என் மலர்
நீங்கள் தேடியது "Erode East By Poll"
- திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
- திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.
பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.
அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.
இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.
இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.
4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.
- இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணி செய்யும் வகையில் தேர்தல் பணிக்குழுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்து உள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 14 நிர்வாகிகள் இடம்பெற்று உள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணி செய்யும் வகையில் தேர்தல் பணிக்குழுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
அக்குழுவில் இடம்பெற்றுள்ள 14 நிர்வாகிகள் வருமாறு:-
முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் கனியமுதன், கருத்தியல் பரப்பு செயலாளர் சிபிசந்தர், மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் எஸ்.எம்.சாதிக், ஆல்ட்ரின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், நிர்வாகிகள் அரசாங்கம், அக்பர் அலி, பைசல் அகமது, அகர முதல்வன், அம்ஜத்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது.
- இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா மேலிடம் ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டால் சுமார் 8 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே கிடைக்கும் என்பது தெரியவந்தது.
மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை பாரதிய ஜனதா கைவிட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதால் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் எந்த அணிக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது. இந்த இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
ஒருவேளை இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்கும் கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அ.தி.மு.க.வை ஆதரிக்காமலும் செயல்பட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு பரீட்சார்த்த களம் அல்ல. 2024-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு" என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே நாளை நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
- ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர்.
- அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக தி.மு.க.வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சக்கர பாணி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் 31 பேர்களை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்து தி.மு.க. மேலிடம் பணியாற்றி வருகிறது.
ஈரோடு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கான வார்டுகளை பிரித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர். அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த பட்டியலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி ஓட்டு கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் முதற்கட்டமாக உள்ளூர் கட்சிக்காரர்கள்-கூட்டணி கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப ஏரியாவை பிரித்து கட்சி நிர்வாகிகளை பணியாற்ற நியமித்துள்ளனர்.
இவர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை வைத்து வீடு வீடாக வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் சரி பார்த்து வருகிறார்கள்.
யாரும் வீடு மாறி இருக்கிறார்களா? அல்லது அதே முகவரியில் வசிக்கிறார்களா? என்பதை உறுதிபடுத்தி வருகின்றனர். இதை வைத்துதான் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளுக்கு எவ்வளவு ஓட்டு என்று கணிக்கப்படும்.
இந்த பணிகளை வேகப்படுத்துவதற்காக மேலும் பல அமைச்சர்கள் ஈரோடு தொகுதிக்கு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஈரோடு தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று தலைமையில் இருந்து உத்தரவு வந்ததால் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் அமைச்சர்கள் சொல்லும் கட்டளையை நிறைவேற்றும் செயல் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களுடன் அவரது ஆதரவாளர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இதேபோல் கூட்டணி கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இதனால் லாட்ஜ், அனைத்தும் நிரம்பி விட்டது. அங்கு இடம் கிடைக்காதவர்கள் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தனி வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.
ஈரோட்டில் இடம் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள பவானிக்கு சென்று தங்கி அங்கிருந்து ஈரோட்டுக்கு வந்து செல்கின்றனர்.
- முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
- முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தேர்தல் மன்னன் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (65) என்பவர் 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் மேட்டூர் எனக்கு சொந்த ஊர் ஆகும். டயர் பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர். பின்னர் நான் தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை மாலை நடக்கிறது.
- கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற தி.மு.க. சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த 1 வாரமாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க.வினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை (1-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார். மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்கிறார். எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், 3-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்வது குறித்தும், தலைவர்கள் பிரசாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.
முடிவில் மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறுகிறார்.
- இதுவரை எம்.எல்.ஏ, எம். பி., வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன்.
- தற்போது 41-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஏற்கனவே 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 4-வதாக கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகமது (63) என்பவர் செருப்பை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது அவர் கூறும் போது,
நான் இதுவரை எம்.எல்.ஏ, எம். பி., வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன். தற்போது 41-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன்.
மக்களுக்காக நாயாக உழைத்து அவர்கள் கால்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை உணர்த்துவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன். மக்கள் உண்மையிலேயே தங்களுக்காக யார் உழைப்பார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது என்றார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சென்னை அட்சினாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஜவுளி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காரில் கொண்டு வந்தார். அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, 4 நிலை கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கப்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருட்களை கொண்டு சென்றாலும் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுவரை 9 பேரிடம் ரூ.9.43 லட்சம் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் உரிய ஆவணங்களை காண்பித்து மேல்முறையீட்டு குழுவில் முறையிட்டு சிலர் உரிய ஆவணங்களை வழங்கி வருகின்றனர்.
இதன்படி மேல்முறையீட்டு குழு பரிந்துரைப்படி சில நாட்களுக்கு முன் கரூரை சேர்ந்த பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவீன் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.34 லட்சம் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் அத்தொகையை அவரிடம் திரும்ப வழங்கினர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை அட்சினாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஜவுளி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காரில் கொண்டு வந்தார். அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதனால் அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். அவரது உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட கருவூலத்தில் அத்தொகை ஒப்படைக்கப்பட்டது.
- அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு (வயது 65) 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார்.
* 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராகவும், 1995-ம் ஆண்டு நகர செயலாளராகவும், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் இருந்தார்.
* மீண்டும் 2000-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் ஆனார். 2010-ம் ஆண்டு முதல் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
* அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
* கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடவில்லை.
இவர் ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், கலையரசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்புழக்கம் என்று பா.ஜனதா ஓலமிடுகிறது.
