என் மலர்
நீங்கள் தேடியது "Guinness record"
- விஸ்பி கரடி இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அழைக்கப்படுகிறார்.
- விஸ்பி கரடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 10 முறை இடம்பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஸ்பி கரடி ஒரு இந்திய தற்காப்புக் கலை நிபுணர், பயிற்சியாளர் மற்றும் சாதனையாளர் ஆவார். அவர் குடோ (Kudo) என்ற ஜப்பானிய தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.
அவரது உடல் வலிமை மற்றும் சாகசங்களால் "இந்தியாவின் ஸ்டீல் மேன்" என்று அழைக்கப்படுகிறார். விஸ்பி கரடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 10 முறை இடம்பெற்றுள்ளார். அவரது சாதனைகள் பெரும்பாலும் உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக, உடலைப் பயன்படுத்தி இரும்பு கம்பிகளை வளைத்தல், செங்கற்களை உடைத்தல், கைகளால் கடினமான பொருட்களை உடைப்பது போன்றவை அவரது சாகசங்களில் அடங்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். அதன்படி குஜராத்தின் சூரத்தில் ஹெர்குலஸ் தூண்களை நீண்ட நேரம் தாங்கி பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். விஸ்பி 2 நிமிடங்கள் 10.75 வினாடிகள் தூண்களைப் பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த தூண் 123 அங்குல உயரமும் 20.5 அங்குல விட்டமும் 166.7 கிலோ மற்றும் 168.9 கிலோ எடை கொண்டவை ஆகும்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- சேலம் ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
ஏற்காடு:
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ்ராஜ் (வயது 36).
ஆசிரியர்
இவர் ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சேலம் ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்க ளாக ஏற்காடு அரசு மருத்துவர்கள் தாம்சன் மற்றும் பிரியதர்சினி ஆகியோரும் நேரம் காப்பாளர்களாக தனியார் பள்ளி விளையாட்டு பயிற்சி யாளர்கள் பாண்டியன் மற்றும் ஜெயக்குமாரும் இருந்தனர்.
கின்னஸ் சாதனை
ஏற்கனவே 2017-ம் ஆண்டு நாக்பூரை சேர்ந்த தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் தனது கழுத்தில் டை காட்டியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சதீஷ்ராஜ் 11.55 வினாடிகளில் தனது கழுத்தில் டை கட்டி முடித்து தீபக் சர்மாவின் கின்னஸ் சாதனையை முறியடித்தார்.
பயிற்சி
இந்த சாதனை குறித்து சதீஷ் ராஜ் கூறுகையில், எனது மகன் பள்ளிக்கு செல்லும் போது அவருக்கு நான் தான் தினமும் டை கட்டிவிடுவேன். அப்போது அவருக்கு மிக வேகமாக டை கட்டிவிடுவதை கண்ட எனது மனைவி நீங்கள் வேகமாக டை கட்டுகிறீர்கள். இதையே ஒரு சாதனையாக செய்யலாம் என்று என்னிடம் கூறினார். அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வேகமாக டை கட்டும் பயிற்சியை மேற்கொண்டேன்.
இந்த பயிற்சியின் மூலம் தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் டை கட்டிய கின்னஸ் சாதனையை முறி யடித்து, 11.55 நொடிகளில் டை கட்டியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது மனைவி கூறிய அந்த வார்த்தை தான், இந்த சாதனைக்கு காரணம் என்றார்.
- கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளார்.
- உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.
வாஷிங்டன் :
உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்தார்.
அதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க தொடங்கினார் எலான் மஸ்க்.
அதோடு தனது முழு கவனத்தையும் டுவிட்டர் மீது திருப்பியதாலும், 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உள்பட டுவிட்டர் நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைகொண்டு வந்ததால் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்ததாலும் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தநிலையில், தற்போது அது 137 பில்லியன் டாலராக (சுமார் ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை (சுமார் ரூ.15 லட்சம் கோடி) அவர் இழந்துள்ளார்.
உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.
- கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது.
- ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர்.
சென்னை:
ஜனவரியில் சென்னை ஹூப்பரில் இருந்து புறப்பட்ட மூன்று மாணவிகள் மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா (14) லண்டனில் உள்ள கின்னஸ் தலைமையகத்தை அடைந்தனர். இவர்களின் இலக்கு ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனைபடைப்பதாகும்.
சாதனை படைக்க களமிறங்கும் முன்பு வரை மூன்று மாணவிகளும் ஒருவித பயத்துடனே காணப்பட்டனர், எனினும் தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை எண்ணி அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அலுவலர்கள் முன்- ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது. எனினும், இவர்கள் சவாலை மன உறுதியுடன் எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களை வழிநடத்தும் ஒரே சக்தி இதுவாகவே இருந்தது. மதிய வேளை துவங்க இருந்த சமயத்தில், அதிகாரப்பூர்வ பட்டமளிப்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் கிரேக் கிளெண்டே தலைமையில் நடைபெற்றது.
ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்திய மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா ஆகிய 3 பேரும் முதல் முயற்சியில் மொத்தம் 6 கின்னஸ் சாதனைகளை முறியடித்தனர்.
