search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fact Check"

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.

    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தில் சென்ற டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
    • இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனியின் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. அதில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் டோனிக்கு பரிசு கொடுப்பது போன்று இருந்தது. இந்த வீடியோ நேற்றில் இருந்து வைரலானது.

    அந்த வீடியோவில் டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.

    இந்நிலையில் 3 மணி நேரத்தில் 3 மில்லியன் வரை இந்த கேம் டவுன்லோட் ஆனதாக தகவல் வெளியானது. கேண்டி க்ரஷ் கேம் என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான அந்த தகவலில், டோனிக்கு நன்றி தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த டுவிட்டர் கணக்கு கேண்டி கிரஷ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே, கேண்டி க்ரஷ் அந்த அளவுக்கு டவுன்லோடு ஆனதா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    எனினும், டோனியின் பெயருடன் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

    • தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
    • இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம்:

    இணையதளங்களில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் புலனம் (Whatsapp) செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.

    இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்

    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
    • சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.

    கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் சித்தராமையா மைசூருவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் திருவிழாவில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 38 நொடிகள் ஓடும் வீடியோவில் நடனம் ஆடும் நபர் பார்க்க சித்தராமையா போன்றே காட்சியளிக்கிறார்.

    பிரபல கன்னடா மொழி பாடலுக்கு நடனம் ஆடும் நபரை, அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். இதுபற்றிய இணைய தேடல்களில், வீடியோவில் நடனம் ஆடிய நபர் கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே வீடியோ கடந்த 2018 ஆண்டிலும் வைரல் ஆனதும் தெரியவந்துள்ளது. 

    • இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து பி.ஐ.பி எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி பயனர்களின் அக்கவுண்ட் முடக்கப்பட்டு விட்டதாக கூறும் குறுந்தகவல் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய பரிமாற்றம் நடைபெற்றதால், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    அதனை க்ளிக் செய்யும் போது திறக்கும் மற்றொரு வலைதளம் பயனர்களிடம் சில வழிமுறைகளை பின்பற்றி அக்கவுண்ட்-ஐ அன்லாக் செய்யக் கோருகிறது. இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (பி.ஐ.பி) எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது. மேலும் அந்த தகவல் போலியான ஒன்று என தெரிவித்து இருக்கிறது.

     

    "எஸ்பிஐ சார்பில் அனுப்பப்பட்டதாக கூறும் குறுந்தகவல், பயனரின் அக்கவுண்ட் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபோன்று வங்கி கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ்-களுக்கு பதில் அனுப்ப வேண்டாம். இது போன்ற குறுந்தகவல்களை உடனடியாக report.phishing@sbi.co.in முகவரியில் தெரிவிக்க வேண்டும்," என்று பிஐபி டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது போன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது உங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான வசதியை ஹேக்கர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகவும், தனிப்பட்ட விவரங்களை இழக்கவும் நேரிடும். இதுபோன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது, ஹேக்கர் உங்களது அக்கவுண்டை இயக்குவதற்கான வசதியை பெற்றிடுவர். 

    • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
    • இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

     

    இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    • மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
    • மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாட்டில் மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அதாவது குளிர்தான பெட்டி (ஃப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்று அதிக மின்சாரம் பயன்படுத்தும் மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

    தமிழ் நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற தேவைக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறது.

    • செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை.
    • இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு கொள்வதால், பெற்றோர் இவ்வாறு செய்வதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாகி வந்த நிலையில், இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு மற்றும் எழுத்தாளர் ஹாரிஸ் சுல்தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவுகளின் அடிப்படையில் தான் இந்த செய்திகள் வெளியாக துவங்கின. இது பற்றிய செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக வைரலான கல்லறை புகைப்படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் ஐதராபாத்தில் கல்லறைகளை தோண்டியெடுத்து, அதே இடத்தில் மற்றவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதை தடுக்கவே கல்லறைகளில் பூட்டு போடப்பட்டுள்ளன.

    இதுதவிர வைரல் புகைப்படத்தில் இருந்த கல்லறை நுழைவு வாயில் அருகிலேயே இருப்பதால், மற்றவர்கள் இதன் மீது ஏறுவதை தடுக்கும் வகையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் மகன் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வெளியான மற்றொரு செய்தியில் பாகிஸ்தான் நாட்டில் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் சம்பவம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கராச்சியை அடுத்த வடக்கு நசிம்பாத்தில் நபர் ஒருவர் 48 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 

    • இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.
    • இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறும் தகவல் வாட்ஸ்அப்-இல் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆண்டு விழா கொண்டாட்டங்களின் அங்கமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

    வைரல் தகவலில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் டேட்டா, பணம் அல்லது மிகமுக்கிய தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ சார்பில் வைரல் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    வாட்ஸ்அப் குறுந்தகவல் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அதில் துளியும் உண்மையில்லை. முற்றிலும் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி விளம்பர யுக்தியின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை வென்றிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 130-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதால், அரசாங்கம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பபட்டுள்ளது.

    இந்த தகவலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், பயனர் போலி இணைய முகவரியை க்ளிக் செய்யும் பட்சத்தில் பணம், தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப்-இல் நீங்கள் சேமிக்காத எண்ணில் இருந்து வரும் குறுந்தகவல்களை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை பிளாக் செய்யும் பட்சத்தில் இதுபோன்ற குறுந்தகவல்கள் இதே எண்ணில் இருந்து மீண்டும் வராது.

    • வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவலில் மத்திய அரசு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    • வைரல் குறுந்தகவல் பற்றி PIB தமிழ்நாடு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாடு பெருமளவு அதிகரித்து விட்டதை போன்றே இதன் மூலம் ஏற்படும் அபாயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகள் மக்களை ஏமாற்றுவதோடு அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடவும் செய்கின்றன.

    அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில், "மத்திய அரசு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 239-க்கு இலவச ரிசார்ஜ் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இலவச ரீசார்ஜ் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், "நான் எனக்கான 28 நாட்கள் இலவச ரீசார்ஜ்-ஐ பெற்றுக் கொண்டேன், நீங்களும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜை கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 30," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என PIB தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு இவ்வாறு எந்த விதமான இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறது. 

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×