என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GK Vasan"

    • நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
    • குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து கொலைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல் துறையினரின் பணியை முறைப்படுத்தி, போதைப்பொருட்களை ஒழித்து, மாணவர்கள், இளம் சமுதாயத்தினர், மகளிர், முதியோர் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • 2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
    • லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டாகவே இந்த பட்ஜெட்டும் அமைந்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடியும், கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு 2,020 கோடியும், 6,100 கி.மீ நீள சாலைக்கு 2,200 கோடியும், 1 லட்சம் வீடுகள் கட்ட 3,500 கோடியும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 6,668 கோடியும் என பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியானது கடந்த ஆண்டுகளில் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது போல அமைந்து நிறைவேற்ற முடியாத திட்டங்களாக, அறிவிப்புகளாக மட்டுமே அமையும். ஏழை, எளிய மக்களின் நிலம், மனை, பத்திரம், பட்டா சம்பந்தமாக அவர்களுக்கு உரியதை உறுதி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லை.

    குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அம்சங்கள் இடம் பெறவில்லை. மிக முக்கியமாக போதைப்பொருட்களை ஒழிக்க, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கை கடுமையாக்க முக்கிய அம்சங்கள் இடம் பெறாத பட்ஜெட் இந்த பட்ஜெட்.

    குறிப்பாக நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

    எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் டெல்டா மாவட்டமான நாகை மாவட்டப் பகுதியில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா குறுவை சாகுபடியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பல நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது.

    நெல்கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததால், நேற்று பெய்த மழையில் நனைந்து முற்றிலும் சேதமுற்றன.

    நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
    • கொரோனா தாக்கத்தை விட தமிழக அரசின் இது போன்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் த.மா.கா. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. கொரோனா தாக்கத்தை விட தமிழக அரசின் இது போன்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் அடுத்த தெருவுக்குப் போகும் வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் வாங்குவது நியாயம் அல்ல. காவல்துறை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

    அபராத தொகை செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை.
    • நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகமெங்கும் ஏழை, எளிய பொதுமக்கள் தங்களுடைய நோய்களுக்கான மருத்துவத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் மேற்கொள்கிறார்கள்.

    நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு ஏழை, எளிய மக்கள் பெரிதும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் இவ்வகை நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களும், மருந்து மாத்திரைகளும் விலை அதிகம். பொருளாதார ரீதியாக சிரமப்படும் ஏழை, எளிய மக்களால் அவற்றை வாங்க இயலாது.

    இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளை நாடும் இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பல்வேறு மருந்துகள் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் நீங்கள் வேண்டுமென்றால் வெளியில் வாங்கிகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

    அவ்வகை மருந்தின் விலை தனியார் மருந்தகங்களில் மிக அதிகமாக இருக்கிறது. அவற்றை பொதுமக்களால் வாங்க இயலாமல் நோயுடன் போராடும் அவல நிலைதான் ஏற்படுகிறது. இலவசமாக மருத்துவம் பார்த்துகொள்ள வாய்ப்பிருந்தும் அதனால் பயனில்லாமல் போவது கொடுமையிலும், கொடுமை.

    விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும். ஆனால் ஒருசில மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். இருந்த பொழுதிலும் அரசு மருத்துவனைகளின் நிர்வாகிகள் அலட்சியமாக இருப்பது, மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும், தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு, வழிவகை செய்ய வேண்டும். மக்கள் உடல் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையாக தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். ஆகவே மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான மருத்துவத்தை முழமையாக அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கனமழையால் அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள்.
    • குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, தொடர் கனமழையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடவும், இயல்பு நிலை திரும்பும் வரை பாதுகாக்கவும், 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத்தெரிகிறது.

    கனமழையால் அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகனமழையானால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்படுவதோடு, அதிக அளவிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே இயல்பு நிலை திரும்பும் வரை பொதுமக்களைப் பாதுகாக்க, தமிழக அரசும் அது சார்ந்த பல்வேறு துறைகளும் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் சிரமமில்லா, பாதுகாப்பான வாழ்க்கைப் பயணத்திற்கு துணை நிற்க மழைக்காலம் முடியும் வரை 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட கால எண்ணம் நிறைவேறும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.
    • ராஜராஜ சோழனுக்கு 1,037 வது சதய விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட கால எண்ணம் நிறைவேறும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.

