என் மலர்
நீங்கள் தேடியது "fish"
- சிவகங்கை வாரச்சந்தையில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை பஸ் நிலையப் பகுதியில் தடை செய்யப் பட்ட பாலித்தீன் பை, கப்கள் பயன்படுத்துவ தாகவும் அதே போல் உணவ கங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அதிகாரி கள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு உணவகங்களில் ரசாயன பொடிகளை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
அரண்மனை வாசல் பகுதியில் மளிகை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பாலித்தீன் பைகள், டீ கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் வாரச்சந்தை யில் ஒரு இறைச்சி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
- கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கான நீரை வழங்கி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. இந்த அணை மீன் உற்பத்தி மூலமாக, மீனவர்கள் பல ஆயிரம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. மேட்டூர் அணை மீன்களுக்கு சுவை அதிகம். கர்நாடகாவுடன் குடகுவில் உற்பத்தியாகும் காவிரி ஒகேனக்கல் வழியாக பல அற்புதமான மூலிகைகளை கடந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்த மூலிகை நிறைந்த நீரில் வளரும் மீன்கள் என்பதால் மேட்டூர் அணை மீன்களுக்கு இயல்பாகவே ருசி அதிகமாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனைப் பயன்படுத்தி மேட்டூர் மீன் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக அணையில் மீன் குஞ்சுகள் விடப்படும். இதை மீன் விதைப்பு என்பார்கள்.
ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பு 53 சதுர மைல் கொண்டது. அது மட்டுமல்ல, அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, அணையில் தேங்கும் நீரானது அடிபாலாறு தொடங்கி காவிரியில் ஒகேனக்கல் வரையிலும் தேங்கி நிற்கும்.
எனவே, கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.
காவிரி ஆறு வனப்பகுதி வழியாக பாய்ந்து வருவதால், இயற்கையாகவே அதில் மீன்களுக்கு தேவையான சத்துகள், உணவுகள் இருக்கும். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன்னர் மேட்டூர் அணையின் கரையோரங்கள், காவிரி கரையோரங்களில் கிராம மக்கள் கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு பயிர்களை பல நூறு ஏக்கருக்கு மேல் நடவு செய்திருப்பர்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உடனடியாக, பயிர்களை அறுவடை செய்துவிடுவர். அந்த அறுவடை எச்சங்கள் அணை நீரில் மூழ்கிவிடும்போது, அவை மீன்களுக்கு மிகச்சிறந்த உணவாக அமைந்து விடுகிறது.
எனவே, மேட்டூர் அணையில் மீன்கள் செழித்து வளருவதுடன், சுவையானவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலேயே சுவை மிகுந்த மீன்கள் கிடைப்பது மேட்டூர் அணையில்தான். எனவே, மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.
மீன்பிடி தொழில் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டுமல்லாது, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டம் வரை காவிரி கரையோர மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்து வருகிறது.
இந்த சுவையான மீன்கள் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் முயற்சியால் சமீபத்தில் தமிழக சட்டசபைக்கும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் அணை மீன் உணவை சுவைத்து சாப்பிட்டனர். தற்போது இந்த மீன்கள் கேரளாவுக்கும் செல்கின்றன.
மேட்டூரில் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில், கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப் படுகின்றன.
அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்துக்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளை கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாய், தந்தை மீன்களை வளர்த்து ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.
பின்னர், 4-வது நாளில் நுண் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, 1 மாதத்துக்கு விரலிகளாக வளர்க்கப்படுகின்றன. 15 முதல் 17 நாட்களில் இள மீன் குஞ்சுகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கேராளவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள், இடங்கள் இல்லாததால் மேட்டூர் அரசு மின் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, 15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்துக்கு 6 லட்சம் நுண் குஞ்சுகள், 1.52 லட்சம் இள மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டன என்றனர்.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
- 10 டன் மீன்கள் மட்டுமே வந்தது.
பல்லடம் :
மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் மீன்கள் வரத்து குறைவால், மீன்களின் விலை உயர்ந்துள்ளதாக மீன் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் மீன் கடை உரிமையாளர் கனகசெல்வம் கூறியதாவது:- கடந்த ஏப்ரல் மாதத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. டேம் மீன்கள் மட்டுமே சப்ளையாகி வருகிறது. வழக்கமாக பல்லடம் மீன் மார்க்கெட்டிற்கு 15 முதல் 20 டன் வரை மீன்கள் வரும். தற்போது 10டன் மீன்கள் மட்டுமே வந்தது. இதனாலும் மீன்கள் விலை உயர்ந்து உள்ளது. உதாரணமாக சென்ற வாரத்தில் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
250 ரூபாய்க்கு விற்ற இறால் மீன் 350 ரூபாய்க்கும், 260 ரூபாய்க்கு விற்ற நண்டு 360 ரூபாய்க்கும் விற்பனையானது. மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
- எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை மீன்வளம், மீனவர் நலத்துைறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டு மீன் உற்பத்தியை தமிழ்நாட்டில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கடல் மீன்களும் சேர்த்து ரூ.6500 கோடி அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.5000 நிவாரணம் தரக்கூடிய திட்டத்தை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்னும் அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.
எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .
தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
- மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.
சென்னை:
சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-
சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.
பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.
- கோட்டியால் நல்ல தண்ணீர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
- இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நல்ல தண்ணி ஏரி, கிராமத்தின் பெரும்பகுதி தண்ணீர் தேவையை தீர்த்து வருகிறது. ஊராட்சி சார்பில் மேல்நிலைத் நிறுத்திய தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் கால்நடைகளுக்கான தண்ணீர் தேவைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு கோட்டியால் கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்க துவங்கின. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஏரியை முழுவதும் தூர் வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக செத்து கரை ஒதுங்கி மிதக்கிறது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியிலிருந்து செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் ஏரியிலிருந்து கொத்தி சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மொட்டை மாடி தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மண்ணின் தன்மை மாறியதால், தண்ணீரில் விஷத்தன்மை ஏற்பட்டதா? அல்லது ஏதாவது விஷமிகளின் செயலா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- கோவிலுக்கு வரும் பக்தா்கள் மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவு பொருள்களை அளிப்பது வழக்கம்.
- கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.
அவினாசி :
அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தா்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுப்பொருள்களை அளிப்பது வழக்கம்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை, கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதையடுத்து, கோவில் நிா்வாகத்தினா் உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தினா். கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.
- உக்கடம் மீன் மார்க்கெட் சந்தையில் 24 மணிநேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
- வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை
கோவை,
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அசைவபிரியர்கள் மீன் உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இதற்காக உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் சந்தை உள்ளது. இங்கு மத்தி, உளி, கிழங்கா, விலா, மடவை, அயிரை, வஞ்சிரம், ஏட்டை, சங்கரா, சீலா, ஜிலேபி, கட்லா, ரோகு ஆகிய மீன் வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
எனவே உக்கடம் மீன் மார்க்கெட் சந்தையில் 24 மணிநேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீன்பிடிதடைக்காலம் அமலுக்கு வந்தது.
எனவே தூத்துக்குடி, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனவே உக்கடம் மார்க்கெட் சந்தைக்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்தது.
எனவே வியாபாரிகள் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கடல் மீன்களை வரவழைத்து விற்பனை செய்தனர். இதனால் அங்கு மீன்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1500 என்ற விலைக்கு விற்பனை ஆகி வந்தது.
இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நடுத்தரமக்கள் வேறுவழியின்றி குளத்து மீன்களை வாங்கி சென்று வந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை அள்ளிக்கொண்டு வருகின்றனர்.
அவை உடனுக்குடன் வாகனங்கள் மூலம் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, சுடச்சுட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே உக்கடம் மார்க்கெட் சந்தையில் மீன்கள் வரத்து படிப்டியாக அதிகரித்து வருகிறது.
எனவே இங்கு கடல் மீன்கள் வழக்கம் போல குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. உக்கடம் சந்தையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் மீண்டும் கூட்டம் கூட்டமாக உக்கடம் மார்க்கெட் சந்தைக்கு வந்திருந்து, அங்கு விற்பனையாகும் கடல் மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
உக்கடம் மார்க்கெட் சந்தையில் மீன்கள் விலை விவரம் (ரூபாயில்):
மத்தி-200, உளி-250, கிழங்கா-200, விலா-500, மடவை-350, அயிரை-200, வஞ்சிரம்-900, ஏட்டை-400, சங்கரா-300, ஜிலேபி-100, கட்லா-130, ரோகு-130.
- மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த்தெடுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட மீன்வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 2 எக்டேர் பரப்பளவில் புதிய பண்ணைகுட்டை அமைக்க 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மானியம் உள்ளிட்ட, மீன் வளர்க்கும் பலருக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளன.
பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பை மேம்படுத்த ஏதுவாக, மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள், மீன்கள் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 6 பயனாளி களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்
பட்டுள்ளன. மேலும், 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
- வாரச்சந்தையில் கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையை தேவகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 100-க் கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். சமீப காலமாக தரம் குறைந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி ஆேலாசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் மாணிக்கம், நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரம் குறைந்த கருவாடு, 50 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன், கருவாடு, மாம்பழங் களை நகராட்சி பணி யாளர்கள் அழித்தனர்.
மேலும் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கற்கள் ஆகியவற்றையும் அதிகாரி கள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
- பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை )கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது.
பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
- இறால் மற்றும் கெண்டை மீன்கள் கடந்த 27-ந் தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது.
- 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி உப்பனாற்று கரையில் தமிழக அரசு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நவீன மீன் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது.
இந்த விற்பனை நிலையத்திற்கு அருகே உள்ள மீன் தொட்டியில் விற்பனை போக மீதம் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள இறால் மட்டும் கெண்டை மீன்கள் கடந்த 27 தேதி மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் சிவகுமார் (வயது 47) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சீர்காழிஅருகே சட்டநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 31) ஈசானிய தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 56) ஆகிய இருவரும் மீன்களை திருடியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.