என் மலர்
நீங்கள் தேடியது "Devotees Gathering"
- படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
- மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பழனி:
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
மேலும் நாளை (26ந் தேதி) பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருமஞ்சணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
- ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
பழனி:
முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. 27ந் தேதியுடன் பங்குனிஉத்திர திருவிழா நிறைவு பெற்றது.
திருவிழா நிறைவடைந்த நிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக பங்குனி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். தற்போது தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் பறவைக்கா வடியாக வந்தனர். வழக்கமாக இதுபோன்ற பறவை காவடியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வரும் நிலையில் தற்போது பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கிரி வீதியை சுற்றி மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணியை சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
- ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
சோபகிருது முடிந்து இன்று குரோதி வருடம் பிறந்ததைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குரோதி வருட தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆன போதிலும் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நாணயங்களையும், பிரசாதங்களையும் பெற்றுச் சென்றனர்.
- பவுர்ணமி என்பதால் நேற்று பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம்.
- வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை)விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் நேற்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனால் நேற்றை விட இன்று கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்ட போதிலும் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
- 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
- சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும்.

அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.
இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.
தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் திருவிழாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, வருகிற 13-ந் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத் திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.
இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.
மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில், மலையேற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதி.
- ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25-ந் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது.
டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது.
அதன்பிறகு மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மாலை, ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 20-ந் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும்.
பின்னர் கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும்.