search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors Strike"

    • உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது
    • கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி .கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெண் டாகடர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் இன்னும் தீவிரத்துடன் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

    மேற்கு வங்க மம்தா அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர்கள் விரைந்த நீதி கிடைக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

     

    தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகர் ஆல்பன் பந்தோபாத்யாய், மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்வது சட்டப்படி செல்லாது.

    பணியாளர் விதிகளின்படி ராஜினாமா என்பது பணியாளருக்கும் பணி வழங்குபவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். எனவே இந்த கூட்டு ராஜினாமா கடிதங்கள் செல்லாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அளித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்று தெரிவித்தார். 

    • தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
    • இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.

    பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார்.

    டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக்கொண்டபடி செயல்படுத்தவில்லை எனக்கூறி ஜூனியர் டாக்டர்கள் கடந்த 1-ம் தேதி மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். அப்போது தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அரசிடமிருந்து எந்த பதிலும் வரைவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் நேற்று நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், டாக்டர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்த நிலையில் சந்திப்பை நேரலை செய்தால்தான் வருவோம் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் போராட்ட களத்துக்கு சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினார்.

    இதன்பின் நேற்று இரவு 30 மருத்துவர்கள் கொண்ட குழு காலிகாட்டில்[Kalighat] உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு வந்தது. வீட்டுக்குள் வரமால் மழையில் நனைந்தபடி வெளியிலேயே நின்ற அவர்களை மம்தா உள்ளே அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது மருத்துவர்கள் நேரலையை மீண்டும் வலியுறுத்தினர்.

    ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் நேரலைக்கு சாத்தியமில்லை. உச்சநீதிமன்ற அனுமதி பெற்று இந்த சந்திப்பை வீடியோ பதிவு செய்து, அதன் நகல் உங்களுக்கு தரப்படும் என்று மம்தா விளக்கினார். மேலும் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மம்தா கூறியுள்ளார். இதனால் மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். எனவே 2-வது முறையாக பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

     

    மருத்துவர்கள் பொதுக்குழுக் கூட்டம் கூட்டி, பயிற்சி பெண் மருத்துவர் கொலைக் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும்,காதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மலையில் நனைந்தபடி நின்றனர்
    • என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மம்தா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சந்திப்பை நேரலை செய்தால் மட்டுமே தாங்கள் வருவோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்ற மம்தா அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எனவே தங்களின் பிடிவாதத்தை விட்டு தற்போது மம்தாவை இல்லத்தில் சென்று போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்

    மம்தாவை அவரது இல்லத்தில் சந்திப்பதாக போராடும் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கு மம்தா உடனே சம்மதித்துள்ளார். அதன்படி தனது வீட்டு வாசல் வரை வந்த போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் உள்ளே வரமால் அங்கேயே மலையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்து கலக்கம் அடைந்த மம்தா, நீங்கள் என்னை சந்திக்க விருப்பினீர்கள். நான் அதற்கு சம்மதித்து உங்களுக்காக காத்திருக்கின்றேன். என்னை இப்படி அவமானப்படுத்தாதீர்கள், ஏற்கவே ஒருமுறை உங்களுக்காக 2 மணிநேரம் காத்திருந்தும் நீங்கள் வரவில்லை. தயவு செய்து வீட்டுக்குள் வாருங்கள். என்னை சந்திக்க விருப்பமில்லாவிட்டாலும் ஒரு கப் காப்பியாவது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.

    எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கின்றோம். நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் உள்ளே வந்து தங்களின் கோரிக்கைகைகளை எடுத்துரைத்தனர். எனவே அவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

    • எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர்.
    • நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை இரண்டு நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்திப்புக்கு மம்தா அழைத்திருந்தார்.

    ஆனால் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் 2 மணி நேரமாக மம்தா காலை இருக்கைகளுக்கு முன் காத்துக்கிடக்க நேர்ந்தது. இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் மம்தா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    இந்நிலையில்சுவஸ்திய பவன் முன் போராடும் மருத்துவர்களைச் சந்திக்க மம்தா நேரிலேயே சென்றுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் முன் உரையாற்றிய மம்தா, நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல. எனது பதவி பெரிதல்ல. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் இங்கு போராடிக்கொண்டிருந்தீர்கள். இதனால் நேற்று இரவு நான் தூங்கவேயில்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக தான் கலைப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையைத் தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி என்று மம்தா தெரிவித்திருந்தார். மம்தா அங்கிருந்து சென்ற பின்னர் ஊடகத்திடம் பேசிய பேசிய மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர். 

