என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drones Ban"

    • நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.

    நாக்பூர்:

    மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 54 பேரை கைது செய்துள்ளனர். கலவரத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக மாநில உள்துறை இணை மந்திரி யோகேஷ் கதம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கோட்வாலி, கணேஷ்பேத், தேசில், லகட்கஞ்ச், பச்பாவோலி, சாந்த் நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும் பதற்றமான பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல அதிவிரைவு படை, கலவர கட்டுப்பாட்டு பிரிவு படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். இந்த பகுதியை டிரோன்கள் பறக்கவிட தடை செய்யப்பட்ட மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு டிரோன்களை பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வன்முறையை தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகளை அகற்றுவதற்காக சத்ரபதி சம்பாஜி நகரில் 24 மணி நேரமும் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் 80-க்கும் மேற்பட்ட நபர்கள் வலைதளத்தில் மோசமான பதிவுகளை இடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இனிமேல் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் இடுபவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்வோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் நாளை செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்.
    • நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் வருகிறார்.


    டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்லும் அவர், உள்ள ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார்.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார்.

    தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.

    29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளம் வருகிறார். அங்கிருந்து திருவாரூர் செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சி விமான நிலையம் வந்து, மீண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் வரவழை க்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவர்கள் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், ஊட்டி ராஜ்பவன் மாளிகை, திட்டுக்கல்-ராஜ்பவன் மாளிகை சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, குன்னூர் வெலிங்டன் ராணுவ வைக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மேலும் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை, ரோந்து பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளிலும் ரோந்து, கண்காணிப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வந்திறங்க உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுழற்றி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அங்கு ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்தது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று முதல் 6 நாட்களுக்கு நீலகிரியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஜனாதிபதி வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா தலைமையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் ஜனாதிபதி வருகையின் போது, காலநிலை மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் தரையிறங்க மசினகுடியில் உள்ள ஹெலிபேடை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    • அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வர உள்ளார்.
    • ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.
    • டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரில் மத்திய சிறை உள்ளது. இதன் அருகே மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இவற்றுக்கு பின்னால் பெரிய சுவர்களை கொண்ட பெண்கள் சிறையும் உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று இரவு ஒரு டிரோன் 2 முறை பறந்து சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட பெண்கள் சிறைச்சாலையின் அலுவலக கட்டிடத்திற்கு மேலே 25 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் பறந்துள்ளது.

    முதலில் சிறை ஊழியர்கள் இதனை சாதாரணமாகத்தான் கருதினர். ஆனால், 2 முறை அந்த கட்டிடத்தை சுற்றி வந்த டிரோன், சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்து விட்டு மறைந்தது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சிறை ஊழியர்கள், கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மற்றும் விழாக்களின்போது டிரோன் பறக்க விட்டு படம் எடுப்பது வழக்கம்.

    பெண்கள் சிறைச்சாலையின் மேலே டிரோன் பறந்த நாளில் அந்த பகுதியில் திருமணமோ வேறு எந்த விழாவோ நடைபெறவில்லை. எனவே டிரோன் பறந்தது ஏன்? அதனை பறக்க விட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×