    தற்போது இரண்டு நாட்களுக்கு, ராஜராஜ சோழனுக்கு 1,037 வது சதய விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாளான சதய விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.
    • தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெரிய ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டியார்-சரோஜம்மாள் மகன் எஸ்.சதீஷ்குமார், இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் நாயக்கர்- பரிமளா மகள் எஸ்.ஹேமலதா ஆகியோரது திருமணம் இன்று காலை பெத்திகுப்பம் கேட் ஜே.எப்.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. பெரிய ஓபுளாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவருமான எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.

    பெரிய ஓபுளாபுரம் எஸ்.தமிழ்மணி, கொசவன்பேட்டை ஆர்.கே.ராஜேந்திரன், கொப்பூர் ஜி.மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:-

    தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் தலையில் பல்வேறு சுமைகளை சுமத்தி உள்ளனர். குறிப்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் ஆட்சியாளர்கள் சுமத்தி உள்ளனர்.

    மேலும், தமிழகத்தில் குண்டு வெடிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கோவை கார் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாகும். ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பால் விலை உயர்வு என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை குறைக்க வலியுறுத்தி சென்னையில் த.மா.கா சார்பில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநில நிர்வாகிகள் திருவேங்கடம், ஆத்தூர் தாஸ், வட்டார தலைவர்கள் அசோகன், என்.ஆர்.கே.தாஸ், இளைஞரணி மாவட்ட தலைவர் செந்தில் குமார், சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்ற ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாரவி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாத், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரமேஷ், ஆரணி பேரூர் தி.மு.க. செயலாளர் பி.முத்து மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • நியமன மாநிலங்களவை உறுப்பினரான, மிகவும் பிரபலமான இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதால் உலகத் தமிழர்களும், இசைப்பிரியர்களும், கலைத் துறையினரும் பெருமை அடைகிறார்கள்.
    • பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் உமையாள்புரம் சிவராமனும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. பிரதமரிடம் பட்டம் பெற்ற மாணவர்கள் பெருமைக்குரியவர்கள். குறிப்பாக பிரதமர் இசைத்துறையில் சிறந்து விளங்கும் இளையராஜாவுக்கும், கர்நாடக இசையில் சாதனை செய்த மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.

    நியமன மாநிலங்களவை உறுப்பினரான, மிகவும் பிரபலமான இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதால் உலகத் தமிழர்களும், இசைப்பிரியர்களும், கலைத் துறையினரும் பெருமை அடைகிறார்கள். பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் உமையாள்புரம் சிவராமனும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர். இவர்கள் மென்மேலும் பல்வேறு விருதுகள் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும்.
    • மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உயிரிழந்த த.மா.க நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். அதனைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கீடு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது 19-ந்தேதி முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தற்போது வந்துள்ள அறிவிப்பு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் மட்டுமின்றி வாழை, தென்னை, மானாவாரி பயிர்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.

    தற்போது குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் ரேசன்கார்டுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். சோகத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசு ஆறுதலான நிவாரணம் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிங்கார சென்னையில் மக்கள் நடமாட முடியாதபடி சாலைகள் மரண பள்ளங்களாக மாறி உள்ளன.
    • டெல்டா பகுதியில் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் விவசாயிகளுக்கு 11 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்க அரசுக்கு மனம் இல்லாதது வேதனை அளிக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று மும்முனை தாக்குதலை மக்கள் மீது ஏவி விட்டு உள்ளது.

    ஏற்கனவே கொரோனாவால் நிலைகுலைந்த மக்கள் மீது அரசின் இந்த நடவடிக்கை பேரிடியாக விழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சுமை மீது சுமையை ஏற்றி வருகிறது. இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    சிங்கார சென்னையில் மக்கள் நடமாட முடியாதபடி சாலைகள் மரண பள்ளங்களாக மாறி உள்ளன.

    டெல்டா பகுதியில் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் விவசாயிகளுக்கு 11 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்க அரசுக்கு மனம் இல்லாதது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சக்தி வடிவேல், துணைத் தலைவர்கள் விடியல் சேகர், ஜவகர் பாபு, ராஜன் எம்.பி. நாதன், திருவேங்கடம், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பி.ஜீ.சாக்கோ, அருண்குமார், பாலா, ரவிச்சந்திரன், சத்ய நாராயணன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என். அசோகன் மற்றும் ராணி, சைதை நாகராஜன், வினோபா, ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, ஆர்.கே.நகர் செல்வகுமார், வி.எம்.அரவணன், வளசை உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலாச்சாரத்தை பேணிக்காப்பது நமது கடமை.
    • நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் உறவை பிரதமர் மெருகேற்றி உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமாகா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


    வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

    ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது.

    மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது. இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×