ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.

    தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
    • ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார்.
    • கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும்.

    ஆண்டுதோறும் நடக்கப் போகும் நிகழ்வுகளை நட்சத்திர, கிரக நிலைகளை ஆராய்ந்து, முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது.

    இதில் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    தமிழ் ஆண்டுகள் வரிசையில், நடப்பு சோபகிருது ஆண்டுக்கு அடுத்து வரும் குரோதி ஆண்டுக்கான பலன்களாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் கணித்து கூறியிருப்பதாவது:-

    இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக மும்பை, பீகார், ஒடிசா, காசி, கயா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படும்.

    தென்மேற்கு பருவமழை அதிகளவில் கொட்டும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும். 10 புயல்களில் 4 புயல்கள் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வலுவிழந்துவிடும். 6 புயல்களால் கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும்.

    அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டமான காலமாகும்.

    இந்த ஆண்டு ஜெக ஜாதகத்தில் அமலா யோகம் பெற்றிருப்பதால் வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ராஜயோக காலமாக இருக்கும்.

    அரசியல் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கும் அபாயநிலை உருவாகும். இந்த ஆண்டு தன்வந்தர்கள் ஏழைகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம். நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார்.


                                                                                ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர்

    பூண்டு, வெங்காயம், புளி, மாங்காய், கடுகு, அரிசி விலை உயரும். மின்சார உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும்.

    கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டு பிடிக்கும். வவ்வால்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.

    2024-ம் ஆண்டில் ஆதாயம் 47 ஆகவும் வருவாய் 71 ஆகவும் இருக்கும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

    கையில் பணம் வைத்திருப்பது குறையும். ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கும். மோசடிகள் அதிகரிக்கும். பாக பிரச்சனைகள் சம்பந்தமாக அதிக வழக்குகள் ஏற்படும். போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் திருட்டு கைவரிசைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம்.

    பாரத திருநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது தெற்கு பகுதியில் உள்ள இலங்கை நமது நாட்டுடன் இணையும் சூழ்நிலை உருவாகலாம்.

    சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் எல்லை பிரச்சனைகள் உருவாகி போர் மூளும் சூழல் உருவாகலாம்.

    இவ்வாறு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    • 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

    சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

    • வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.
    • மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் பாதிப்பால் கொட்டி தீர்த்த கனமழையால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமலேயே உள்ளது.

    குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்றும் முழுமையாக வடியாமல் இருக்கிறது. இதே போன்று சென்னை மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.

    புழல் விளாங்காடுப் பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்பாள்நகர், தர்காஸ், மல்லிமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் மல்லிகா கார்டன் அருகே உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்புகளில் மார்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் கடந்த 5 நாட்களாக வடிந்தும் தற்போதுதான் முட்டளவுக்கு குறைந்துள்ளது.


    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஏற்படும் வெள்ளப் பாதிப்பை சரி செய்ய அதிகாரிகள் இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோன்று செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கூளங்களும் தேங்க தொடங்கி உள்ளன. எனவே அவைகளை அப்புறப்படுத்தி மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.

    மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.

    ×