search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government job"

    • முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.
    • கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், மனு பாக்கர் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கம் வென்ற 22 வயதான சரப்ஜோத் சிங் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 

    நாடு திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரப்ஜோத் சிங்குக்கு அரியானா மாநில அரசு விளையாட்டு துறையில் துணை இயக்குனர் பதவி கொடுக்க முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க சரப்ஜோத் சிங் மறுத்து விட்டார்.

    இது குறித்து அவர் கூறுகையில், 'வேலை என்பது நல்லது தான். ஆனால் அதனை இப்போது நான் செய்ய மாட்டேன். முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட விரும்புகிறேன். நான் ஏற்கனவே எடுத்த சில முடிவுகளுக்கு எதிராக செல்ல விரும்பவில்லை. எனவே என்னால் தற்போது வேலை செய்ய முடியாது' என்றார்.

    • கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது
    • கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது

    கேரள சமூக ஆர்வலர் கோவிந்தன் நம்பூதிரி கேரளாவில் 8 ஆண்டுகளில் அரசு சார்பில் மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    தற்போது அவரது மனுவுக்கு அரசு சார்பில் அளித்த பதில் வருமாறு:-

    2016 முதல் 2024 வரையிலான 8 ஆண்டுகளில் கேரள மாநில அரசு சார்பில் ரூ.1520.69 கோடி முதலீட்டில் 5,839 பேருக்கு வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டு உள்ளது. கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (KSIDC)வழங்கிய நிதி உதவியால் கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு செய்து ஊக்குவித்துள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    தொழில் வர்த்தக இயக்குனரகம் கடந்த 22 மாதங்களில் 2,36,384 நிறுவனங்கள் மூலம் ரூ.14,922 கோடி முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கோவிந்தன் நம்பூதிரி கூறியதாவது:-

    கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. எனவே கேரள மாநில அரசு முன் முயற்சி நடவடிக்கை எடுத்து உடனடியாக வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    • ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.

    இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.

    விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
    • உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது வடுகபாளையம்புதூரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கிராம உதவியாளர் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்ட அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்தப் பிரமுகரிடம் 2 தவணைகளாக ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்து 10 மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் அவரிடம் பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.

    அவர் பணம் என்னிடம் இல்லை . திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அமைச்சர் ஒருவரிடம் கொடுத்து வேலைக்காக பேசிக்கொண்டு உள்ளார் என கூறியுள்ளார். மீண்டும், மீண்டும் பணம் கேட்கவே பணத்தைத் திருப்பித் தர முடியாது , உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் மற்றும் பணம் பெற்றவர் பேசிக் கொள்ளும் ஆடியோ பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2020-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது.
    • குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    என் தந்தை கருப்பசாமி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியில் இருக்கும் போது கடந்த 2018-ம் ஆண்டு இறந்து போனார். இந்நிலையில் வாரிசு அடிப்படையில் எனக்கு பணி வழங்க கோரி விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் 2020 ஆம் ஆண்டு அரசு தரப்பில் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து வாரிசு வேலை வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி திருமணமாகிவிட்டதால் எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட முடியாதென்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, 2020-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது. மேலும் மனுதாரரின் கணவரும் இறந்துவிட்டார். எனவே அவருக்கு வாரிசு அடிப்படையிலான பணி வழங்க வேண்டும் என வாதாடினார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர் தற்போது கணவரை இழந்து தனியாக உள்ளார். மேலும் தனது தந்தை இறப்பிற்கு பிறகு தாயையும் அவர்தான் கவனித்து வருகிறார். இவரின் குடும்பம் முழுவதும் மனுதாரரை வருமானத்தையும் நம்பி உள்ளது.

    எனவே, குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

    கொல்கத்தா :

    ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதைப்போல விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பணி வழங்குவதாக அவர் கூறினார்.

    மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

    • அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
    • அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை தொண்டி ரோடு பகுதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 45). இவர் சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் சிவகங்கை சேர்ந்த மருதுபாண்டி, முத்துப்பாண்டி, முத்து உமையாள் ஆகிய 5 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

    அதன் பின்னர் அவர்கள் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் கொடுத்தாராம். அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த அலுவலகத்தில் பணிக்கு சேர சென்ற போது அந்த உத்தரவு போலியானது என்று தெரிந்ததாம்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராஜேஸ்வரி மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தி ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷா புரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அபர்னா ஸ்ரீ (வயது34). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருங்குடியை சேர்ந்த அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா (50), அவரது மனைவி நிலையூர் சத்துணவு மைய பொறுப்பாளர் கலைச்செல்வி (43) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொதுப்பணித்துறையில் வாங்கி தராமல் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ராஜா,கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
    • தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு திருநங்கையர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுப்பணி என்றால் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் இருக்கும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கையர் சமுதாயத்தில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திருநங்கை ஸ்ருதி கூறியதாவது:-

    தலையாரிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வந்துள்ளேன். இது எங்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

    நான் மேன்மேலும் வளர்ந்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்வேன். திருநங்கைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு வேலை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் வினோத்பாபு பேட்டியளித்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிரா மத்தை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது34). இவரது தலைமையிலான மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வினோத்பாபு பெற்று சாதனை படைத்தார். தமிழகம் திரும்பிய கேப்டன் வினோத்பாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிலையில் சொந்த ஊர் வந்த வினோத்பாபு நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்றுத்திறனாளி இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டேன். அப்போது பயண செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். இதுபற்றி அறிந்த பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உடனடியாக நிதி உதவி செய்தார்.

    அதன் பின்னர் பாகிஸ்தா னில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது. உலக கோப்பையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

    அப்போது 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் எனக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். 2018-ல் சந்தித்து பேசிய நிகழ்வினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம், மு.க.ஸ்டாலின் ஞாபகப்படுத்தினார்.

    இதனையடுத்து 2 வாரத்தில் தங்களுக்கு அரசு வேலை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து லண்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளேன்.

    கீழச்செல்வனூர் கிரா மத்தில் நான் பயிற்சி மேற்கொள்ள உரிய மைதானம், உபகரணங்கள் இல்லை. எனவே பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு சென்று வருகிறேன். தற்போது வீட்டில் போதுமான இடவசதி இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே சொந்த கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள மைதானத்தை அமைத்து உபகரணங்கள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள்.
    • அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள்.

    சென்னை :

    தமிழகத்தில் இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசு வேலைவாய்ப்புக்காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள், 268 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம்; 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம்; 31 முதல் 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம்; 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கராபுரத்தில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா நடைபெற்றது.
    • பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் சீனிவாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் டாக்டர் பார்த்திபன், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் மாவட்ட சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து மாநில பொது செயலாளர் சந்திரகுமார், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தொகுப்பூதியம், தற்காலிக, நீண்டகால ஒப்பந்தம், சிறப்பு கால முறை ஊதியம் ஆகிய அடிப்ப டையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலி யர்கள், ஊர்புற நூலகர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போன்ற ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து தர முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள். இதில் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×