ஆனாலும், முயற்சியை கைவிடாத குழுவினர் மீண்டும் போட்டியில் பங்கேற்றனர். அப்போது, ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர். சாதனைபடைத்த மமதி, பாலசரணிதா பாலாஜி, ஜணனி ஆகிய 3 பேருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
- இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது.
- ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள்.
அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12.7 சென்டி மீட்டர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்டி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது. ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் கூறுகையில், ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.
நாங்கள் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். நாங்கள் அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்றனர். மேலும் ஜோயி பந்துகளை எடுப்பது, அணில்களை துரத்துவது, கார் சவாரி செல்வது, கால்வாயில் நீந்துவது போன்றவற்றை விரும்புவதாகவும், குளிப்பதை வெறுப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறினர்.
- 2 குழந்தைகளின் தாயான எலிசபெத், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார்.
- எலிசபெத் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவுகிறார்.
அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.
2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உண்மையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் அவர்.
- பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை.
சமீப காலமாக சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் பல்வேறு வகைகளில் தங்களது திறமைகளை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உமர்வாலா என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான குவார் அம்ரித்பீர்சிங் தனது முதுகில் 20 பவுண்ட் எடை கொண்ட பேக்கை சுமந்து கொண்டு ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 86 புஷ்-அப்களை செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.
அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குவார் அம்ரித்பீர்சிங் கூறுகையில், நான் இந்த சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை. வழக்கமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றினேன் என்றார்.
- ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது.
- ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும்.
உலகம் முழுவதும் சமீபகாலமாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் தங்களது திறமைகளால் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது. அங்கு ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது. கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி இதற்கு முன்னர் இந்த சாதனை டாமி என்ற காளையிடம் இருந்தது. அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில், ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது. இந்த காளை வளர்ப்பதற்காகவே உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது என்றார்.
Meet Romeo, the world's tallest steer at a height of 1.94 metres (6 ft 4.5 in) ✨
— Guinness World Records (@GWR) May 22, 2024
Romeo is a 6-year-old Holstein steer who lives at Welcome Home Animal Sanctuary with his human, Misty Moore. pic.twitter.com/MZqCB7fkgM
- 6.74 அடி உயரத்தில் IPHONE 15 PRO MAX-ன் மாதிரியை வடிவமைத்துள்ளார்.
- இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் ரூபேஷ் மைனி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்
உலகின் மிகப்பெரிய ஐஃபோன் மாதிரியை உருவாக்கியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ள இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் ரூபேஷ் மைனி.
"MrWhoseTheBoss" என்ற டெக் யூடியூப் சேனலை வைத்துள்ள இவர், 6.74 அடி உயரத்தில் IPHONE 15 PRO MAX-ன் மாதிரியை வடிவமைத்துள்ளார்.
இதனை உருவாக்க சுமார் ரூ.59 லட்சம் வரை செலவானதாகவும், ஓராண்டு எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மைனி, தனது நுண்ணறிவுமிக்க தொழில்நுட்ப மதிப்புரைகளுக்காகப் பெயர்பெற்றவர். இந்த லட்சிய சாதனையை படைக்க, DIYPerks-ன் மூளையாக இருந்த மேத்யூ பெர்க்ஸுடன் அருண் மைனி இணைந்தார்.
கின்னஸ் உலக சாதனை படைத்த மைனி கூறுகையில், "இது ஒரு முழு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணமாக உணர்கிறது.
இதுவரை செய்யாத ஒன்றைச் செய்ததற்காக எங்கள் அணி மற்றும் மேட் இருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
வளரும்போது, கின்னஸ் உலக சாதனைப் புத்தகங்களில் என்னை நான் இழந்துவிடுவேன், எனவே இப்போது ஒன்றை வைத்திருப்பது முற்றிலும் சர்ரியலாக உணர்கிறேன்" என்றார்.
- ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
- ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஓட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.
அவர்கள் இருவரும் சந்தித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
- சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லியைச் சேர்ந்தவர் கொனத்தலா விஜய், 2012-ம் ஆண்டு முதல் சீனாவில் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார்.
சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021-ம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலக சாதனைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.
அஷ்டவக்ராசனம், மயூராசனம் மற்றும் பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.

தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நோபல் உலக சாதனைகளிலும் சாதனை படைத்துள்ளார்.
அவரது மனைவி, கொனத்தலா ஜோதி, கர்ப்பத்தின்போது 9-வது மாதத்தில் (குழந்தை பிறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
விஜய் மற்றும் ஜோதி தம்பதியரின் 14 வயது மகள் கொனத்தலா ஜஸ்மிதா, ஒரு நிமிடத்தில் ஒரே காலில் கயிற்றை வேகமாக இழுத்து சாதனை படைத்துள்ளார்.

இவர்களது 5 வயது மகனான கொனதலா ஷங்கரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் டிராம்போலைனில் அதிக எண்ணிக்கையிலான கயிறு ஸ்கிப் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். இந்த குடும்பத்துக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.
"இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
எங்கள் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கனவு என்றனர்.