     

    • மம்தா வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
    • மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சகத்தின் முன் போராடி வரும் மருத்துவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி பேசுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பேசுவார்த்தயை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மருத்த மம்தா, யாரும் வராததால் 2 மணி நேரம் காலி இருக்கைகளுக்கு மத்தியில் மம்தா காத்துக்கிடந்தார். மேலும், இந்த விவகாரத்தால் தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்த மம்தா போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் நீதியை விரும்பவில்லை தனது நாற்காலியையே விரும்புகின்றனர் என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

     

    இந்நிலையில் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார். 'மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். பொதுவெளியில் அவரை புறக்கணிப்பேன். மம்தா உள்துறை அமைச்சர் பொறுப்பையும் அதே சமயம் சுகாதர அமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்துள்ளது இந்த நேரத்தில் நகை முரணாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லேடி மாக்பெத், ஹூக்லி நீரை கையில் வைத்திருந்தும் தனது கரை படிந்த கரங்களை கழுவ முடியாமல் விழிக்கிறார். மாநிலத்தின் முதல்வர் பாதுகாப்பதற்குப் பதிலாகப் போராடுகிறார். நகரங்களிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் என அனைத்து இடங்களிலும் வன்முறை தான் மலிந்துள்ளது என்று ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.

    மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மாக்பெத் என்ற படைத் தலைவன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு மன்னரைக் கொலை செய்து அரியணையைக் கைப்பற்றுவான். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வாலும், தனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தாலும் மேலும் பலரை கொன்று குவிப்பான். இதனால் நாட்டு மக்களிடையே கலவரம் வெடித்து உள்நாட்டு போர் உருவாகும்.

    தற்போது மாக்பெத்தின் சூழலில் மம்தா உள்ளதாக ஆளுநர் விமர்சித்துள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல்வாதி போல் பேசி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
    • மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    ஊட்டி:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.

    ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.

    27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • டாக்டர்கள் போராட்டத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • டாக்டர்கள் பாதுகாப்புக்கான பரிந்துரைகளை பெற குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    டாக்டர்கள் போராட்டத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை மந்திரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மருத்துவ சங்கங்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பெறவும் பரிந்துரை குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

    அந்தக் குழுவிடம் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உள்பட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த விவகாரத்தில் இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.
    • நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம்.

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அசோகன் கூறுகையில், " இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இனி பதில் சொல்லும் அரசியல் விருப்பம் அவர்களுக்கு இருக்கும்.

    ஏனென்றால் நாம் கேட்டது அவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவோம்.

    அவரது தலையீட்டிற்கான நேரம் கனிந்துள்ளது. நிச்சயமாக, அது (பிரதமர் மோடி தனது ஆகஸ்ட் 15 உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டது) அவர் அக்கறையுடன் இருப்பதைக் காட்டும் ஒரு அம்சமாகும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும்." என்றார்.

    • கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    கோவை:

    மேற்கு வங்க மாநிலத்தில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 17-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு மற்றும் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதில் அங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் டீன் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலையில் நேர்மையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவரிடம் வடமாநில வாலிபர் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவத்தை குறிப்பிட்டு, மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்களின் பேராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயாளிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

    • பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
    • சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் பிணமாக கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

    பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சமூகம் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

    இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும். விருப்ப அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது.

    வழக்கமான புறநோயாளிகள் பிரிவு மூடப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. இப்போராட்டத்தில் அகில இந்திய மருத்துவ மாணவர் சங்கம், உறையிட டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள் ளிட்ட மருத்துவ சங்கங்களும் இணைந்துள்ளன.

    இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தப்படி நாடு முழுவதும் இன்று டாக்டர்களின் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்டன.

    பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    மேற்கு வங்காளத்தில் டாக்டர்களின் போராட்டம் தீவிரமாக நடந்தது. கொல்கத்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்ட னர். இதேபோல் டெல்லி, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் நடந்தது.

    தமிழ்நாட்டில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். டாக்டர்கள் இல்லாததால் புறநோயாளிகள் பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம்போல் இயங்கின.

    இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் 5 முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை வருமாறு:-

    1. ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரியில் 36 மணிநேர பணி மற்றும் ஓய்வெடுக்க பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் இருந்துள்ளது. எனவே உறைவிட மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.

    2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    3. பெண் டாக்டர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்.ஜி. கர் ஆஸ்பத்திரியை சூறையாடியவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

    4. விமான நிலையங்களில் இருப்பது போல் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளை கட்டாய பாதுகாப்பு உரிமைகளுடன் பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம்.

    5. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த 5 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாக்டர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தி சூறையாடிய சம்பவத்தில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
    • நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

    அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் புடுபட்டு வருகின்றனர்.

    இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது எனவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இதேபோல், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

    ஈரோட்டில் 400 மருத்துவமனைகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டமருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ச் அணிந்து, பதாகைகளை ஏந்தி வந்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    ×