- அண்ணாமலையோ ஏதோ ரகசியத்தை கண்டுபிடித்து விட்டதை போல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சவால் விடுகிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகள் இல்லை. எனவே இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்புழக்கம் என்று பா.ஜனதா ஓலமிடுகிறது. அண்ணாமலையோ ஏதோ ரகசியத்தை கண்டுபிடித்து விட்டதை போல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சவால் விடுகிறார்.
அடுத்தவர் மீது குற்றம் காட்டுவதற்கு முன்பு தான் செய்த குற்றங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கோவாவில் என்ன நடந்தது? வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தது. மகாராஷ்டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எப்படி வீழ்த்தினீர்கள். அவை எல்லாமே பணத்தின் மூலமாகத் தானே நடத்தப்பட்டது.
ஒரு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று விவாதித்து இருப்பார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? முதலில் மகாராஷ்டிராவிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் என்ன நடந்தது என்பதற்கு பதில் சொல்லி விட்டு ஈரோட்டுக்கு வரட்டும்.
அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவுக்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா? ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்க அவருக்கு தெரியாதா? தேர்தலை நேரில் சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதை பற்றியும் பேச அருகதை இல்லை.
பிரதமர் மோடியை பற்றி ஆதாரங்களுடன் ஒரு வீடியோ ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதற்கு இன்னும் மோடியோ, பா.ஜனதாவோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள். புகார் கூறப்பட்டு இருப்பது பிரதமரை பற்றி. எனவே மத்திய அரசோ, மோடியோ இதற்கு பதில் சொல்ல வேண்டியது அவர்களது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல.
- 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எப்படி வரும் என்று நேற்றைய தினம் வெளியான பொருளாதார சர்வே ஆவணம் ஒரு அளவீடாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும்.
இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.
ஐ.எம்.எப். கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டுக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். நகர்ப்புற வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் கோவிட் காலத்தின் பாதிப்பை இந்தியா தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக ஆளுங்கட்சியின் பண பலம், அரசியல் பலம், அரசு எந்திரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள், தெளிவுபடுத்துகிறோம்.
மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். தமிழக அரசு நடத்தியது கருத்து கேட்பு கூட்டமா அல்லது மாவட்ட செயலாளர்களில் யார் அதிகம் சத்தம் எழுப்புகிறார்கள் என்பதை காட்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டமா என்று தெரியவில்லை.
இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், என்.ஜி.ஓ.க்களும் சிலை வைக்க வேண்டாம் என்றே கூறியிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவாலய பணத்தில் எந்த இடத்திலும் பேனா சிலையை வைக்க ஜனநாயகத்தில் இடம் உள்ளது. ஆனால் பொது இடம் என்று வரும்போது மக்களின் கருத்தை மதிக்க வேண்டும்.
2022 ஆகஸ்டு மாதம் இந்தியா டுடே நடத்திய ஸ்டேட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு 60 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே பத்திரிகை ஜனவரி 26 அன்று நடத்திய கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினின் இமேஜ் 44 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் 16 சதவீதம் எந்த முதல்வரும் சரிவை சந்திக்கவில்லை.
அவர்களின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, வருகிற 2024-ல் கணக்கெடுத்தால் நிச்சயமாக செல்வாக்கு 20 சதவீதத்திற்கும் கீழ் வந்துவிடும். தி.மு.க. தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது.
பேனா சிலை விவகாரத்தில் தமிழக மீனவர்களோடு, என்.ஜி.ஓ.க்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளார். அவர் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் அறிவித்தாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து யாரிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமாக இருக்காது. எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கிறோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு, யாருக்கு என்ன பலம் என்பதை காண்பிப்பது மட்டும் முக்கியமல்ல. 2 மாதத்தில் இந்த இடைத்தேர்தலை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் நாம் 2024 பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
- பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது.
- தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நெல்லை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பதை போன்று அ.தி.மு.க.வும் வேட்பாளர் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதால் ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வின் நிலைப்பாடு அறிவிப்புக்கு பின் முடிவு எடுப்பதாக சொல்லி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குறிக்கோள். அதற்காக இரவு, பகல் பாராது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபடுகிறார்கள்.
மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மிகப்பெரிய அறிஞர். அவரின் நினைவாக பேனா சின்னம் வைப்பது தவறில்லை. கடுமையாக நிதி நெருக்கடியில் அரசு இருக்கும்போது தி.மு.க. கட்சியின் சார்பாக அந்த சின்னத்தை வைத்துக் கொள்ளலாம் .
கடலில் வைத்து சுற்றுச்சூழலை மாசுபடச் செய்யாமல் அறிவாலயம் உள்ளிட்ட தி.மு.க.வின் சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் பணியாற்றினால் தி.மு.க.வை வீழ்த்தலாம் என்பது என்னுடைய கருத்து. இதையே தான் ஓபி.எஸ்.சும் சொல்லி உள்ளார். ஓ.பி.எஸ். வேட்பாளர் அறிவிக்கிறாரா? என்பதை பார்த்து அவரது நிலைப்பாட்டை அறிந்து, இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவெடுக்கலாம். இன்னும் நேரம் இருக்கிறது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு சண்டையிட்டால் 2017-ல் நான் போட்டியிடும் போது நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் இருவருக்கும் இல்லை என்ற முடிவெடுத்ததை போல் கூட முடிவெடுக்கலாம்.
பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது. தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.
களத்தில் தனியாக இறங்கி நின்று காங்கிரஸ் போட்டி போட்டால் அவரது நிலை தெரியும்.
இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது.
இருவரும் இணைந்து கையொப்பம் இடவில்லை என்றால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அ.தி.மு.க. இன்று பலவீனம் அடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.
சுயநலத்தோடும் பணத்திமிரிலும் சிலர் செயல்படுவதால் தான் 5 ஆண்டுகளுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம்.
கடந்த தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம். தி.மு.க. வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். காலம் அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.